May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

திறந்திருந்த கண்ணாயிரம் வீடு/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Open Kannayiram Veedu/ comedy story / Tabasukumar

31.12.2022
கண்ணாயிரம் பாளையங்கோட்டையிலிருந்து புதுவைக்கு வாடகை காரில் சென்றபோது டிரைவரிடம் பயப்படாமல் கார் ஓட்டுங்க என்று சொல்ல அவரோ நானே பாடியை வச்சி காரை ஓட்டிட்டுப் போயிருக்கேன் என்று சொல்ல கண்ணாயிரம் அஞ்சி நடுங்கினார்.
காரில் இருக்கையை விட்டு இறங்கி போர்வையை விரித்து படுத்த போது லைட்டை அணைக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்துவிட்டு தூங்கியவர் திடீரென்று எழுந்தபோது லைட்டு அணைந்திருந்தது.
அப்போது பூங்கொடி சரியாக மூடாமல் மடியில் வைத்திருந்த பெட்டியிலிருந்து உள்பாடி தொங்கி ஆடியதை கண்ணாயிரம் இருட்டில் உண்மையிலே சின்ன பாடி தொங்குவதாக நினைத்து அலற.. பூங்கொடி கோபத்தில் கண்ணாயிரம் தலையில் குட்டு வைக்க.. கண்ணாயிரம் அலறினார்.
காரை நிறுத்திய டிரைவர்.. என்ன ஆச்சு என்று விசாரிக்க பூங்கொடி வெட்கத்துடன்.. ஒண்ணுமில்ல.. ஒண்ணுமில்ல.. நீங்க லைட்டை அணைக்காம காரை ஓட்டுங்க என்றவாறு கண்ணாயிரத்தை முறைத்தார்.
கண்ணாயிரமோ..ம் உண்மையிலே எனக்கு இருட்டிலே பயங்காட்டும் பாடியாத்தான் தெரிஞ்சுது. லைட்டை போட்டப்பிறகுதான் அது உள்பாடின்னு தெரிஞ்சுது என்று அசடு வழிந்தார்.
சத்தம் காட்டாம படுத்து தூங்குங்க..என்ற பூங்கொடி பெட்டியை திறந்து வெளியே தெரிந்த உள்பாடியை உள்ளே திணித்தார். கண்ணாயிரத்தை இங்கே பாக்காதீங்க.. அங்கே பாருங்க என்று கன்னத்தில் பூங்கொடி இடிக்க..கண்ணாயிரம்..சுருண்டு படுத்தார்.கார் வேகமாக செல்ல..கண்ணாயிரம்..அட..இந்த பாடி வந்து தூக்கத்தை கெடுத்துட்டு..பூங்கொடி ஏன் அதை போடாம பெட்டிக்குள் வச்சிருக்கா..ஒண்ணுமே புரியல..காரிலதான போறோம் ஏன் போடணுமுன்னு நினைச்சிட்டாளோ..நான் அப்படியா எல்லாம் போட்டிருக்கேன்..என்று முணங்கினார்.
அங்கே என்ன சத்தம் என்று பூங்கொடி அதட்ட..கண்ணாயிரம் ஒண்ணுமில்ல.. என்று பயந்து படுத்துக்கொண்டார்.கார் குலுங்கி குலுங்கி சென்றது.சிறிது நேரத்தில் குறட்டை விட்டார்.கார் ஒரு திருப்பத்தில் சென்றபோது பூங்கொடி தடுமாறி கண்ணாயிரம் காலில் மிதிக்க..அவர் கத்த..ஒழுங்கா காலை மடக்கி படுக்கமாட்டியளா..என்று சத்தம் போட்டார்.
கண்ணாயிரம் ஆ..என்று மீண்டும் கத்த பூங்கொடி..ஏன் கால் காள் காள் என்று கத்திறீய..என்க கண்ணாயிரமோ..காலில் மிதித்தால் கால் கால் என்றுதான் கத்துவாங்க..வேறு எப்படி கத்துவாங்க என்று கேட்டார். பூங்கொடி கோபத்திலும் சிரித்துக்கொண்டு..சரி..சரி..இம்சை பண்ணாதீங்க..தூங்குங்க என்று சொன்னார்.

கண்ணாயிரம் காலை மடக்கி வைத்துக்கொண்டு தூங்கத்தொடங்கினார்.
கார் விழுப்புரத்தை வந்தடைந்தது.கண்ணாயிரம் மெல்ல விழித்துப் பார்த்தார். விழுப்புரம் வந்தாச்சுங்க..சீக்கிரம் புதுவை வந்திரும். விடியும் முன்னே போயிடலாம் என்றார் பூங்கொடி.அதைக்கேட்டதும் கண்ணாயிரம் விழுப்புரமா..என் பிரண்டு சின்ன கண்ணாயிரம் இங்கேத்தான் இருந்தான். இப்போ எங்கே இருக்கான்னு தெரியல என்று கண்ணாயிரம் கண்களை துடைத்துக்கொண்டார். கார் மின்னல் வேகத்தில பறந்தது. ஏங்க விழிச்சிருங்க..என்று பூங்கொடி அதட்ட கண்ணாயிரம்..நான் விழிப்பாத்தான் இருக்கேன்..நீ விழிப்பா இரு…பெட்டி கிட்டி காணாம போயிடப் போகுது என்றார்.
பூங்கொடி..ஏங்க தூங்காம முழிச்சிருங்கன்னு சொன்னா..அதுக்கு கிண்டலா என்றபடி பற்களை கடிக்க கண்ணாயிரம் எழுந்து உட்கார்ந்தார்.

கார் வில்லியனூரை கடந்து புதுவை லாஸ்பேட்டையை நோக்கி விரைந்தது.
அதிகாலை நான்கு மணி.
கண்ணாயிரம் வீட்டை கார் நெருங்கியது. பூங்கொடி ..ம்..அப்படி நேரா போங்க..உழவர் சந்தை பக்கம்..வீடு என்று டிரைவரிடம் சொல்ல.. கார் அங்கு சென்று நின்றது.
கண்ணாயிரம்..அப்பாட..வீடு வந்தாச்சு..ரொம்ப தேங்ஸ் என்று டிரைவரிடம் கூறினார்.
டிரைவரோ..தேங்ஸ் மட்டும் போதாது.. காசு வரணும் என்று சொல்ல.. கண்ணாயிரம்.. ஆமால்ல.. மறந்திட்டேன்.. பூங்கொடி தருவா என்றபடி தனது சூட்கேஸ், தடி, தொப்பி, கண்ணாடி ஆகியவைகளுடன் காரைவிட்டு இறங்கினார்.
கண்ணாயிரத்தை பார்த்து தூரத்தில் நின்ற ஒரு நாய் கத்த. ..ரொம்ப நாளா பாக்கலன்னு கத்துது..ஏய் குலைக்காதே..அண்ணன் வந்துட்டேன்ல்ல..என்று கண்ணாயிரம் சொல்ல.. பூங்கொடியோ.. சத்தம் போடாதீங்க.. கடிச்சிப்புடும்.. உங்களை வேறு யாரோன்னு நினைக்குது என்று சொன்னார்.

டிரைவரிடம் ரூபாயை கொடுத்துவிட்டு பெட்டி படுக்கையுடன் வீட்டை நோக்கி நடந்தார். கார் டிரைவர் கண்ணாயிரத்திடம் பயப்படாம போங்க என்று சொல்லிவிட்டு வேகமாக காரை ஓட்டிச்சென்றார். கண்ணாயிரம்..ம். நீங்க பயப்படாம போங்க என்று சொல்லியவாறு தெருவில் சூட்கேசுடன் நடந்து சென்றார்.
இருட்டாக இருந்தது. சிறிது தூரம் நடந்தவர்.. பதினான்காம் நம்பர் வீடு.. நம்ம வீடு .. ஆ வந்துட்டு என்று நெருங்கினார்.
பூங்கொடி சாவியை எடு திறப்போம் என்க கண்ணாயிரத்திடம் பூங்கொடி சாவியை எடுத்துக் கொடுத்தார்.
கண்ணாயிரம் சாவியை வாங்கி கதவை திறக்க பக்கத்தில் சென்றபோது கதவு திறந்திருப்பது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணாயிரம்..ஏய் பூங்கொடி.. சுற்றுலா போகும் போது கதவை பூட்டிட்டு வந்தியா..என்று கேட்க.. பூங்கொடி ஏன்..பூட்டிட்டுதான் வந்தேன். உங்களைக் கூட பாத்துட்டு வரச்சொன்னேனே.. பாத்துட்டு வந்தியளா.. இல்லையா என்று கேட்டார்.
கண்ணாயிரம்..என்ன சந்தேகப்படுறீயா.. நான் தூரத்தில் நின்னுப் பார்த்தேன். வீடு பூட்டிதான் இருந்துச்சு என்றார்.
பூங்கொடி கோபமாக..பஸ் புறப்பட்டுவிட்டது என்று அவசரப்படுத்தியதால்.. கதவை பூட்டினேனா இல்லையா என்று சந்தேகம் வந்ததால்தான் உங்களை பாத்துட்டு வரச்சொன்னேன்.. நீங்கள் தள்ளிப்பாத்து செக் பண்ணலையா.. தூரத்தில் நின்னுதான் செக் பண்ணினியளா.. உங்களை நம்பி ஒரு காரியத்தை விட முடியாது.. வீட்டில என்ன பொருள் இருக்கோ இல்லையோ.. தெரியலையே என்றபடி பூங்கொடி கதவை தள்ள கதவு திறந்து கொண்டது.. அடே..கதவு தள்ளினவுடன் திறந்துட்டு.. என்ன பூங்கொடி என்றவாறு வீட்டுக்குள் கண்ணாயிரம் காலடி எடுத்துவைக்க.. உள்ளே நின்ற சேவல் கொக்கிரக் கோ..கோ..என்று கூவியது. அய்யய்யோ..இது அந்த சேவல் அல்லவா.. கழுத்தில மஞ்சள் பூசியிருக்கு.. ஆவியை விரட்ட கொண்டு போன சேவலாகிட்டே என்று சொல்ல பூங்கொடி.. அதை விரட்டுங்க.. அதுவீட்டை சுத்தக் கூடாது.. என்று கத்த கண்ணாயிரம் சோ..ச்சோ..போ.. பூங்கொடி கோபமா இருக்கா போ..என்று சத்தம் போட்டார்.
கோழி பறந்து சென்றது.
பதட்டத்துடன் வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்தார்.
-வே.தபசுக்குமார்.புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.