May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

மாலை பத்திரிகையால் தப்பிய கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayiram escaped from the evening magazine/ comedy story/ Tabasukumar

21.12.2023
சுற்றுலா பஸ் விபத்தில் காயம் அடைந்து பாளை ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்ற கண்ணாயிரம் டிஸ்ஜார்ஜ் ஆகி புதுவைக்கு புறப்பட்டார். வழியில் பீடை நீங்க தாமிரபரணி ஆற்றில் மூழ்கி குளித்துவிட்டு மனைவியுடன் காரில் புதுவை புறப்பட்டார். போகும் போது மாலை பத்திரிகை வாங்கி தனது செய்தியை படித்துவிட்டு சினிமா கவர்ச்சி படம் பார்த்துக்கொண்டிருந்தவரை பூங்கொடி மிரட்டி பத்திரிகையை பறித்து பெட்டியில் வைத்து பூட்டினார்.
கார் விரைந்து சென்றது. இதே நேரத்தில் கடன் கொடுத்த ஜவுளிக்கடைக்காரர் மற்றும் இறைச்சிக்கடைக்காரர் ஆகியோர் கண்ணாயிரத்தைத் தேடி பாளை ஆஸ்பத்திரிக்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.
கண்ணாயிரம்.. பாட்டுப்பாடிக்கொண்டே வந்தார். ஊருக்குப் போனா ஜவுளிக்கடைக்காரர் பணம் கேட்பாரே என்ற நினைவு வந்தது. ஆமால்ல.. என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று யோசித்தார்.
அப்போது அவருக்கு ஒரு பாட்டு நினைவுக்கு வந்தது. பணம் என்னடா..பணம்.. குணம் தானடா நிரந்தரம்.
என்னிடத்தில் இல்லாததா.
சொன்ன விலை போகாததா..
இரக்கக் குணத்தை கெடுக்கும் அரக்கன்
பணம்..பணம்..பணம்.. என்று சத்தம் போட்டுபாடி பாடினார்.
அவ்வளவுதான்.. டிரைவர் பிரேக் போட்டு காரை ஓரமாக நிறுத்தினார்.
என்ன ஆச்சு என்று கண்ணாயிரம் கேட்க.. கார் டிரைவரோ.. எனக்கு வாடகை பணம் தருவீங்களா.. தரமாட்டீங்களா என்று கேட்டார்.
உடனே கண்ணாயிரம்.. அதிலென்ன சந்தேகம்.. என்று கேட்க டிரைவரோ.. பணம் என்னடா.. பணம் என்று பாடினீங்களே.. அதான் கேட்டேன் என்றார்.
கண்ணாயிரமோ.. அதெல்லாம் தருவோமய்யா.. பாத்து வண்டியை ஓட்டு என்றார்.
டிரைவர் உற்சாகமாக.. சரிசார்.. பணத்தை குறைக்காம தந்துடுவீங்கல்ல என்றபடி காரை ஓட்டத்தொடங்கினார்.
கண்ணாயிரம்..ம். நிம்மதியா ஒரு பாட்டு பாடமுடியல… என்ன பண்ணுறது என்று முணங்கியபடி இருந்தார்.
கார் கண்ணாடியை இறக்கி விட்டு.. வெளியே வேடிக்கை பாத்தபடியே வந்தார். குளிர்ந்த காற்று வீசியது. கண்ணாயிரம்.. வெளியே கையைக் காட்டி.. டாடா பை..பை என்று சொல்லியபடி வந்துகொண்டிருந்தார்.
கார் திருச்சியை நெருங்கியது.. கண்ணாயிரம் உற்சாகமாக கையை அசைக்க எதிரே வந்த காரில் இருந்தவர் .. கோபமாக.. கையை உள்ளே வைய்யா. தூக்கிட்டுப் போயிடப் போறாங்க. என்று திட்டிவிட்டு வேகமாக காரை ஓட்டிச்சென்றார்.
அந்த ஆள் ஜவுளிக்கடைக்காரர் என்பதை பார்த்த கண்ணாயிரம்.. அய்ய்யோ.. நல்லவேளை பாக்கல.. இல்லன்னா காரை நிறுத்தி கொடுடா கடனைன்னு கேட்டிருப்பான்.. சிக்கலாகி இருக்கும். தப்பிச்சேன். அப்பாடின்னு கார் கண்ணாடியை ஏற்றிவிட்டு படுத்துக்கொண்டார்.
இதே நேரத்தில் ஜவுளிக்கடைக்காரர் காரில் இருந்த இறைச்சிக்கடைக்காரர்.. என்னங்க. எதிரே காருக்கு வெளியே கையைக்காட்டிட்டு போனது கண்ணாயிரம் மாதிரி இல்லை என்று கேட்டார்.
அதற்கு ஜவுளிக்கடைக்காரர்.. கண்ணாயிரம் மாதிரி இல்லைன்னு சொல்லுறீங்க.. பிறகு என்ன என்க.. இறைச்சிக்கடைக்காரர்.. யோவ்.. கோமாளி மாதிரி இருந்தானே.. அவன் கண்ணாயிரமாகத்தான் இருக்கணும் என்றார்.
ஜவுளிக்கடைக்காரரோ..கண்ணாயிரம் உயிர் ஊசல் என்று பேப்பரில போட்டிருக்கு.. மறுபடி எப்படி காரில் போகமுடியும். அவர் ஆஸ்பத்திரியிலே சிகிச்சையிலே இருப்பார்.. போயி ஒரே அமுக்குன்னு அமுக்கிட வேண்டியதுதான் என்றார்.
இறைச்சிக்கடைக்காரரோ.. காரில் போனது கண்ணாயிரம்தான் என்றார்.
ஜவுளிக்கடைக்காரர்.. நமக்குள் ஏன் வாக்குவாதம்.. மாலை பத்திரிகையை வாங்கிப் பாப்போம்.. கண்ணாயிரத்தைப் பத்தி என்ன போட்டிருகாங்க என்று தெரிந்துவிடும் என்றார்.
அதுவும் சரி என்று இறைச்சிக்கடைக்காரர் தலையை ஆட்ட கார் வேகமாக சென்றது.

ஜவுளிக்கடைகாரரை பார்த்ததால் கண்ணாயிரத்துக்கு வியர்த்தது. இங்கே எங்கே போறாங்க என்று மனம் அலைபாய்ந்தது. ஒருவேளை நம்மைத் தேடித்தான் வந்திருப்பாரோ என்று நினைத்த கண்ணாயிரத்துக்கு பாத்ரூம் போகணும் போல முட்டியது. பூங்கொடியிடம்.. என்ன பூங்கொடி.. உனக்கு பாத்ரும் போகணுமா என்று கேட்டார். அவர் எனக்கு அவசரம் இல்லை என்க கண்ணாயிரம் பூங்கொடியிடம் ஒரு விரலை காட்டினார்.
பூங்கொடி..ம். இதே தொந்தரவாப் போச்சு.. பஸ்ஸாண்டு வரட்டும். அங்கே போங்க என்க.. கண்ணாயிரமோ…அங்கே சில்லறை பிரச்சினை வரும்.. பண்டுருட்டியிலே பத்து ரூபா காயினை கொடுத்துட்டு படாதபாடு பட்டுட்டேன். மறுபடியும் பிரச்சினை வரும் என்றார்.
அப்போ எங்கேதான் போவீங்க என்று பூங்கொடி கேட்க.. காட்டுப் பகுதியிலே காரை நிறுத்தினா இயற்கையா அப்படியே போயிட்டு வந்திடுவேன்..அ ப்புறம் ஓட்டலில போய் சாப்பிட்டா கூட இரண்டு தோசை சாப்பிடுவேன் என்றார்.
இதைக் கேட்டபடி காரை ஓட்டிய டிரைவர் .. அமைதியா வாங்க.. நல்ல ஓட்டலா பாத்து காரை நிறுத்துறன்.. அங்கே பாத்ரூம் இரூக்கும். காசு கொடுக்க வேண்டியது இல்லு.அங்கேபோயிட்டு ஓட்டலில்சாப்பிட்டு வாங்க என்றார்.
கண்ணாயிரம்..ஆமா.. இது நல்ல ஜடியாவா இருக்கே..அப்படியே காரை நிறுத்துங்க என்றவாறு வயிற்றைப் பிடித்தார்.
கார் விரைந்து சென்று ஒரு ஓட்டல் முன் நின்றது.
கண்ணாயிரம் வேகமாக காரைவிட்டு இறங்கி பாத்ரூம் எங்கே இருக்கு என்று கேட்டு அங்கு வேகமாக ஓடினார். பூங்கொடியும் டிரைவரும் ஓட்டலுக்குள் சென்றார்கள்.
இதே நேரத்தில் காரில் சென்ற ஜவுளிக்கடைக்காரர் வழியில் காரை நிறுத்தி பெட்டிக்கடையில் மாலை பத்திரிகை வாங்கினார்.
வேகமாக பக்கத்தைப் புரட்டி விபத்து செய்தியைப் பார்த்தார். உயிர் ஊசலாடும் கண்ணாயிரம் என்ற குறிப்புடன் கண்ணாயிரம் வாய் பிளந்தபடி பெட்டில் படுத்திருக்கும் காட்சி இருந்தது.
இறைச்சிக்கடைக்காரரிடம் காட்டி..பாத்தியளா… கண்ணாயிரம் ஆஸ்பத்திரியில்தான் இருக்கார். வாய்பிளந்து படுத்திருக்கார் பாரூங்க.. கலர் படத்திலே பளிச்சினு தெரியுது பாருங்க.. பேட்டி வேற கொடுத்திருக்கார்.. இதோ பாருங்க என்று காட்டினார்.
இறைச்சிக்கடைக்காரரும் பேப்பரைப் பார்த்தார். ஆமா..அப்போ காரில் பாத்தது யாரு என்று தலையை தட்டினார்.
அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
மீண்டும் கண்ணாயிரம் படத்தைப்பார்த்தார். வாய் பிளந்தபடி படுத்திருக்கார்.. கன்னத்திலே காயம் வேற..ம்.. காரில் பாத்த ஆளுக்கு கன்னத்திலே காயம் இல்லையே.. அப்போ நாம பாத்தது கண்ணாயிரம் மாதிரி வேற யாரோ இருக்குமோ.. தலை சுத்துது என்றார்.
ஜவுளிக்கடைக்காரரோ..ம் மனசை குழப்பாதீங்க..நீங்க பாத்தது கண்ணாயிரம் கிடையாது சரியா.. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கார் சரியா என்று கேட்டார்.
இறைச்சிக்கடைக்காரரும்..சரி என்று தலையை ஆட்டினார்.
ஜவுளிக்கடைக்காரர் மகிழ்ச்சி அடைந்தார். நல்ல ஓட்டலில் நல்லா சாப்பிட்டுவிட்டு பாளைக்குப் போவோம் என்றவர் பெட்டிக்கடைக்காரரிடம்.. நல்ல ஓட்டல் எங்கே இருக்கு என்று கேட்டார். அதற்கு அவர் நீங்க வந்த பாதையிலே கொஞ்ச தூரம் திரும்பி போனீங்கன்னா.. நல்ல ஓட்டல் வரும். காரையும் பார்க்கிங் பண்ணலாம்.. சாப்பாடும் நல்லா இருக்கும் என்றார். பாத்ரூம் வசதியும் இருக்கும் என்றார்.
ஜவுளிக்கடைக்காரர் நல்லதைத் தேடி எவ்வளவு திரும்பி போனாலும் போகலாம்..தப்பில்லை என்று காரில் ஏறினார்.
காரில் அவ்வளவு தூரம் திரும்பி போகணுமா என்று இறைச்சிக்கடைக்காரர் கேட்க..ஜவுளிக்கடைக்காரரோ..ம்.தப்பில்ல..கொஞ்ச தூரம்தானே..போய் சாப்பிட்டுவிட்டு வந்திடுவோம் என்றார். இறைச்சிக்கடைக்காரரும்..சரி..உங்க விருப்பம் என்க கார் அந்த ஓட்டலை நோக்கி திரும்பிச் சென்றது.

கண்ணாயிரமோ..ம்..வருது வருது வேங்கை வெளியே வருது என்று பாட்டுப்பாடியவாறு பாத்ரூம் போனவர் கைகளை கழுவிவிட்டு வெளியே வந்தார். ஓட்டலுக்குள் எட்டிப்பார்த்தார். பூங்கொடி ஒரு சீட்டில் இருந்தார். மற்றோரு சீட்டில் கண்ணாயிரம் போய் இருந்தார்.
அந்த நேரத்தில் ஜவுளிக்கடைக்காரரும் இறைச்சிக்கடைக்காரரும் வேகமாக காரில் அதே ஓட்டலுக்கு வந்தனர். காரை நிறுத்திவிட்டு கையில் மாலை பத்திரிகையை எடுத்துக்கொண்டு ஜவுளிக்கடைக்காரர் ஓட்டலுக்குள் நுழைய இறைச்சிக்கடைக்காரர் பின்னால் சென்றார்.
இதை அறியாமல் கண்ணாயிரம்.. கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் என்று பாடியபடி இருந்தார்.அப்போது..இரண்டு சீட்டு தள்ளி ஜவுளிக்கடைக்காரரும்..இறைச்சிக்கடைக்காரரும் இருக்கையில் அமர்ந்தார்கள்.
ஜவுளிக்கடைக்காரர் பேப்பரை தூக்கிப்பிடித்தபடி..ஏங்க..விபத்தில உயிர் ஊசலாடுற கண்ணாயிரம் பேட்டி வேற கொடுத்திருக்கார் பாருங்க என்க இறைச்சிக்கடைக்காரர்.. உயிர் ஊசலாடுகிறவர் எப்படி பேட்டி கொடுக்க முடியும் என்று கேட்டார்.
யோவ்..மெல்ல மெல்ல சொல்லியிருப்பான்யா..எதுக்கும் சந்தேகப்படாதய்யா..அவர் எப்படி பேட்டி கொடுத்தார் என்பது முக்கியம் இல்லை.என்ன சொல்லியிருக்கார் என்பதுதான் முக்கியம் என்றார்.சரி படிங்க..என்று இறைச்சிக்கடைக்காரர் சொல்ல..ஜவுளிக்கடைக்காரர் சத்தம் போட்டு படிக்க ஆரம்பித்தார்.
விபத்து நடந்த போது தூங்கியதால் சொர்க்கத்தைக் கண்டேன்.. உயிர் தப்பிய கண்ணாயிரம் பேட்டி.. ஆ.கண்ணாயிரமாம்.. கண்ணாயிரம்..என் கையிலே கிடைச்சான் கரும்பு சாறு புழியிற மாதிரி புழிஞ்சிடுவேன்.. கண்ணாயிரம்..நீ எங்கே இருக்கே என்று கத்த.. கண்ணாயிரம் என்ன நம்ம பெயரை பத்தி சத்தம் கேட்குது என்று எட்டிப்பார்க்க.. ஜவுளிக்கடைக்காரரும் இறைச்சிக்கடைக்காரரும் பேப்பரை தூக்கிப்பிடித்தபடி..பேப்பர் படிப்பதைப்பார்த்து.. அய்யோ..வந்தது ஆபத்து.. பூங்கொடி நைசா கிழம்பு.. ஜவுளிக்கடைக்காரர் இருக்கிறார்.. போயிடுவோம்..என்க இருவரும்..குனிந்தபடி நைசாக வெளியேறி வாசலுக்கு வந்தார்கள்.
அப்போது..மானிடப் பதரே.. எங்கே வந்தாய்.. தூக்கி வீசுங்கள் அவனை என்று ஜவுளிக்கடைக்காரர் படிக்க.. கண்ணாயிரமும் பூங்கொடியும் பயந்து ஓடிப் போய் கார் தெரியாமல் ஜவுளிக்கடைக்காரர் கார் கதவை திறக்க முயன்று கொண்டிருந்தார்கள்.

அப்பாட மாலை பத்திரிகையை ஜவுளிக்கடைக்காரர் தூக்கிப்பிடித்திருந்ததால அவர் நம்மளை பாக்கல. .இறைச்சிக்கடைக்காரர் வேற கூட கூட்டி வந்திருக்கார்.. நம்மளை அடிச்சி தூக்கிட்டுப் போயிடுவாரு.. நல்லவேளை மாலைபத்திரிகைதான் நம்மளை காப்பாத்திச்சு என்று கண்ணாயிரம் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஏன் கார் கதவு திறக்கமாட்டேங்குது என்றுகார் கதவு பிடியை திருக்கினார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.