விஜயகாந்த் காலமானார்
1 min read
Vijayakanth passed away
28.12.2023
அரசியல் களத்திலும், சினிமா களத்திலும் சாதித்து காட்டியவர், விஜயகாந்த்.
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சமீப காலமாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். சில வாரங்களுக்கு முன் அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை இறந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது.
விஜயகாந்த் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் குறிப்பில், விஜயகாந்த் இறுதிப் பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரின் இல்லத்துக்கு நேரில் சென்ற விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு ஆகியோர் சென்றனர்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “அன்பிற்கினிய நண்பரும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர். நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர். குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். கலைஞர் கருணாநிதியின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர்.
தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளை கருணாநிதி தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த், நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது கலைஞரின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர். கலைஞர் கருணாநிதி உடல்நலன் குன்றியிருந்தபோது, நேரில் வந்து உடல்நலன் விசாரித்து சென்றதுடன், அவர் மறைவெய்தியபோது, வெளிநாட்டில் இருந்த விஜயகாந்த் கண்ணீர் மல்க காணொளி அனுப்பி தன் இரங்கலைத் தெரிவித்ததையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராகச் சென்னை கடற்கரையில் உள்ள அவரின் ஓய்விடம் சென்று தன் வணக்கத்தைச் செலுத்தியதையும் எவரும் மறக்க முடியாது.
தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்த் உடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. கலைஞர் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனான நடித்த ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற படத்தில், கலைஞர் எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது. அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை. நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது.
கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த்தின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு, கேப்டன் விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இறுதி சடங்குகள் நாளை மாலை நடக்கிறது. உடல் அடக்கம் அங்கேயே நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
விஜயகாந்த் உடலுக்கு திரளான சினிமா உலக பிரமுகர்களும், கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.