June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

’கேப்டன்’ விஜயகாந்த் கடந்து வந்த பாதை….

1 min read

he journey of ‘Captain’ Vijayakanth…

28.12.2023
தமிழ் சினிமாவின் ‘கேப்டன்’ விஜயகாந்த். சிவந்த கண்களும் மிடுக்கானத் தோற்றமும் கம்பீரம் குறையாத வள்ளல் குணமும் கொண்டவர். நட்பும் பிறருக்கு உதவும் தன்மையும் விஜயகாந்த் பற்றி காலம் கடந்தும் பேசப்படும் விஷயங்களாக இருக்கும். ‘மீண்டும் எழுந்து வா தலைவா’ எனத் தொண்டர்கள் கண்ணீரில் கரைய அவர் சினிமாவிலும் அரசியலிலும் செய்த விஷயங்கள் ஒரு பரபர சினிமாவுக்கான பல திருப்பங்கள் கொண்ட களம்.

சினிமாவைக் கொண்டாடும் மதுரையில், அழகர்சாமிக்கும் ஆண்டாளுக்கும் மகனாகப் பிறந்த விஜயராஜூக்கு இயல்பிலேயே சினிமா ஆர்வம் இருந்ததில் ஆச்சரியமில்லை. சினிமா ஆர்வம் அவரது படிப்பிற்கும் தடைபோட்டது. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிப்பு ஏறியது. ஆனால், எம்.ஜி.ஆர். நடித்தப் படங்களை காட்சி மாறாமல் சொல்லும் அளவுக்கு சினிமா பித்து தலைக்கேறியது. ஆனாலும் ஆரம்ப காலங்களில், அவர் விரும்பிய அந்த மாயாஜால உலகம் அவரை சிவப்பு கம்பளம் இட்டு வரவேற்கவில்லை. அவரது கருப்பு நிறமும், உருவமுமே சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க பெரும் தடையாக இருந்தது.

ஆனாலும், மனம் தளரவில்லை. தொடர் முயற்சியின் பலனாக 1979 ஆம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை’ படத்தில் கிடைத்த முதல் வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். விஜயராஜ்… விஜயகாந்த் ஆனார்.

சட்டம் ஒரு இருட்டறை’,அம்மன் கோவில் கிழக்காலே’, ’வைதேகி காத்திருந்தாள்’, ‘வானத்தைப் போல’, ‘ரமணா’ எனப் பல வெற்றிப்படங்களைக் கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவரை வேண்டாம் என்று ஆரம்பத்தில் சொன்ன சினிமா, அதன் பிறகு அவரை விடவே இல்லை. கிட்டத்தட்ட 1984 ஆம் ஆண்டு மட்டும் 18 படங்களில் நடித்துள்ளர் விஜயகாந்த்.

நடிகராக மட்டுமில்லாமல், நடிகர் சங்க தலைவராகவும் இருந்தார் விஜயகாந்த். கிட்டத்தட்ட நொடிந்து போன தொழிற்சாலைக்கு தலைவரானது போல தான். அத்தனைக் கடனில் சிக்கித் தவித்தது நடிகர் சங்கம். அவர் தலைவராக பதவியில் இருந்த காலம் தான் நடிகர் சங்கத்தின் பொற்காலம் என சிலாகிக்கின்றனர் திரைத்துறையினர். 1999 ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் விஜயகாந்த். பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி முழுவதுமாக அடைத்தார்.

மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார். அதுமட்டுமல்லாது, 2002 ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது, நடிகர்களை ஒன்றிணைத்து போராட்டம் ஒன்றை நெய்வேலியில் நடத்தினார்.

ஈழத்தமிழர்கள் மீதும் பிரபாகரன் மீதும் தனிப்பற்றுக் கொண்டவர் விஜயகாந்த். ஈழத்தமிழர்களுக்காக பல போராட்டங்களில் பங்கு பெற்றிருக்கிறார். தனது 100வது படத்திற்கு `கேப்டன் பிரபாகரன்’ எனப் பெயர் வைத்து நடித்தது மட்டுமல்லாது, தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் எனவும் பெயர் வைத்து, பிரபாகரன் மீதான தனது அன்பை வெளிப்படுத்தினார்.

எம்.ஜி.ஆர். ரசிகரான விஜயகாந்த் பின்னாளில் அவரது பாணியிலேயே சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவதற்கான அடித்தளமிட்டார். இவரின் நகர்வுகளைப் புரிந்து கொண்டு பல தரப்பில் இருந்தும் நெருக்கடிகள் அதிகமானது. பின்பு ரசிகர்களை சந்திப்பது, மக்களை சந்திப்பது என அதிரடி காட்டத் தொடங்கிய விஜயகாந்த் 2005 ஆம் ஆண்டு, செப்டம்பர் 14ல் தன் சொந்த ஊரான மதுரையில் ’தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ கட்சியைத் தொடங்கினார்.

அதன்பிறகு, 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 8 சதவீத வாக்கு வங்கியைப் பெற்று கெத்துக் காட்டினார். அதன்பிறகு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது தே.மு.தி.க. இந்தத் தேர்தலில்தான் தே.மு.தி.க முதல் முறையாக சட்டமன்றத்தில் எதிர்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. ஆனால் அதே ஆண்டு, விஜயகாந்துக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு, அ.தி.மு.க – தே.மு.தி.க கூட்டணி முறிந்தது.

பிறகு 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க., வி.சி.க., த.மா.கா., கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகித்த மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலைச் சந்தித்தார் விஜயகாந்த். ஆனால் அந்தக் கூட்டணி, தேர்தலில் படுதோல்வி அடைந்தது. இலவச திருமண மண்டபம், பல புயல், வெள்ள பாதிப்புகளுக்கு சொந்த செலவிலேயே உதவியது என ஏராளமான விஷயங்கள் அவர் செய்திருந்தாலும் அவரது உடல்நிலையும் அவரது அரசியல் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தது.

உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த விஜயகாந்த், குணமடைந்து வீடு திரும்பியதும் தொண்டர்களைப் போல தமிழக மக்களும் சந்தோஷப்பட்டனர். தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். இதுவே நடிகர் விஜயகாந்தின் கடைசி பொதுக்கூட்டமாக அமைந்தது சோகம்.

நேற்று முன் தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருவதாக நேற்று தேமுதிக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை நடிகர் விஜயகாந்த் காலமானார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *