May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்துக்கு இதய அஞ்சலி/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Heartfelt Tribute to Kannayira/ Comedy Story/ Tabasukumar

2.1.2024
கண்ணாயிரம் பாளையங் கோட்டையிலிருந்து புதுவைக்கு வாடகை காரில் மனைவி பூங்கொடியுடன் அதிகாலை வந்து இறங்கினார்.வீட்டின் கதவை திறக்க முயன்றபோது கதவு ஏற்கனவே திறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கதவை சரியாக பூட்டாமல் சென்றுவிட்டதை பூங்கொடி சொன்னதும் கண்ணாயிரம் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே போனார்.
உள்ளே நின்ற சேவல் கொக்கரக்கோ என்று ஓடிவர.. ஆவியை விரட்ட கொண்டு போன சேவலாச்சே என்று கண்ணாயிரம் சொல்ல.. பூங்கொடி விரட்டுங்க என்று கத்த கண்ணாயிரம் விரட்ட சேவல் பறந்து சென்றது.
பின்னர் பெட்டி படுக்கையுடன் பூங்கொடி வீட்டுக்குள் சென்றார்.
கண்ணாயிரம் சூட்கேஸ், கைத்தடி கண்ணாடியுடன் அப்பாட.. என்றபடி உள்ளே காலடி எடுத்துவைத்தார்.
அப்போது..ஏதோ ஒன்றை எடுக்காமல் வந்துவிட்டதுபோல் அவருக்கு மனதில் பட்டது.. என்னது.. ஞாபகம் வர மாட்டேங்குதே என்று கன்னத்தில் விரல் வைத்து யோசித்தபோது ..ஆ..ஞாபகம் வந்துட்டு..ஞாபகம் வந்துட்டு.. தாமிரபரணி தண்ணி.. பக்கெட்டை எங்கே..காணம்..பூங்கொடி நீ காரிலிருந்து எடுத்துட்டு வரலைய்யா..என்று கேட்டார்.
பூங்கொடி..கோபத்தில் ஏங்க..அது உங்க சமாச்சாரம்.. அதை நீங்கதான் பாத்து எடுத்துட்டுவரணும்.. எல்லாத்தையும் நானா பாக்கமுடியும் என்று ஏசினார்.
கண்ணாயிரம்.. அய்யய்யோ.. தாமிரபரணி தண்ணி.. கஷ்டப்பட்டு பக்கெட்டில் எடுத்திட்டு வந்தேன்.. காரில எடுக்காம விட்டுட்டேனே.. டிரைவரும் சொல்லாம விட்டுட்டாரே .. இனி நான் என்ன செய்வேன் என்று புலம்பினார்.
பூங்கொடி கத்தாதீங்க.. காரில இருந்து எல்லாத்தையும் கீழே இறக்கிவச்சேனே.. பக்கெட்டையும் இறக்கிவச்சைன்.. கார் நின்ன இடத்திலே போய் பாருங்க.. இருக்கும் என்றார்.
கண்ணாயிரம்..ஆ.. எனக்கு பயமாக இருக்கு. நீயும் வா.. என்று பூங்கோடியை அழைத்தார்.
சரி வாங்க.. என்றபடி பூங்கொடி வேகமாக கண்ணாயிரத்தை கையை பிடித்துக்கொண்டு.. நடந்தார்.
கார் நின்ற இடத்தில் பக்கெட் அனாதையாக ..இருந்தது.
பூங்கொடி..பாத்தியளா..பக்கெட் இருக்கு.. நீங்க. தூக்கிட்டு வருவீங்கன்னு நான் இருந்தேன்.. நான் தூக்கிட்டு வருவேன்னு நீங்க இருந்திருக்கீங்க.. தூக்குங்க பக்கெட்டை என்று அதட்ட கண்ணாயிரம் ஓடிப் போய் பக்கெட்டை தூக்கினார்.
அப்பாட.. தாமிரபரணி தண்ணி கிடைச்சிட்டு.. பூங்கொடி யாருக்கிட்டேயும் சொல்லாத.. தாமிரபரணி தண்ணிக்கு அடியிலே தாமிரம் படியும் .. அதை எடுத்து நாம விக்கலாம் என்றார்.
பூங்கொடி.ம்.. என்றபடி நடந்தார்.
கண்ணாயிரம் வீட்டில் பாதுகாப்பாக ஓரிடத்தில் தாமிரபரணி தண்ணீர் உள்ள பக்கெட்டை வைத்தார்.
பூங்கொடி.. ஏங்க பாத்ரூம் போய் கை காலெல்லாம் கழுவிவிட்டு வந்து படுங்க.. விடியிரத்துக்கு இன்னும் நேரம் இருக்கு என்றார்.
கண்ணாயிரமும் சரி என்று தலையை ஆட்டிவிட்டு பாத்ரூம் போய் கை காலை கழுவிவிட்டு துண்டால் துடைத்தார்.
உ..ஆ..என்று கொட்டாவி விட்டவர்.. பூங்கொடி என் கட்டிலை ஏன் தள்ளிப் போட்டே.. ஜன்னலுக்கு பக்கத்திலே படுத்தாத்தான் காத்து வரும் எனக்கு நல்லா தூக்கம் வரும் என்றபடி ஜன்னல் பக்கத்தில் கட்டிலை தள்ளினார்.
ஏங்க..நீங்கதான் ஜன்னலை பேய் தட்டுது நாய் தட்டுதுன்னு சொன்னீங்க.. அதான் கட்டிலை தள்ளிப் போட்டேன் என்று பூங்கொடி சொல்ல.. கண்ணாயிரமோ.. இப்பெல்லாம்.. நான் பயப்படுறதே இல்லை. தெரியுமா.. என்றபடி ஜன்னல் கதவை திறந்தார்.
கட்டிலில் போர்வையை விரித்தவர்.. பூங்கொடி என் மேலே மூடுறதுக்கு உன் சேலையைக் கொடு என்க.. பூங்கொடி..ம்..அதெல்லாம் முடியாது.. தூக்கத்திலே கிழிச்சிப்புடுவீங்க.. ஏற்கனவே ஒரு சேலை கிழிஞ்சிக் கிடக்கு.. பேசாம உங்க வேட்டியை மூடி படுங்க என்றார்.
கண்ணாயிரம்.. ம்.. சேலை கிடைக்காதா.. சரி பரவாயில்ல.. என்றபடி ஒரு வேட்டியை எடுத்தார்.. கட்டிலை ஓங்கி இரண்டு தட்டு தட்டினார். ஏதாவது பூச்சி பொட்டு இருந்தா போயிடும்.. என்றபடி கட்டில் உட்கார்ந்தார்.
தூசிதான் பறந்தது.ம். என்ன இவ்வளவு.. தூசி..ச்சே.. என்று துண்டை வைத்து ச்சோ..ச்சோ என்று வீசினார்.
பூங்கொடி..என்னங்க.. லைட்டை அணைச்சிட்டு படுங்க..நான் உள் ரூமில படுத்துக்கிறேன் என்றார்.
கண்ணாயிரம் சரி என்றவாறு கட்டிலில் படுத்தார்.
ஜன்னலை திறந்துவைத்ததால் கொசு சர் என்று பறந்துவந்தது. ஆ..இது வேற..தொல்லை.. என்று துண்டால் விரட்டினார்.
போகவில்லை.. நாமதான் ஜன்னலை திறந்தோம்..இனி பூட்டினால் பயந்திட்டேன் என்று பூங்கொடி கேலி பண்ணுவா.. அது சரிப்பட்டு வராது .. ஜன்னல திறந்தே இருக்கட்டும் என்று நினைத்தார்.
அப்போது அவரது தோளில் வந்து ஒரு கொசு கடித்துவிட்டு செல்ல..ம்.. அடிக்கிறதுக்குள்ளே தப்பிட்டியா.. போ..போ..நான் என்ன பண்ணுறேன்னு பார் என்றார்.
பின்னர் வேட்டியை எடுத்து மூக்கு வாய் மட்டும் கொஞ்சம் வெளியே தெரியுமாறு வேட்டியால் உடம்பை முழுவதுமாக சுற்றினார்.
ஆ..இனி எந்த கொசும்.. ஒண்ணும் பண்ணமுடியாது ..கண்ணாயிரத்துக்கிட்டேயே விளையாட்டு காட்டுறீயா நீயா..நானா பாப்போம் என்று சவால் விட்டபடி லைட்டை அணைத்துவிட்டு சாய்ந்து கட்டிலில் படுத்தார்.
ஆ..காரில் வந்து அலுப்பு..அடிச்சிப் போட்ட மாதிரி இருக்கு.. ஒரு நாள் புள்ளா தூங்கணும் என்றபடி கொட்டாவி விட்டார். சிறிது நேரத்தில்..குறட்டை சத்தம் கேட்டது. கட்டில் காலை கையை நீட்டி வாய் பிளந்தபடி தூங்கிக்கொண்டிருந்தார்.
விடிந்தது. கண்ணாயிரம் விழிக்கவில்லை. சூரிய ஒளி ஜன்னல் வழியாக அடித்தது. ஊரில் உள்ள பெண்கள்.. ஜன்னல்வழியாக எட்டிப்பார்த்தனர்.. ஆமா..பாடி வந்துட்டு.. வாயை கட்டாம இருக்கு.. இப்படி சுற்றுலா போனவர்.. ஆக்சிடென்டுல போவாரா.. எப்படியெல்லாம் சிரிக்கவைப்பார்.. இப்படி போய்விட்டாரே.. என்று அனுதாபப்பட்டனர்.
எதை பற்றியும் கவலைப்படாமல் கண்ணாயிரம் தூங்கிக் கொண்டிருந்தார்.வீடு பூட்டிக் கிடக்க..பாடியை எப்போ எடுப்பாங்களோ தெரியலையே.. பூங்கொடி எங்கே போனா..என்று பெண்கள் முணுமுணுத்தனர்.
அப்போது சங்கு ஊதியபடி தாரை தப்பட்டையுடன் சிலர் கண்னாயிரம் வீட்டின் அருகே வந்தனர்.
டொம்..டொம்..டொம்..என்று டிரம்ஸைஅவர்கள் அடித்த அடி..கண்ணாயிரம் காதில் பயங்கரமாக கேட்டது..
என்னது காலையிலே தூக்கத்தைக் கெடுக்கிறமாதிரி டிரம்ஸ் சத்தம்..யாரு மண்டையைப் போட்டுட்டா..தெரியலையே என்றவர் எழுந்து உட்கார்ந்தார்.
என்ன சவுண்டு காது கிழியுது..என் வீட்டு முன்னாலதான் வந்து டிரம்ஸை அடியோ அடின்னு அடிக்கணுமா..ஒரு விவஸ்தையே இல்லையே..என்றவர் கோபத்தில் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார்.
எதிரே உள்ள சுவரில் ஒட்டியிருந்த போஸ்டரைபார்த்தார். அதில் கண்ணாயிரம் படம் போடப்பட்டிருந்தது.
ஆ.நல்லா கலர் படம் போட்டிருக்காங்களே.. என்ன எழுதியிருக்கு.. எங்கள் இதயம் கவர்ந்த இதயத்துக்கு கண்ணீர் அஞ்சலி.. உங்கள் பிரிவால்வாடும் நடுத்தெரு நண்பர்கள் குழு.. என்று குறிப்பிடப்பட்டிருந்தது. என்ன..கொஞ்ச நாளா ஊரைவிட்டுசுற்றுலா போனோம்..அந்த பிரிவை தாங்க முடியாம இப்படி போஸ்டர் அடிச்சிருக்காங்களே.. நம்ம நண்பர்களை என்ன சொல்லுறது .எப்படி புகழுறது. என்னமா எழுதியிருக்காங்க..என்று கண்ணாயிரம் புகழ்ந்தார்.
அப்போது ஊ..ஊ..என்று சங்கு சத்தம் வேகமாக கேட்டது..இதை ஏன் ஊதுறாங்க..என்று கண்ணாயிரம் நினைத்த நேரத்தில் பூங்கொடி..என்ன சத்தம் என்றவாறு எழுந்து வந்தார்.
கண்ணாயிரம் அவரிடம்..பூங்கொடி எனக்கு இன்னைக்கு பிறந்த நாளுன்னு யாருக்கிட்டேயும் சொன்னியா..அதோ பார் போஸ்டர் எல்லாம் அடிச்சி ஒட்டியிருக்காங்க.. டிரம்ஸ் எல்லாம் அடிக்கிறாங்க..என்று அப்பாவியாக சொன்னார்.
பூங்கொடி ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். இதய அஞ்சலி போஸ்டரை படித்தவர்.. கோபத்தின் உச்சிக்கு சென்றவர்..ஆ..என்று கத்தினார்.
ஏங்க..இது உங்க பிறந்த நாளுக்கு அடிச்ச போஸ்டர் இல்லங்க.. டிரம்ஸ் சத்தம்..வேற எதுக்கோ அடிக்கிற சத்தம் மாதிரி தெரியுது.. ஏன் வேட்டியை இப்படி சுத்தியிருக்கீங்க..ஏதோ செத்துப் போன பாடிக்கு சுத்தியிருக்கிற மாதிரி வேட்டியை சுத்தியிருக்கிய..கழற்றி தூரப் போடுங்க..என்று ஏசினார்.
கண்ணாயிரம் விவரம் புரியாமல் விழிக்க..கையில் மாலையுடன் நண்பர்கள் குழுவினர் கண்ணாயிரம் வீட்டை நோக்கிவந்து கொண்டிருந்தார்கள்.
அதைப்பார்த்த பூங்கொடிக்கு தலை சுற்றியது.
-வே.தபசுக்குமார்..புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.