May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆஸ்பத்திரியில் பாட்டுபாடிய கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Kannayiram who sang in the hospital/comedy story / Tabasukumar

16.12.2023
கண்ணாயிரம் விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில் நிருபர் பேட்டி காணவந்தபோது எமலோகத்துக்கு சென்று வந்த கதையைச் சொன்னார். பின்னர் புகைப்படக்காரர் கலர்படம் எடுக்க கண்ணாயிரம் சுடிதார்சுதா மேக்கப் பாக்சை எடுத்துச் சென்று நகபாலீசை கீழேக் கொட்டி அதை துடைக்க முயன்று கன்னத்தில் தடவி, கையில் தடவி கோமாளி போல் மேக்கப் போட்டு பெட்டில் வாய் பிளந்துபடுத்து போஸ்கொடுத்தார்.
நர்ஸ் வந்து என்ன கையில ரத்தம், கன்னத்திலே ரத்தம் என்று கண்ணாயிரத்தை கண்டிக்க அவர் நகபாலீஸ் என்று சொல்லி அசடுவழிவதும் ஒரே கலகலப்பு மழை.
அந்த நேரத்தில் அவசர சிகிச்சை பிரிவில் ஆங்காங்கே ரத்தம் சிதறிக்கிடப்பதாகவும் சுவரில் ரத்தக்கறை இருப்பதாகவும் ஒருவர் வந்து நர்ஸிடம் புகார் செய்தார்.
அவர் அந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது கண்ணாயிரத்தின் நகபாலீஸ் செய்த கோலம் என்று தெரியவர, நர்ஸ் பற்களை கடித்தபடி ..கண்ணாயிரம்.. உங்க கலாட்டா தாங்க முடியல.. நகபாலீசை அங்கே ஏன் கொட்டினீங்க.. என்று சத்தம் போட.. கண்ணாயிரமோ.. அது பெண்கள் பயன்படுத்துறது பாருங்க.. ஆண் நான் தொட்டதும் வெட்கப்பட்டு நகபாலீஸ் நழுவி தரையில விழுந்துட்டு.. அது என் குற்றம் இல்ல.. நகபாலீஸ் குற்றம் என்று சொன்னார்.
நர்ஸ் தலையில் கைவைத்தபடி.. என்ன அறிவு..என்ன அறிவு.. என்று சொல்லியபடி கண்ணாயிரத்தை முறைத்தார்.
அந்த நேரத்தில் பக்கத்து பெட்டில் இருந்தவர் ஓடி வந்து நர்சம்மா…நர்சம்மா.. ஓடி வாங்க.. சுற்றுலா பஸ் விபத்தில் காயம் அடைந்த எங்க அண்ணனுக்கு.. ஒரு மாதிரி இழுக்கு.. வந்து பாருங்க என்றார் கண்ணீரோடு.
உடனே நர்ஸ் வேகமாக அங்குச் சென்று அவரைப்பார்த்தார். டாக்கருக்கு தகவல் சொன்னார். அவரும் விரைந்துவந்தார்.
அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. கண்ணாயிரம் பக்கத்தில் போய் எட்டிப்பார்த்தார். தன்னுடன் சுற்றுலாபஸ்சில் வந்த முதியவர்.. விபத்தில் காயம் அடைந்து உயிருக்குப் போராடுவதைக் கண்டார்.அவருக்கு உயிர் ஊசலாடியது.
கண்ணாயிரத்தைப் பார்த்து அவர் கையை அசைக்க.. கண்ணாயிரம் அவர் அருகில் செல்ல கண்ணாயிரத்திடம் போயிடு என்று சொல்வதுபோல் கையை ஆட்டினார். கண்ணாயிரம் புரியாமல் என்ன வான்னாரு.. இப்போ போங்கிறாரு என்று புலம்பினார்.
முதியவரின் தம்பியிடம் என்ன சொல்லுறாரு என்று கேட்க.. அவர் புரிந்துகொண்டு கண்ணாயிரம் சீக்கிரம் வெளியே போன்னு சொல்லுறாரு.. புரியுதா என்றார்.
கண்ணாயிரம் கோபத்தில் நானா போகமாட்டேங்கிறன். என்னைத்தான் வெளியே போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களே என்று கண்களை கசக்கினார்.
கவலைப்படாதே சீக்கிரம் அனுப்பிடுவாங்க.. என்று முதியவரின் தம்பி ஆறுதல் கூறினார்.
கண்ணாயிரம்..சரி என்றபடி பெட்டில் போய் படுத்துக்கொண்டார்.
மாலை பத்திரிகை வரும். கலர் படம் வரும் என்ற ஆசையில் இருந்தார். அப்போது கண்ணாயிரம் செய்த நகபாலீஸ் கோலங்களைச் டாக்டரிடம் நர்ஸ் சொல்ல அவர் புன்னகைத்தார்.
கண்ணாயிரம் அருகில் வந்து பரிசோதித்தார்.ம்..நல்ல முன்னேற்றம் இருக்கு..கால் புண்ணு ஆறிட்டு.. ரத்த அழுத்தம் அதிகமா இருக்கு..என்றார்.
நர்ஸ் படபடப்புடன்.. டாக்டர்.. இவர் இங்கிருந்தா எல்லோருக்கும் ரத்த அழுத்தம் வந்திடும்.. என்க.. அப்படியா அவரை டிஸ்ஜார்ஜ் பண்ணிடலாம் என்றார் டாக்டர். நர்ஸ் மகிழ்ச்சியடைந்தார்.
கண்ணாயிரத்திடம் நீங்க..இன்னைக்கு மாலையிலே டிஸ்ஜார்ஜ் ஆகிரீங்க என்று நர்ஸ் சொல்ல.. கண்ணாயிரம்.. அதெல்லாம் எனக்குத் தெரியாது.. நான் வெளியே போகலாமா.. உயிருக்குப் போராடுகிறவரே என்னை வெளியே போன்னு சொல்லுறாரு.. நீங்க சொல்லமாட்டீங்க என்று கோபமாகக் கேட்டார். அதற்கு நர்ஸ் ..யோவ்.. டிஸ்ஜார்ஜ் என்றாலே வெளியே போகலாம்..என்றார்.
இப்படி தமிழில் சொல்லவேண்டியதுதானே..டிஸ்ஜார்ஜ்ன்னு இந்தியலே சொன்னா எனக்கு எப்படி புரியும் என்று கண்ணாயிரம் கேட்டார்.
நர்ஸ் உடனே அது இங்கிலீசுங்க..இந்தியில்லங்க என்று சொல்ல கண்ணாயிரம்..ம் எனக்கு புரியலன்னா அது இந்திதான் என்றார்.
முதியவரின் தம்பி கண்ணாயிரத்தை சமாதானப்படுத்தி..ஏய் சீக்கிரம் வெளியே போகிற வேலையைப்பாரு என்றார். கண்ணாயிரம் பூங்கொடி சேலையை தலையில் சுற்றிக்கொண்டு.. நான் செத்துப்புழைச்சவண்டா.. எமனை பாத்து சிரிச்சவண்டா.. ஓய் என்று ஆடிப்பாடினார்.
அது எவண்டா அரசு ஆஸ்பத்திரியிலே செத்துப் புழைச்சவன்னுப்பாடுறது.. என்று ஒருவர் அதட்ட.. நான்தாங்க கண்ணாயிரம். சும்மா..கத்தினேங்க என்றார்.
அதற்கு அவர் இது கத்தலே அல்ல தேவகானம்..புத்துணர்வு ஊட்டும் பாடல்.. என்று புகழ்ந்தார்.
அந்த நேரத்தில் பயில்வான் மற்றும் பூங்கொடி, சுடிதார் சுதா ஆகியோர் உள்ளே வந்தனர். கண்ணாயிரம் டிஸ்ஜார்ஜின்னு டாக்டர் சொல்லிட்டாரா.. ரைட்டு என்று சொன்ன பயில்வான், பூங்கொடியிடம்.. நீங்க.. வாடகை கார் ரெடி பண்ணித்தாறேன். .ஊருக்கு கிழம்புங்க.. பிடிச்சிருக்கிற பீடை தொலையுறதுக்காக தாமிரபரணியிலே மூழ்கிட்டுப் போங்க என்றார்.
கண்ணாயிரமோ..மாலை பத்திரிகை பாத்திட்டுப் போறேன் என்றார். அது போகும் போது கடையிலே வாங்கிக்கிங்க… முதலில் புறப்படுங்க.. இன்னும் மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவுல இருக்காங்கல்ல.. அவங்க குணமானதும் வர்ரோம் என்றார் பயில்வான்.
உடனே கண்ணாயிரம் சரி..சரி என்று தலையை ஆட்டினார். உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த முதியவரைப் பார்த்து.. போயிட்டு வர்ரேன் என்று சொல்ல.. ஆஸ்பத்திரில அப்படி செல்லக்கூடாது..போறேன் என்றுதான் சொல்லவேண்டும் என்று முதியவரின் தம்பி சொன்னார்.
உடனே கண்ணாயிரம்.. கண்களில் கண்ணீர் சிந்தியபடி.. முதியவரின் தம்பியிடம்.. யாரும் என்னைத் தேடி வந்தாங்கன்னா.. நான் போயிட்டேன் என்று சொல்லுங்க. சரியா.. என்ன சொல்வீங்க.. கண்ணாயிரம் போயிட்டான்னு சொல்லுங்க என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார்.
முதியவரின் தம்பியும்.. சரிப்பா..சரி.. என்றார்.
கண்ணாயிரம் பின்னர் சேலையை கையில் சுற்றியபடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களைப் பார்த்து.. நான் ஊருக்குப் போறேன்.. நான் ஊருக்குப் போறேன் என்று ஜாலியாக ஆடியவாறு சொல்ல எல்லோரும் ஒருமாதிரிப் பார்த்தார்கள்.
கண்ணாயிரம் உயிருக்கு ஊசலாடியவரை மீண்டும் ஒரு முறைப் பார்த்துவிட்டு.. டாடா.. டாடா.. பிர்லா என்று சொல்லியபடி புறப்பட்டார்.
பூங்கொடி அவரிடம் டாடா மட்டும்தான் சொல்லணும் பிர்லா எல்லாம் செல்லக்கூடாது என்று கன்னத்தில் கிள்ளினார்.
என்ன ஒரே சிவப்பா இருக்கு என்று கேட்க.. கண்ணாயிரம் சுடிதார் சுதா நகபாலீஸ் ரகசியத்தைச் சொன்னார்.
அங்கே ஏன் வாங்கினீங்க என்று பூங்கொடி இடிக்க கண்ணாயிரம் தன் பெட்டில் இருந்தமேக்கப் பாக்சை எடுத்து சுடிதார் சுதாவிடம் ஒப்படைத்தார். எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்கிடுங்க..பிறகு அதைக்காணம்..இதைக்காணமுன்னு சொல்லக்கூடாது..என்றார். சுடிதார் சுதா..சரி..சரி போங்க..போங்க..என்றார்.
கண்ணாயிரம் உற்சாகமாக அவசர சிகிச்சை பிரிவிலிருந்து வெளியே வந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் என்னைப்பார்க்க யாரும் வருவாங்க.என்று நினைத்தார். பூங்கொடி எல்லோரிடமும் சொல்லிட்டுப் போவோம்.. அவசரப்படாதே என்றார்.
மார்ச்சுவரியில் பணி செய்யும் ஊழியர் அந்த வழியாகவர.. தம்பி.. கொஞ்சம் நில்லுங்க..எனப்பெயர் கண்ணாயிரம்..என்னைத் தேடி யாரும் வந்தாங்கன்னா கண்ணாயிரம் போயிட்டாருன்னு சொல்லுங்க.. சரியா என்றார். அவரும் தலையாட்டிவிட்டுச் சென்றார்.
கண்ணில் தென்பட்டவர்களிடமெல்லாம்..கண்ணாயிரம் இருக்காரா என்று கேட்டால் போயிட்டாருன்னு சொல்லுங்க என்று உரக்கச் சொல்லியபடி சென்றார். ஏங்க அப்படிச் சொல்லுறீங்க என்று பூங்கொடி திட்ட.. எனக்கு ரசிகர்கள் அதிகம்.. அவங்க.. ஏமாறக் கூடாதுல்லா.. அதான் சொல்லுறன்..என்றார் கண்ணாயிரம்.
சரி..சரி போதும் வாங்க..வாங்க என்று வாடகைக்கார் நின்ற இடத்துக்கு அழைத்துப்போனார். பெட்டி படுக்கை எல்லாம் ஏற்றப்பட்டது. கண்ணாயிரத்தின் தொப்பி, கண்ணாடி, சின்ன கைத்தடி எல்லாம் பத்திரமாக இருக்கா என்று கண்ணாயிரம் கேட்டார்.
பூங்கொடியும் ம்..இருக்கு.. இருக்கு என்க.. கண்ணாயிரம் ஆமா..அந்த தாமிரபரணி தண்ணீ பிடிச்சுவச்ச பக்கெட்டை எங்கே.. பலமான கயிறு அதெல்லாம் எங்கே என்று கேட்டார்.
அதற்கு பூங்கொடி..என்னங்க..பஸ் கவிழ்ந்ததில பக்கெட்டு தண்ணி கவிழ்ந்துட்டு.. கயிறு இருக்கு போதுமா என்றார்.
தாமிரபரணி தண்ணி கவுந்திட்டா..அதுல தாமிரம் இருக்கான்னு நான் எப்படி ஆராய்ச்சி பண்ணுவேன் என்று கண்ணாயிரம் சினுங்க.. தாமிரபரணியிலே மூழ்க போறீங்க..அங்கே தண்ணி பிடிச்சுக்கிடலாம் என்று பூங்கொடி சொல்ல.. இது நல்ல ஐடியா என்று கண்ணாயிரம் நினைத்தார்.
ஆஸ்பத்திரி முன் பிள்ளையார் கோவில் இருந்தது. கடையில் தேங்காய் வாங்கி கண்ணாயிரம் தலையில் சுற்றி பூங்கொடி கோவில் முன் உடைத்தார். தேங்காய் உடைந்து சிதறி ஓடியது.
கண்ணாயிரம் அதை எடுக்கப் பாய பூங்கொடி தடுக்க.. மற்றவர்கள் தேங்காயை எடுக்க கண்ணாயிரம்.. எனக்கு தேங்கா…என்று புலம்ப.. பூங்கொடி..ஏங்க.. உங்க கண்திருஷ்டி கழிய தேங்காய் உடைச்சேங்க.. நீங்க அந்த தேங்காய தின்னா கண்திருஷ்டி கழியாது..சரியா என்று அமைதிப்படுத்தினார்.
கண்ணாயிரம் தேங்காய் கிடைக்காததால் ஏங்கினார். வாங்க கடையில் வாங்கித்தர்ரேன் என்று கண்ணாயிரத்தை காரில் ஏற்றினார்.
கார் தாமிரபரணியை நோக்கிச் செல்லும்படி பூங்கொடி சொல்ல கார் நெல்லை வண்ணாரப் பேட்டை கொக்கிரகுளத்தைநோக்கி விரைந்தது.(தொடரும்)-
வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.