May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை பயமுறுத்திய பாடி / நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

The Corpse That Scared Kannayira / Comedy Story / Tabasukumar

24.12.2023
கண்ணாயிரம் பாளையங்கோட்டையிலிருந்து புதுவைக்கு வாடகை காரில் சென்று கொண்டிருந்தார்.திருச்சி அருகே ஒரு ஓட்டலில் சாப்பிட அவர் மனைவி பூங்கொடியுடன் சென்றபோது அவருக்கு கடன் கொடுத்த ஜவுளிக்கடைக்காரரும் இறைச்சிக்கடைக்காரரும் அதே ஓட்டலுக்கு வந்தனர். அவர்களுக்கு தெரியாமல் கண்ணாயிரமும் பூங்கொடியும் நைசாக வெளியேறி வந்தனர். தான் வந்த கறுப்பு கார் எது என்று தெரியாமல் ஜவுளிக்கடைக்காரர் கார் கதவை திறக்கமுயன்ற கண்ணாயிரம் பின்னர் தான் வந்த கார் வேறு இடத்தில் நிற்பதை அறிந்து அங்கே சென்று காரில் ஏறினார்.
உங்க காரு கறுப்பா பயங்கரமா இருக்கு என்று டிரைவரிடம் கலாய்த்த கண்ணாயிரம் இருக்கையில் சாய்ந்து படுத்துக்கொண்டார்.
கார் வேகமாக புறப்பட்டுச் சென்றது. அப்போது கண்ணாயிரம் டிரைவரிடம் நீங்க சாப்பிட்டீங்களா என்க அவர் சாப்பிட்டுவிட்டேன் என்க எவ்வளவு காசு கொடுத்திங்க என்று கண்ணாயிரம் கேட்டார்.
டிரைவரோ..நான் ரெகுலரா.. இந்த ஓட்டலுக்கு தான் கஸ்டமரை அழைத்து வருவேன்.. அதனால.. நமக்கெல்லாம் பிரிதான் என்று சொன்னார்.
அப்படியா என்று சொன்ன கண்ணாயிரம்.. நான் பிரியா பாத்ரூம் போயிட்டு வந்துட்டேன்.. ஆனா செக்ரூட்டிக்குத்தான் பத்து ரூபா கொடுக்க வேண்டியதாயிட்டு.. என்று கவலைப்பட்டார்.
உடனே டிரைவர்.. கம்புளி பூச்சி கடியிலிருந்து தப்பிச்சியள. .அதை நினைச்சுப் பாருங்க என்று சொன்னார்.
கண்ணாயிரம்..ஆமா..அதுவும் சரிதான்.. ஜவுளிக்கடைக்காரரை நல்லா கடிக்கட்டும் என்று மகிழ்ச்சி அடைந்தார்.
கார் சென்று கொண்டிருந்தது. திடீரென்று கண்ணாயிரம்.. அம்மா என்று கத்தியபடி வயிற்றைப்பிடித்தார். என்னாச்சு என்று பூங்கொடி கேட்க… கண்ணாயிரம்.. வயிறு பசிக்கு என்று சொன்னார்.
உடனே பூங்கொடி.. இதுக்கு ஏன் வயித்த வலி வந்த மாதிரி கத்துறீங்க.. என்று தலையில் தட்டினார்.
கார் சென்று கொண்டிருந்தது.
ரோட்டோர டிபன் கடையை பார்த்ததும் கண்ணாயிரம் நிறுத்துங்க என்றார்.
டிரைவர் காரை நிறுத்தினார்.
கண்ணாயிரம் வேகமாக இறங்கி சென்று அங்குள்ள சேரில் உட்கார்ந்தார். பூங்கொடியைப் பார்த்து.. பூங்கொடி வா.. உனக்கு இடம் பிடிச்சி வச்சிருக்கேன் வா..தோசை சாப்பிடலாம் என்றார்.
பூங்கொடியும் காரைவிட்டு இறங்கி கை கழுவி விட்டு வந்து சேரில் அமர்ந்தார்.
கண்ணாயிரம்.. உடனே..பூங்கொடி என் சேரை பாத்துக்க..வேறு யாரும் வந்து உட்கார்ந்திடப் போறாங்க என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று கை கழுவிவிட்டு வந்தார்.
சூடா ஆளுக்கு இரண்டு தோசை கொடுங்க என்று கண்ணாயிரம் ஆர்டர் கொடுக்க சப்பளையர் ஆச்சரியத்துடன் அத்தனை பேருக்குமா என்று கேட்க.. கண்ணாயிரம் ஆடிப்போனார்.
யோவ்..எனக்கும் பூங்கொடிக்கும் ஆளுக்கு இரண்டு தோசை கொடுய்யா.. கொஞ்சம் ஏமாந்தா தலையில் மிளகாய் அரைச்சிடுவீங்களே.. நான் கொஞ்சம் விவரமான ஆள் என்பதால் உஷாரா கேட்டுவிட்டேன் என்று சட்டைகாலரை உயர்த்திவிட்டுக்கொண்டார்.
சப்ளையர் சிரித்தபடி .ம்.. என்றபடி பிளேட்டில் தோசை எடுத்துவந்தார். தோசை சூடா இருக்கா என்று கண்ணாயிரம் இரண்டு முறை தொட்டுப் பார்த்தார். ஆ..சூடாதான் இருக்கு என்றபடி சாப்பிடத் தொடங்கினார்.
காரச்சட்டினியை தொட்டு விழுங்கியவர்.. ஆ.காரமா இருக்கு என்றார்.
தேங்காய் சட்டினியை சாப்பிடுங்க.. என்ற பூங்கொடி ..காரைச் சட்டினியை அதிகம் சாப்பிடாதீங்க.. இடையிலே எங்கேயும் காரை நிறுத்த மாட்டோம் என்று எச்சரித்தார்.
கண்ணாயிரம்..சரி..சரி.. என்றவாறு தேங்காய் சட்டினியைத் தொட்டுச்சாப்பிட்டவர்.. பூங்கொடி பார்க்காதபோது காரைச்சட்டினியைத் தொட்டு கொஞ்சம் சாப்பிட்டார்.
ஆ.. பூங்கொடி பாக்கல என்றவாறு மறுபடியும் காரைச்சட்டினியைத் தொட்டு விழுங்கப் போனார்.
அப்போது இதை அறியாமல் ஏங்க.. மெதுவா விழுங்குங்க.. ஏன் அவசரம்.. என்று சத்தம் போட்டார்.
கண்ணாயிரம் மென்று விழுங்கினார். பூங்கொடியும் இரண்டு தோசையை பிய்த்து தேங்காய் சட்டினியில் முக்கி சாப்பிட்டார்.
கண்ணாயிரம் கார சட்டியை விழுங்கியதால் உரைத்தது. ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் தண்ணீரை மடக் மடக் என்று குடித்தார்.
அதைப் பார்த்த பூங்கொடி..அதிகம் குடிக்காதீங்க… என்று தடுக்க கண்ணாயிரம் பதட்டமானார். எனக்கு உரைக்கில்லா என்று கண்ணாயிரம் சொல்ல தேங்காய் சட்டினிதான சாப்பிட்டிய பின்னே ஏன் உரைக்கு என்று பூங்கொடி மடக்க கண்ணாயிரம் பதில் சொல்லாமல்.. அது வந்து என்று இழுத்தார்.
சரி..சீக்கிரம் சாப்பிட்டு கிளம்புங்க..என்று பூங்கொடி அதட்ட கண்ணாயிரம் உரைப்பு தாங்காமல் கண்ணீர் வடிக்க.. பூங்கொடியோ.. ஏங்க.. சீக்கிரம் சாப்பிடுங்க என்று சொன்னது தப்பா .. அதுக்குப் போய் கண்ணீர் வடிக்கிய .. நான் இனி ஒண்ணும் சொல்லலை என்றார்.
கண்ணாயிரமோ உரைப்பு சட்டினிதான் காரணம் என்று சொல்லாமல் சமாளித்தார்.
ஒரு வழியாகச் சாப்பிட்டு முடித்த கண்ணாயிரம் காரச்சட்டினியால் கண்ணெல்லாம் சிவப்பாகி ..ஆச்..ஆச் என்று தும்மியபடி காருக்கு புறப்பட்டார்.
அப்போது பிளாட்பார டிபன் கடைக்காரர் கண்ணாயிரத்தை பார்த்து வணக்கம் போட கண்ணாயிரமோ பதிலுக்கு வணக்கம் போட்டா பத்து ரூபா கொடுக்க வேண்டுமோ என்று நினைத்து வணக்கம் போடத் தயங்கினார்.
டிபன் கடைக்காரர் சிரித்தபடி மீண்டும் வணக்கம் போட்டார்.
கண்ணாயிரம் உஷாராக கண்டு கொள்ளாமல் செல்ல முயல டிபன் கடைக்காரர் புரிந்துகொண்டு சார், மீண்டும் வாங்க.. நன்றி ,வணக்கம் என்றார்.
கண்ணாயிரம்..அப்பாடி.. நானும் பத்து ரூபா கேட்கிறாரோ என்று நினைத்தேன்.. பிளாட்பார டிபன் கடையிலே எந்த பிரச்சினையும் இல்லையே.. காரை சட்டிதான் ரொம்ப காரமா இருக்கு என்றபடி காருக்கு சென்றார்.
பூங்கொடி டிபன் கடைக்காரரிடம் பணத்தை கொடுத்துவிட்டு காரை நோக்கி விரைந்தார்.
அப்போது கண்ணாயிரம் பூங்கொடியிடம் மெதுவாக… டிரைவருக் காஸ்ட்லி ஓட்டல்ய நிப்பாட்டி, அவரு இன்னொரு தடவை ஓசியில சாப்பிட்ருவாரு.. அதான் பிளாட்பார ஓட்டல கண்டதும் வயிறு பசிக்குதுன்னு கத்தினேன் என்றார்.
ஓ.. அதுக்குத்தான் வயிற்றுவலி வந்தமாதிரி கத்தினீங்களா.. என்றார் பூங்கொடி.
பின்னர் கண்ணாயிரமும் பூங்கொடியும் காரில் ஏறி அமர கார் புறப்பட்டது.
டிரைவரிடம் கண்ணாயிரம்.. தோசை நல்லாயிருந்துச்சு.. செக் கியூரிட்டி இல்ல.. வணக்கம் போட்டு நன்றி சொல்லுறாங்க .. பத்து ரூபா தப்பிச்சு.. என்று சொல்ல.. உங்க தரத்துக்கு ஏற்ற ஓட்டலா இது என்று கேட்க.. கண்ணாயிரம் ஆமா என்று தலையாட்டினார்.
நான் பெரிசா எதிர்ப்பார்த்தேன்.. என்றவாறு டிரைவர் மெதுவாக காரை ஓட்டினார்.
அதைப் பார்த்த கண்ணாயிரம், என்ன மெதுவா ஓட்டுறீங்க.. இருட்டானதால பயப்பிடுறீங்களா.. பயப்படாதீங்க.. நான் இருக்கேன்ல.. பயப்படாம ஓட்டுங்க என்றார்.
டிரைவரோ.. ஏங்க.. நானா.. பயப்படுறனா.. அதெல்லாம் கிடையாது.. நான் இதே காரில பாடியை வச்சே ஓட்டிட்டுப் போயிருக்கேன்..என்றார்.
அதைக்கேட்ட கண்ணாயிரம் பாடின்னா.. எது என்க டிரைவர் சத்தமாக பிணம்..பிணம்.. ஆண் பிணம் என்றார்.
உடனே கண்ணாயிரம் திடுக்கிட்டு.. பிணம் எங்கே இருந்துச்சு என்று கேட்க..டிரைவரோ.. நீங்க இருக்கியளே அந்த இடத்திலேதான் அந்த முரடன் பிணம் இருந்துச்சு என்று சொல்ல கண்ணாயிரத்துக்கு வியர்த்தது.
பூங்கொடியிடம் பூங்கொடி.. இங்கே காத்துவரமாட்டேங்குது.. இந்தப் பக்கம் வாரீயா என்று கேட்க.. பூங்கொடியோ இவ்வளவு நேரம் அங்கேதான இருந்திய.. இப்ப மட்டும் என்ன.. அங்கேயே இருங்க என்க. கண்ணாயிரம் திண்டாடினார்.
ஒரே பக்கமா இருக்கக் கூடாது பூங்கொடி. .இடுப்பு வலிக்கும்.. இந்த பக்கம் வா என்று கண்ணாயிரம் சொல்ல பூங்கொடியோ.. ம் கதையெல்லாம் விடாதீங்க..பாடி இருந்த இடத்திலே நான் இருக்கமாட்டேன் என்றார்.
கண்ணாயிரம்..ம் .. உஷாராயிட்டியா.. நான் முன்பக்க சீட்டுக்குப் போறேன் என்க.. டிரைவர் வேகமாக..அங்கே இருங்க.. நீங்க முன்னே வந்தா காரை ஓட்டமுடியாது.. பின்னாலயே இருங்க.. என்க கண்ணாயிரம்.. அய்யோ பேய் என் கழுத்தை நெரிச்சா என்ன பண்ணுவேன் என்று அழ ஆரம்பித்தார்.
டிரைவர் சிரித்து ரசித்தபடியே காரை ஓட்டினார்.
கண்ணாயிரம் இருக்கையை விட்டு இறங்கி உட்கார்ந்தார். டிரைவர் லைட்டை அணைக்க கண்ணாயிரம் ஓ.. என்று கத்தினார்.(தொடரும்)
-வே.தபசுகுமார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.