May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் கண்ட கலர் கனவு/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Kannayira’s Color Dream/ Comic Story / Tabasukumar

11.12.2023
கண்ணாயிரம் விபத்தில் காயம் அடைந்து பாளை ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில் காலை பேப்பரில் தனது வயது 90 என்று போட்டிருந்ததாலும் தனது படத்தை கலர் படமாக போடவில்லை என்றும் கோபத்தில் இருந்தார்.
இந்த சூழ்நிலையில் ராசி பலன் பக்கம் படித்தபோது மகரராசிக்குரிய பலனை கண்ணாயிரம் வாசிக்க..பயில்வான் வந்தாலும் தூக்கி வீசுவீர்கள் என்று சொல்ல பயில்வான் கோபமாகி கண்ணாயிரத்தை மிரட்டினார்.
கடையிலிருந்து வேற ஒரு பேப்பர் வாங்கிட்டு வந்து பயில்வான் ராசிபலன் படித்தபோது அதில் பக்கத்தில் யார் வந்தாலும் தூக்கி வீசுவீர்கள் என்று இருந்தது.
முதல் எடிசன் பேப்பரில் தவறாக இருப்பதை இரண்டாவது எடிசனில் திருத்திப் போட்டிருப்பதை உணர்ந்து மகிழ்ச்சி ஆனார். அதே நேரத்தில் இரண்டாவது எடிசனிலும் கண்ணாயிரம் வயது திருத்தப்படாமல் 90 என்றிருப்பதைப் பார்த்து பயில்வான் மகிழ்ச்சி அடைந்தார்.
நேராக கண்ணாயிரம் சிகிச்சை பெற்ற அவசர சிகிச்சை பிரிவுக்குச் சென்றார். கண்ணாயிரம் சேலையை போர்த்தியபடி யாரும் வாராங்களா என்று விழித்துப் பார்த்தபடி இருந்தார்.
பயில்வானை பார்த்ததும்.. என்ன பயில்வான் சார்..ராசிபலன் பிரச்சினையில் உங்கள் பெயர் இருந்தது பற்றி நிருபரிடம் விசாரித்தீர்களா என்று கேட்டார்.
அதற்கு பயில்வான்..ம்.. எங்கள் பயில்வான் சங்கத்திலிருந்து போன் பண்ணி மிரட்டி இருக்காங்க.. அதனால பயில்வான் வந்தாலும் தூக்கி வீசுவீங்க என்று இருந்ததை மாற்றி பக்கத்தில் யார் வந்தாலும் தூக்கி வீசுவீங்க என்று மாற்றி எனக்காக புதிதாக கொஞ்சம் பேப்பர் அடிச்சி விட்டுருக்காங்க.. தெரியுமா.. ஆனா உன் வயசை மட்டும் மாத்தல.. 90 என்றுதான் இருக்கு..என்றார்.
கண்ணாயிரம் கோபத்தில் என் வயசு மட்டும் ஏன் மாத்தல என்று கேட்க.. நீ போன் பண்ணி சொல்லியிருந்தா மாத்தியிருப்பாங்க என்க.. கண்ணாயிரம் சூடானார். என் வயசு மாத்திப் போட்டிருக்கற விசியம் எனக்கு பேப்பர் வந்த பிறகுதானே தெரியும். நான் எப்படி பத்திரிகை ஆபீசுக்கு போன் பண்ணமுடியும். எனக்கு நம்பர் தெரியாதே… உங்களிடம் நம்பர் இருக்கா என்று கேட்டார். பயில்வானோ அந்த நம்பர் எல்லாம் எனக்கு தெரியாதுப்பா.. பத்திரிகை நிருபர் வருவாரு அவரிடம் கேளு என்றார்.
கண்ணாயிரம்.. ஓ.. அப்படியா…வரட்டும். என் வயசை குறைச்சிப் போட்டு கொஞ்ச பேப்பர் அடிச்சிவிடச்சொல்லணும்.. என்றபடி பயில்வானை ஏறிட்டுப் பார்த்தார்.
அந்த நேரத்தில் மாலை பத்திரிகை நிருபர் குமார், புகைப்பட நிபுணர் கிருஷ்ணன் ஆகியோர் அவசர சிகிச்சை பிரிவுக்குள் வேகமாக நுழைந்தனர்.
கண்ணாயிரம் யாருங்க என்று கேட்க.. பெட்டிலிருந்த ஒருத்தர்.. அதோ சேலையால் தலையை மூடிக்கிட்டு இருக்காரே அவர்தான் கண்ணாயிரம் என்று சொல்ல நிருபரும் புகைப்படக் காரரும் கண்ணாயிரத்தை நெருங்கி.. நீங்கதான் கண்ணாயிரம் என்பவரோ என்று நிருபர் கேட்க கண்ணாயிரம் பதிலுக்கு ம்…நீங்கதான் பத்திரிகை காரர் என்பவரோ என்று கேட்க பத்திரிகை நிருபர் சற்று கோபத்துடன் என்ன விபத்தில் சிக்கியும் உங்கள் இறுமாப்பு இன்னும் அடங்கவில்லை.
என்று சொல்ல..கண்ணாயிரம் ஹ..ஹ.. என்று சிரித்தபடி அது என் உடன் பிறப்பு என்று சொன்னார்.
பத்திரிகை நிருபரும் சிரித்தபடி ஆமா..நீங்க நல்லா நகைச்சுவையா பேசுறீங்க..என்றபடி விபத்து எப்படி நடந்தது சொல்லுங்க என்றார்.
கண்ணாயிரம் உடனே முதலில் என் கேள்விக்கு பதில் சொல்லுங்க என்றவாறு பேப்பரைக் காட்டி.. இங்கே பாருங்க.. இந்த இரண்டு பேப்பரிலேயும் எனக்கு வயசு 90 என்று போட்டிருக்கு.. இது நியாயமா.. தர்மமா.. எனக்கு ஆடி பிறந்தாத்தான் ஐம்பது பிறக்குது..என்றார்.
உடனே நிருபர்.. அது காலை பத்திரிகை.. நாங்க மாலை பத்திரிகை.. நாங்க உங்க வயசை மாத்திப்போட்டுவிடுகிறோம்.. என்றார்.
அதைக்கேட்டதும் கண்ணாயிரம் கோபமாக.. என்ன.. ஏற்கனவே மாத்திப் போட்டதுதான் பிரச்சினை.. அப்படி இருக்கும் போது நீங்களும் மாத்திப் போடுவதா சொல்லுறீங்க என்று ஆவேசப்பட்டார்.
பத்திரிகை நிருபர் இது என்னடா வம்பா போச்சு என்று திணறியவர் நீங்க சொல்லுறப்படி மாத்திப் போட்டுவிடுகிறோம் என்றார். கண்ணாயிரம்..என்னங்க..மாத்திப் போட்டா எப்படிங்க சரியாகும். 90 வயசுன்னு போட்டிருக்கு.. இதை மாத்திப் போட்டா 09 என்றல்லவா வரும். அது எப்படி சரியாகும்.. எனக்கு ஆடி பிறந்தாத்தான் எனக்கு 50 வயசு பிறக்கும். என்க பத்திரிகை நிருபர் உடனே.. ஓ. நீங்க ஆடி பிறந்தீங்களா..என்று கேட்டார்.
அதைக் கேட்டதும் ஏங்க நான் ஆடி பிறந்தனா.. ஆடாம பிறந்தன்னா என்று எனக்கு எப்படி தெரியும். அப்போ எனக்கு ஒரு விவரமும் தெரியாதே.. என்ன விவரம் இல்லாம கேள்வி கேட்கீங்க..என்றார்.
பத்திரிகை நிருபர்..ஆ..என்று தலையைப் பிய்த்துக் கொண்டார். என்னங்க வயசு ஒரு பிரச்சினையா என்று நிருபர் கேட்க.. கண்ணாயிரம் உஷ்ணமானார். என்ன அப்படி சொல்லுறீங்க..நான் புதுவையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இருக்கேன். என் வயசு 39 என்று சொல்லிவச்சிருக்கேன். நீங்க 90 வயசுன்னு பேப்பரில போட்டா அதைப்பார்க்கும் வாக்காளர்கள்.. அட..கண்ணாயிரத்துக்கு 90 வயசா.. நம்மளை ஏமாத்திட்டாரே.. 90 வயசுக் காரருக்கு ஓட்டு போட்டா பொட்டுன்னு போயிடுவாரேன்னு நினைச்சி எனக்கு ஓட்டு போடாம இருந்துவிடுவாங்களே.. நான் என்ன செய்வேன் என்று கண்களை கசக்கினார்.

பத்திரிகை நிருபர் நிலைமையை புரிந்துகொண்டு சரிங்க.. 39 வயசுன்னே போட்டிருவோம்..விபத்து எப்படி நடந்துச்சுன்னு சொல்லுங்க என்றார்.
கண்ணாயிரம் உடனே.. ஏங்க காலை பேப்பரில என்படத்தை கறுப்பா போட்டுவிட்டாங்க.. நீங்க கலரில போடுவீங்களா என்று அப்பாவியாக கேட்டார்.
பத்திரிகை நிருபரும்..சரிங்க கலரில போட்டுவிடுவோம்..எப்படி விபத்து நடந்தது என்று சொல்லுங்க என்று சொல்ல கண்ணாயிரம் சேலையால் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு.. பெட்டில் சம்மதம் போட்டு அமர்ந்தபடி ..அதுங்க..வந்து சரியா இரவு 7 மணியிருக்கும் என்று சொல்ல ஆரம்பித்ததும் புகைப்பட நிபுணர் அவரை காமிராவில் படம் எடுக்க முயல.. கண்ணாயிரம்.. உஷ்..படம் எடுக்கக் கூடாது. நான் மேக்கப் போட்டுட்டு வர்றேன்.. அப்பதான் நீங்க கலர் படம் போடுவீங்க என்க.. புகைப்படக்காரர்.. ஏங்க…நீங்க.. விபத்தில் காயம் அடைந்தவர்.. மேக்கப் போடக் கூடாது.. இங்கே என்ன மாப்பிள்ளைக்காக படம் எடுக்கிறாங்க.. அமைதியா சோகமாக இருங்க என்று சொன்னார்.
கண்ணாயிரம் கேட்கவில்லை. மேக்கப் போட்டு படம் எடுக்கலைன்னா..நான் பேட்டி தரமாட்டேன் என்று அடம்பிடித்தார்.
இதைப் பார்த்த நிருபர்.. கவலைப்படாதீங்க.. உங்களுக்கு மேக்கப் போட்டுத்தான் படம் எடுப்போம்..பயப்படாதீங்க.. சொல்லுங்க..என்றவுடன் கண்ணாயிரம் சமாதானமாகி பேட்டி கொடுக்கத் தொடங்கினார்.
இதைக் கேள்விப்பட்டு சுடிதார்சுதாவும் பூங்கொடியும் உள்ளே வந்து கண்ணாயிரத்துக்கு தெரியாமல் மறைந்து நின்று கேட்டனர்.
கண்ணாயிரம் சுவாராசியமாக பேட்டியைத் தொடங்கினார்.
அன்னைக்கு இரவு 7 மணி இருக்கும்.அகத்தியர் அருவியில் குளித்துவிட்டு தயிர் சாதம் சாப்பிட்டுவிட்டு மழையில் நனைந்ததால் தனியாக பாறை பக்கத்துல மழை நீரில் குளித்தேன். பின்னர் வேட்டியை மாற்றிவிட்டு சுற்றுலா பஸ்சில் ஏறினேன். தயிர் சாதம் சாப்பிட்டதால் தூக்கம் கண்ணைக் கட்டியது. எனவே பூங்கொடியிடம் சேலை வாங்கி இருக்கைக்கு கீழே விரிச்சி படுத்தேன். தூக்கம் வந்தது. குளிர் அடிச்சது. அதனால பூங்கொடி சேலையை போர்த்தி படுத்திட்டேன்.
பஸ் புறப்பட்டுச்சி.. சுற்றுலா முடிஞ்சி புதுவைக்குப் போறோமுன்னு மகிழ்ச்சி அடைந்தேன்…ஓ..வா. அப்படின்னு.கொட்டாவி வந்துச்சு..தூங்கிட்டேன்.
அப்புறம் பாருங்க.. திடீரென்று ஒரு கனவு….கலர் கலரா பொண்ணுங்க.. சினிமாவிலே கனவு காட்சி வருமே..அதே மாதிரி.. ஜிகினா எல்லாம் பறக்குது.. தங்க கயிற்றில் கட்டப்பட்ட ஒரு ஊஞ்சல்.. கண்ணைப் பறித்தது. என்னை சுற்றி அழகு பெண்கள்.. கலகலன்னு சிரிச்சிக்கிட்டே நின்னாங்க.. அவங்க தலையிலே தங்க கிரீடம்.. அதிலே வைரம் வேறு ஜொலிக்குது. வெள்ளை டிரஸ் போட்டிருந்தாங்க.. மேலாடை.. ரொம்ப சின்னதுங்க.. பார்க்க பார்க்க அழகு .. நான் நகத்த கடிச்சிகிட்டு பாத்துக்கிட்டே இருந்தேன். திடீரென்று நான் உடுத்தியிருந்த வேட்டி மற்றும் போர்த்தியிருந்த சேலையை காணல.. எனக்கோ வெட்கம் தாங்க முடியல. அலங்கார பெண்கள் என்னை அலாக்காக தூக்கி சந்தன குளத்துக்கு கொண்டு போனாங்க. அங்கே என் மேல பன்னீரை தூவி குளிக்கவச்சாங்க.. பூக்கள் மிதந்த அந்த பொய்கையிலே என்ன நீந்த வச்சாங்க.. நான் நீந்தி குளிச்சேன்..அடடடா.. என்ன குளிர்..குளிர்..அந்த பெண்களும் பொய்கையில் திடீரென்று குதித்து என் தோளினை தழுவினார்கள். கன்னத்தை கிள்ளினார்கள்.
எனக்கு வலித்தது.ஆ.. என்று கத்தினேன்.
அவ்வளவுதான் ..கன்னத்தில் முத்தமிட்டார்கள். இது டு மச் என்றேன்.
சிரித்துக் கொண்டவர்கள் என்னை பொய்கையிலிருந்து வெளியே அழைத்து வந்தார்கள். நான் கால் சட்டை மட்டும் போட்டிருந்தேன்.வெட்கத்தில் ஒரு மரத்தின் அடியில் போய் பதுங்கினேன். அங்கும் அந்த பெண்கள் வந்துவிட்டார்கள்.
எனக்கு இளவரசன் போல் உடை கொண்டு வந்து மாட்டினார்கள். தலையில் கிரீடம் வைத்தார்கள்.கையில் ஒரு வாள் கொண்டு வந்து கொடுத்தார்கள். இது எதுக்கு என்றேன். எதிரிகளை வீழ்த்த இந்த வாளாயுதம் உதவும் என்றார்கள். என் இடுப்பில் அதை தொங்க விட்டார்கள். பின்னர் பூ ஊஞ்சலில் என்னை அமரவைத்து அங்கும் இங்கும் அசைத்தார்கள்.எனக்கு மறுபடியும் தூக்கம் வந்துவிட்டது.
அந்த பெண்கள் என் தலையில் தட்டினார்கள். நான் விழித்தேன். அப்படியே அதே ஊஞ்சலில் என்னை தூக்கினார்கள். வான் உலகத்தை நோக்கி ஊஞ்சல் பறந்தது. கவர்ச்சி பெண்களும் என் அருகில் அமர்ந்து கொண்டார்கள். நறுமணம் வீசியது. இயற்கையில் பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா..இல்லையா.. நறுமண தைலங்களை பூசுவதால் மணம் வீசுகிறதா என்று எனக்கு சந்தேகம் வந்துவிட்டது.
அவர்களிடம் கேட்டேன்..பளார் என்று அறைந்துவிட்டார்கள் என்று கண்ணாயிரம் சொல்லிவிட்டு கன்னத்தை தடவினார்.
நிருபரோ ஏங்க விபத்து எப்படி நடந்துச்சுன்னு சொல்லுங்க..கனவு எல்லாம் வேண்டாம் என்க..கண்ணாயிரமோ..பொறுங்க..வரிசையாத்தான் சொல்லமுடியும்.. இனிதான் கதை இருக்கு என்று இழுத்தார்.
பூங்கொடி மெல்ல எட்டிப்பார்த்துவிட்டு மீண்டும் மறைந்து கொண்டார்.கண்ணாயிரத்து பகீரென்றது.(தொடரும்)
-வே.தபசுகுமார்,புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.