May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை குழப்பிய கறுப்புநிற கார்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

A black car that confusedKannayiram/ comedy story/ Tabasukumar

22.12.2023
கண்ணாயிரம் சிகிச்சை முடிந்து பாளையங்கோட்டையிகலிருந்து புதுவைக்கு வாடகை காரில் புறப்பட்டுவந்தார். திருச்சி அருகே வந்தபோது அவருக்கு கடன் கொடுத்த ஜவுளிக்கடைக்காரர் காரில் செல்வதை கண்ணாயிரம் பார்த்து பயந்து காரில் பதுங்கிக் கொண்டார்.
பின்னர் ஒரு ஓட்டலில் சாப்பிட கண்ணாயிரம் காரை நிறுத்திவிட்டு மனைவி பூங்கொடியுடன் சென்று இருக்கையில் அமர்ந்திருந்தபோது ஜவுளிக்கடைக்காரரும் இறைச்சிக்
கடைக்காரரும் அதே ஓட்டலுக்கு சாப்பிட வந்து கண்ணாயிரம் இருந்த சீட்டுக்கு எதிரே மாலை பத்திரிகையை தூக்கிப் பிடித்தபடி படிக்க இதைப்பார்த்த கண்ணாயிரமும் பூங்கொடியும் நைசாக தப்பி ஓட்டலில் இருந்து தப்பி வெளியேவந்தனர்.
தான் வந்த கார் அடையாளம் தெரியாமல் ஜவுளிக்கடைக்காரர் வந்த கார் கதவு பிடியை திருக்கிக்கொண்டிருந்தார்.
என்ன..கார் கதவு திறக்க மாட்டேங்குது.. இப்படி மக்கர் பண்ணுது.. என்றபடி கண்ணாயிரம் கார் கதவை ஓங்கி அடித்தார்.
அவசர நேரத்துக்கு திறக்காது.. ஜவுளிக்கடைக்காரர் தேடி வந்தார் என்றால் என்ன செய்வது.. எங்கே ஓட முடியும். இந்த டிரைவர் எங்கே போனார்.. என்று எரிச்சலுடன் கார்கதவு பிடியை மீண்டும் திருக்கினார்.
சீக்கிரம் திறங்க.. என்ன பண்ணுறீங்க.. என்று பூங்கொடியும் அவசரப்படுத்தினார். கண்ணாயிரம்.. கத்தாதே.. வந்திடப் போறாங்க.. கதவு திறக்கமாட்டேங்குது என்றார்.
பூங்கொடி.. ஏங்க உங்களால திறக்க முடியாது.. வாங்க என்றபடி பூங்கொடியும் கார் கதவை திறக்க முயன்றார்.
திறக்க முடியவில்லை.
என்ன..இப்படி சேட்டை பண்ணுது இது நாம வந்த கார்தானா என்று சந்தேகத்துடன் கேட்டார்.
கண்ணாயிரம் உடனே.. நாம வந்த கார் கறுப்புதான்.. மரத்து பக்கத்திலேத்தான் டிரைவர் நிறுத்தினார். இப்போ மரத்துப் பக்கத்திலே இருக்கிற காரைத்தான் நாம திறக்க முயற்சிக்கிக்கிறோம்.. திறக்க மாட்டேங்குது.. என்ன மாயமா இருக்கு.. டிரைவரை எங்கே.. என்று கத்தினார். சாப்பிடவும் இல்லை.. வயிறு வேற பசிக்குது.. என்ன செய்யுறது என்று புலம்பினார்.
அப்போது கையில் மாலை பத்திரிகையுடன் ஜவுளிக்கடைக்காரர் வெளியே வந்தார்.
அதைப்பார்த்த கண்ணாயிரம்..ஏய் பூங்கொடி.. காருக்குப் பின்னால பதுங்கு.. ஜவுளிக்கடைக்காரர் வாராரு.. மாட்டிக்குவம் என்று சொல்ல இருவரும் கறுப்பு நிற காருக்கு பின்னால் சென்று பதுங்கினார்கள்.
ஜவுளிக்கடைக்காரர் நேராக கறுப்பு நிற கார் அருகில் வந்தார். சாவி வைத்து கார் கதவை திறந்து லைட்டை போட்டு மாலை பத்திரிகையை பத்திரமாக வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்துக்கொண்டு லைட்டை அணைத்துவிட்டு மீண்டும் கதவை பூட்டி விட்டு சென்றார்.
கண்ணாயிரம்.. அப்பாட.. போயிட்டார்.. நம்ம காரை அவர் எப்படி திறந்தார்.. நம்ம காரில் அவருக்கு என்ன வேலை அதுவும் நம்மக் காரை எடுத்துட்டு இல்ல… இல்ல.. திருடிட்டு போறரே என்று கண்ணாயிரம் கத்தினார்.
அந்த நேரத்தில் வாடகை கார் டிரைவர் அங்கே வந்தார்.
ஏங்க..உங்களை எங்கேயெல்லாம் தேடுறது.. என்று எகிற கண்ணாயிரம் பதிலுக்கு.. ஏங்க.. நாங்க உங்களை எங்கேல்லாம் தேடுறது.. காரை இங்கே விட்டுட்டு எங்கை போனீங்க.. கண்டவங்க திறக்காங்க.. திறக்குது.. நாங்க திறந்தா திறக்கமாட்டேங்குது.. என்ன கார் வச்சிருக்கிய இப்போ ஒங்க காரையே கடத்திட்டு போயிட்டாங்க… என்று கண்ணாயிரம் சத்தம் போட்டார்.
அதற்கு டிரைவர்.. ஏங்க நாம வந்த வாடகை கார் அதோ அந்த மின்விளக்கு போஸ்ட் பக்கத்திலே நிக்குது என்றார்.
கண்ணாயிரம் கோபத்தில் நாம வந்த காரை இந்த மரத்து பக்கத்திலேதான நிறுத்தினீங்க.
பிறகு எப்படி போஸ்ட் பக்கத்திலே போச்சு என்று கண்ணாயிரம் கேட்க.. அதுவா மரத்து பக்கத்திலே காரை நிப்பாட்டாதீங்க.. சொரி பூச்சி வரும் என்று செக்யூரிட்டி சொன்னதால காரை அங்கிருந்து எடுத்து போஸ்டு பக்கதிலே நிறுத்தினேன் என்றார்.
அய்யய்யோ..சொரி பூச்சி கடிக்கும் என்றபடி கண்ணாயிரமும் பூங்கொடியும் அங்கிருந்து நகர்ந்து போஸ்டு பக்கம் ஓடினார்கள். சொரிபூச்சி..அதான் கம்புளிப் பூச்சி ஜவுளிக்கடைக்காரரை நல்லா கடிக்கட்டும்..நேரா போனவர் நேராக போக வேண்டியதுதானே.. அதை விட்டுப்புட்டு திரும்பி வந்து நாம சாப்பிடுற ஓட்டலுக்கே வர வேண்டுமா.. நம்மளை சாப்பிடவிடாம பண்ணிட்டாரே என்று கண்ணாயிரம் புலம்பினார்.
டிரைவர் அவரிடம்..ஏன் சாப்பிடலைய்யா..என்று கேட்க.. கண்ணாயிரம் பதிலுக்கு.. ஓட்டல்சாப்பாடு அவ்வளவு நல்லா இருக்கிற மாதிரி தெரியல.. நம்ம தரத்துக்கு இந்த ஓட்டல் சரியா இல்ல. வேற நல்ல ஓட்டலைப் பாப்போம் என்று சொன்னார்.
பூங்கொடியும் ஆமா என்று ஆமோதித்தார்.
சரி வந்து காரில் ஏறுங்க என்று டிரைவர் அழைக்க கண்ணாயிரம் அந்த கார் கதவு பிடியை திருக்க கதவு திறந்தது.. இது நம்ம கார்தான் என்றபடி காரில் ஏறினார்.
டிரைவர் ஏற்கனவே கதவை திறந்து வைத்திருந்ததை அவர் அறியவில்லை.
பூங்கொடி..காரில் ஏறு..சீக்கிரம் போவோம் என்றார்.
பூங்கொடியும் காரில் ஓடி வந்து ஏறினார்.கார் புறப்பட்டது.
செக்யூரிட்டி வந்து கார் செல்ல வழி ஏற்படுத்திக்கொடுத்து வணக்கம் போட்டார்.
கண்ணாயிரமும் பதிலுக்கு வணக்கம் போட்டார். பின்னர் மீண்டும் செக்யூரிட்டி வணக்கம் போட கண்ணாயிரமும் குனிந்து மீண்டும் வணக்கம் போட்டார்.
அப்போது வாடகைகார் டிரைவர் ஏங்க. ஒரு பத்து ரூபா கொடுங்க என்க கண்ணாயிரம் பத்து ரூபா எடுத்துக் கொடுத்தார். செக்யூரிட்டி ரைட்டு என்று சொல்ல கார் விரைந்தது.
கண்ணாயிரம் இருக்கையில் சாய்ந்தபடி அப்பாட.. ஜவுளிக்கடைக்காரரிடமிருந்து தப்பியாச்சு.. இங்கே எங்கேப் போறாரு.. தெரியலையே என்றுநினைத்தார்.
டிரைவர் அவரிடம்..எப்படி உங்களூக்கு நாம வந்த கார் அடையாளம் தெரியாமப் போச்சு.. என்று கேட்க.. மரத்து பக்கத்திலே நின்ன காரும் கறுப்பு.. உங்க காரும் கறுப்பு. அதனால இரட்டிலே அடையாளம் தெரியாம குழம்பிட்டேன். ஒண்ணு சொன்னா கோபப்படமாட்டியளே.. உங்க காரு.. கறுப்பா பயங்கரமா இருக்கு என்று சொல்லி சிரித்தார்.
டிரைவர் கோபத்தை அடக்கிக்கொண்டு ..ம் அப்படியா என்றபடி காரை வேகமாக ஓட்டினார்.(தொடரும்)
-தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.