May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் பார்த்தகவர்ச்சி படம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Eyes wide Attractive film/comedy story/ Tabasukumar

20.12.2023
சுற்றுலா பஸ் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சைப் பெற்ற கண்ணாயிரம் ஆஸ்பத்திரியில் அடித்த லூட்டி காரணமாக டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் கண்ணாயிரத்தை பிடித்த பீடை நீங்குவதற்காக தாமிரபரணி ஆற்றில் மூழ்கிவிட்டு புதுவைக்குப் போகும்படி பயில்வான் சொல்ல கண்ணாயிரம் எல்லோரிடமும் யாரும் கேட்டா நான் போயிட்டேன் என்று சொல்லுங்க என்றபடி வாடகை காரில் ஏறி மனைவி பூங்கொடியுடன் தாமிரபரணி ஆற்றை நோக்கி விரைந்தார்.
இந்த நேரத்தில் புதுவையில் காலை பத்திரிகையைப் பார்த்த ஜவுளிக்கடைக்காரர்.. புதுவையிலிருந்து சுற்றுலா சென்றவர்கள் விபத்தில் சிக்கிய செய்தியைப்படித்தார். கண்ணாயிரம் என்ன ஆனார் என்று பத்திரிகையில் தேடியபோது.. உயிர் ஊசல் லிஸ்டில் இருப்பதைப் பார்த்து.. அய்யோ என் பணம் நாற்பதாயிரம்.. என்ன ஆச்சு. உள்ளாட்சி தேர்தல் வந்தவுடன் தர்ரேன் என்றாரே.. இப்படி உயிர் ஊசல் என்று போட்டிருக்காங்களே.. நான் என்ன செய்வேன்.. உயிரோடு இருக்கும்போதே கேட்டிரணும்.. இல்லன்னா.. ஒருத்தனும் தெரியாதுன்னுருவான்.. அய்யோ.. கடனுக்கு சேலை விற்று கடனேன்னு இருக்கமுடியுமா.. முடியாது.. என்று புலம்பினார்.
கண்ணாயிரம் எந்த ஆஸ்பத்திரியில் அட்மிட் என்று பார்த்தவர்.. அடே பாளைங்கோட்டையிலா.. ரொம்ப தூரம்தான்.. போன்பண்ணுனா கண்ணாயிரம் எடுக்கமாட்டான்.. நேர போய் பாத்து மடக்கிடவேண்டியதுதான்..தேர்தல் வந்தா தர்ரேன் என்று சொல்லுற கதையெல்லாம் வேண்டாம்..பணத்தை எடு..கையிலே கொடு என்று கேட்டிடணும்..விடக்கூடாது..விடவேக் கூடாது..என்று முழங்கினார்.
இறைச்சிக்கடைக்காரருக்கு போன் போட்டார். அண்ணே..விவரம் தெரியுமா…காலையிலே பேப்பர் பாத்தியளா.. குற்றாலம் சுற்றுலா போன கண்ணாயிரம் விபத்தில் சிக்கி காயம் ..உயிர் ஊசல் என்று போட்டிருக்கு.. படம் கூட போட்டிருக்காங்க.. போயிறுவாரு போலிருக்கு.. என் பணம்..என்பணம் நாப்பதினாயிரம்..எனக்கு வேணும்..எனக்கு வேணும் என்று கத்த இறைச்சிக்கடைக்காரர்.. யோவ் கத்தாதய்யா…சுடிதார் சுதா என்ன ஆனா..என்று கேட்க..அவள் பெயர் எல்லாம் இல்லை.. சுற்றுலா பஸ் கவிழ்ந்துச்சு.. இத்தனை பேர் காயம் இத்தனை பேர் உயிர் ஊசல் என்று போட்டிருக்கு.. என் காரில் பாளையங்கோட்டை போயி ஆஸ்பத்திரியிலே பாத்துட்டு வந்திடுவோம் என்க..இறைச்சிக்கடைக்காரர்..போன் பண்ணி கேட்போம் என்றார்.
ஜவுளிக்கடைக்காரரோ வேண்டாம்..கடனைக் கேட்கத்தான் போன் போடுறோம் என்று கண்ணாயிரமோ அவன் மனைவியை எடுக்கமாட்டாங்க.. நேரே போய் கடனை கேட்கிறதுதான் முறை.. போய் திடீரென்று நின்னாத்தான் கண்ணாயிரம் பயப்படுவார்.. தாமதிக்காம கிழம்புங்க என்று அவசரப்படுத்தினார்.
இறைச்சிக்கடைக்காரரோ..ஒரு வார்த்தை போன் பண்ணி கேட்டிடுவோம் என்க.. ஜவுளிக்கடைக்காரரோ விடவில்லை. போனால் பேசினால் எதையாவது சொல்லி ஏமாத்துவார்.. வந்து தாரன் என்பார்.எங்கே வருது..அதுதான் உயிர் ஊசல் என்று போட்டிருக்கே..கண்ணாயிரம் புழைக்கிறது கஷ்டம்..நான் கொடுத்தகடனை எப்படியாவது வசூல்பண்ணியாகணும்.. செத்துகித்து போனாலும் அதுக்கு முன்னால அவரோடு மனைவிட்டயாவது பணத்தைபத்தி சொல்ல வைக்கணும்… வாங்க..சீக்கிரம் வாங்க..என்று அவசரப்படுத்தினார்.
இறைச்சிக்கடைக்காரரோ..சரி..கடையை அடைச்சிட்டு வர்ரேன்.. கிளம்புவோம் என்று ஜவுளிக் கடைக்காரரிடம் சொல்லிவிட்டு அவர் சுடிதார் சுதாவுக்கு போன் போட்டார்.
சுவிட்ச் ஆப்.. சுவிட்ச் ஆப் என்று வந்தது. பஸ் கவிழ்ந்த போது சுடிதார் சுதாபோன் சேதமடைந்ததை அவர் அறியவாய்ப்பில்லை.

சரி போய் பாத்துட்டு வந்துவிடுவோம் என்று இறைச்சிக்கடைக்காரர் நினைத்த போது ஜவுளிக்கடைக்காரர் காரில் வந்து வேகமாக அங்குவந்து நின்றார்.. என்ன புறப்பட்டாச்சா..இல்லையா.. நேரமாகுது என்று சொல்ல.. இதோ வந்துட்டேன்..என்றபடி கடையை பூட்டிவிட்டு வந்து காரில் ஏறினார்.
ம்..சீக்கிரம் போவம்..கண்ணாயிரம் உயிர் ஊசலாடுது.. பாக்கி.. வசூலாகணும் என்று ஜவுளிக்கடைக்காரர் பரபரத்தார். சரி, பாத்துப் போங்க..பதட்டம் இல்லாம வண்டியை ஓட்டுங்க.. ஒரு வேளை அவர் போயிட்டாருன்னா என்னபண்ணுவீங்க.. என்றவுடன் .. ஜவுளிக்கடைக்காரர் கோபத்தில் அபசகுனமா பேசாதீங்க.. கண்ணாயிரம் நல்லா இருக்கணும்..என் கடனை அடைக்கணும் என்றார்.
இறைச்சிக்கடைக்காரரும்..சரிப்பா. கடன் வசூலாகிவிடும். என்று சொல்ல ஜவுளிக்கடைக்காரர்..ம் அப்படித்தான்.. எதையும் பாஸ்டிவா சொல்லணும் என்றவாறு காரை வேகமாக ஓட்டினார்.
கார் பாளையங்கோட்டையை நோக்கி விரைந்தது.

இதே நேரத்தில் ஆஸ்பத்திரியிலிருந்து புதுவைக்கு காரில் புறப்பட்ட கண்ணாயிரம் வழியில் கொக்கிரக் குளத்தில் தாமிரபரணி ஆற்றை நோக்கி விரைந்தார்.
ஆற்றங்கரை வந்ததும் கண்ணாயிரம் காரை டிரைவரிடம் நிறுத்தும் படி கூற டிரைவர் ஆல்ரைட் என்றபடி காரை நிறுத்தினார்.
உடனே கண்ணாயிரம்..பக்கெட் மற்றும் துண்டுடன் காரில் இருந்து இறங்கினார். பூங்கொடி..நீயும் இறங்கு..நான் எத்தனை முறை மூழ்கணும் சொல்லு..என்றார்.
பூங்கொடியும் காரைவிட்டு இறங்கி ஒரு பத்து முறை மூழ்குங்க..அப்பதான் உங்களை பிடிச்ச பீடை நல்லா போகும் என்று சொல்ல..
கண்ணாயிரம்..ஏய்.. இரண்டுபேரையும் மூழ்கிட்டு போங்கன்னு பயில்வான் சொன்னார். நான் மூழ்கிட்டு..நீமட்டும் மூழ்கன்னா எப்படி என்று கேட்டார்.
அதற்கு பூங்கொடி..ஏங்க உங்களுக்குத்தான் பீடைஅதிகமாக இருக்கு.. எனக்கு இல்ல என்றார்.
கண்ணாயிரம் விடவில்லை. எதுக்கும் நீயும் ஒரு முறை மூழ்கிவிடு..அப்புறம் பீடை போகலைன்னு சொல்லக்கூடாது என்று சொன்னார்.
பூங்கொடியோ..நீங்க முதலில் மூழ்குங்க..நான் எண்ணுறன்..அப்புறம் பாப்போம் என்க கண்ணாயிரம் துண்டை கட்டிக்கொண்டு பக்கெட்டுடன் தாமிரபரணி ஆற்றில் இறங்கினார்.
பக்கெட்டில் தண்ணீரை நிரப்பி பூங்கொடியிடம் கொடுத்தார். பின்னர் ஆற்றில் இறங்கி ஒண்ணு இரண்டு..மூணு நாலு..ஐந்து என்று சொல்லியபடி மூழ்கி எழுந்தார்.
அப்பாட.. மூச்சு முட்டுது..போதும் என்றவரை பூங்கொடி சத்தம் போட்டார். பாதி பீடைதான் போயிருக்கும்.. இன்னும்ஐந்து முறை மூழ்கி எழுங்க என்க..கண்ணாயிரம் .ம் என்று கன்னத்தை சொறிந்தபடி மீண்டும் மூழ்கி எழுந்தார். இரண்டு முறை மூழ்கிவிட்டு எழ முயற்சிக்க. .பூங்கொடி..ம்..இன்னும்மூணு இருக்கு என்று சொல்ல கண்ணாயிரம் சலிப்புடன் மூக்கைப் பிடித்துக்கொண்டு மூழ்கினார்.
மூன்று முறை மூழ்கியபிறகு..அவர் வெளியேவரவில்லை. பூங்கொடி கோபத்தில் ஒன்..டூ.. திரி..என்று சொல்லிய பிறகும் கண்ணாயிரம் வரவில்லை.
பூங்கொடி ஆத்திரத்தில் ஆற்றில் இறங்கினார்.. கண்ணாயிரம் உடனே எழுந்து..ஏய். உன்னை ஆற்றில் இறங்க வச்சிட்டன் பாத்தியா.. நீயும் மூழ்கு என்க பூங்கொடி கண்ணாயிரம் காதை திருகியபடி..வாங்க வெளியே.. என்று இழுத்துவந்தார். சேலையெல்லாம் நனைஞ்சு போச்சு..என்றவாறு சேலையை பிழிந்தார். வாங்க..குறுக்குத்துறை முருகன் கோவிலை கும்பிட்டுவிட்டு வாங்க.. நாளைக்கு உங்களுக்கு பிறந்த நாள் என்க.. கண்ணாயிரமோ..ஆடி பிறந்தாதானே எனக்கு ஐம்பது வயசு ஆகுது என்றார்.
அதற்கு பூங்கொடி..ஏங்க..ஆதார்படி உங்களுக்கு நாளை ஐம்பது வயசு பிறக்கு.. ஜாதகப்படி ஆடி மாதம் பிறந்தா உங்களுக்கு ஐம்பது வயசாகுது சரியா என்றார்.
கண்ணாயிரம்..அப்படியா என்றவாறு தலையை ஆட்டினார். பின்னர் இருவரும் குறுக்குத்துறை முருகன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு காரில் ஏறினார்கள்.
மணி நான்காகிவிட்டது..மாலை பேப்பரைப் பாக்கணும்..பேப்பர் வாங்கணும் என்று கண்ணாயிரம் சொல்ல.. கார் ஒரு பெட்டிக்கடை முன் நின்றது.
கண்ணாயிரம் அவசரமாக இறங்கி மாலை பேப்பரை வாங்கி வேகமாக காரில் ஏறினார்.
கார் புறப்பட்டது. கண்ணாயிரம் பேப்பரை புரட்டினார்.
கண்ணாயிரம் படம் கலரில் இருந்தது. ஆ..நல்லா இருக்கு….
என்ன தலைப்பு..
விபத்து நடந்தபோது தூங்கியதால்
சொர்க்கத்தை கண்டேன்.
உயிர் தப்பிய கண்ணாயிரம் ருசிகர பேட்டி..
நெல்லை.டிச..20-
ஆ..நான் சொன்னதை அப்படியே போட்டிருக்காங்க..
படத்துக்கு கீழே என்ன எழுதியிருக்காங்க..
உயிர் ஊசலாடும் கண்ணாயிரம்..
ஏன் அப்படி போட்டாங்க..
எனக்கு உயிர் ஊசலாடவில்லை .உயிர் ஊசலாடுதுன்னு போடாதீங்கன்னு மாலை பத்திரிகை நிருபரிடம் சொல்லல.. அதனால ஊசல் என்றே போட்டுட்டாங்க மற்றபடி கட்டம் கட்டி.. நல்லா மணி மணியா போட்டிருக்காங்க.. வயசு போடலை.. பரவாயில்லை.. நமக்கு ஒரு இருபது வயசிருக்கும் என்று மற்றவங்க நினைக்கட்டும்.. இது ..என்ன சினிமா பக்கமா… ஆ. படம் ரொம்ப கவர்ச்சியா இருக்கே.. யார் நடிகை..கண்ணாடி எடுக்காம வந்தது தப்பா போச்சு..கூர்ந்து பார்ப்போம்..அது மட்டும் சின்ன எழுத்தில போட்டிருக்காங்க.. எங்களை மாதிரி ஆட்கள் எப்படி படிக்கிறது என்று புலம்ப.. பூங்கொடி கண்ணாயிரத்தைப் பார்த்து அங்கே என்ன கூர்ந்து கூர்ந்து பாக்கிறீங்க என்று பேப்பரை பிடுங்கி பார்க்க.. நடிகையின் கவர்ச்சி படம் தெரிய..கோபமானார்.
கண்ணாயிரத்தின் தலையில் குட்டி..இதையா பாக்கிறீய இவ்வளவு நேரம் என்று அதட்ட.. கண்ணாயிரம்.. சரியா தெரியல என்க..என்ன சொன்னீங்க என்று பூங்கொடி முறைத்தார்.
கண்ணாயிரம்..அது ..எந்த நடிகை என்று பெயர் சரியா தெரியல என்க.. பேப்பரை வாங்கி பூங்கொடி பெட்டியில் வைத்து பூட்டினார்.
கண்ணாயிரம்..இது அநியாயம்..இது அக்கிரமம் என்றார்.கார் விரைந்தது.(தொடரும்)

-தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.