May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

மாப்பிள்ளை கோலத்தில் கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayiram in Mappillai Golam/ comedy story/ Tabasukumar

16.1.2024
கண்ணாயிரம் பாளையங்கோட்டையில் சிகிச்சை முடிந்து புதுவைக்கு வந்தார்.ஆனால் அவர் விபத்தில் இறந்துவிட்டதாக போஸ்டர் ஒட்டப்பட்ட சூழ்நிலையில் கண்ணாயிரத்தின் மாமனார் அருவாஅமாவாசைக்கு கண்ணாயிரத்தின் நண்பர்கள் செல்போனில் மர்கயா என்று சொல்ல அதை அவர் கண்ணாயிரத்தூக்கு மறுகல்யாணம் என்று நினைத்தார்.

கண்ணாயிரத்திடம் நியாயம் கேட்க வேண்டும் என்று ஊரிலிருந்து காரில் வந்தவர் அரிவாளுடன் கண்ணாயிரம் வீட்டுக்கு வேகமாக நடந்து சென்றார்.

என்ன நடக்கப் போகுதோ என்று பயந்து கண்ணாயிரத்தின் நண்பர்கள் பின்னால் சென்றனர்.கண்ணாயிரம் வீடு பூட்டிக் கிடந்தது.அதைப் பார்த்த அருவா அமாவாசை மீசையை முறுக்கினார்.

நான் வருவது முன்கூட்டியே தெரிந்துவிட்டது போலிருக்குது.அதான் என்னிடமிருந்து தப்பிக்க கதவை பூட்டிக்கிட்டு இருக்கான்.. விட மாட்டேன்…என்று கொக்கரித்தவர்.. ஏய் கண்ணாயிரம்..ஏய்..கதவை திறடா..என்று கத்தினார்.
பாட்டுப்பாடி குளித்துக்கொண்டிருந்த கண்ணாயிரத்துக்கு அது சரியாகக் கேட்கவில்லை. யாரோ சத்தம் போடுகிறார்கள் என்று நினைத்தவர்.. நான் உன்னை அழைக்கவில்லை..
என் உயிரை அழைக்கிறேன்.. என்று வேகமாகப் பாடினார்.

அதைக்கேட்ட அருவா அமாவாசை..டேய்..என்னை எப்படிடா அழைப்ப.. நான்தான் உனக்கு எதிரியாயிற்றே.. என் மகா கல்லுமாதிரி இருக்கா.. அப்புறம் வேற கல்யாணமா.. உயிரை அழைக்கிறாராம்.. உயிரை.. ஏய் உன்னை வெட்டாம விடமாட்டேன்டா.. கதவை திறடா..என்று கத்தினார்.

அப்போது.. கண்ணாயிரம்.. என்ன தவறு செய்தேன்..அதுதான் எனக்கும் தெரியவில்லை.. நான் சின்னக் குழந்தையம்மா.. என்று மனம்போன போக்கில் பாட.. அருவா அமாவாசை டென்சன் ஆனார்.

டேய்..என்ன தவறு செய்தேன் என்று உனக்கே தெரியலையா.. அதுவும் சின்னக் குழந்தையாமுல்லா.. எப்படி ஏமாத்துறான் பாருங்க.. இரண்டாம் கல்யாணம் பண்ணப் போறான்..ஒண்ணும் தெரியாதாம்..டேய்..கதவைத் திறடா..என்று சத்தம் போட்டார்.

அப்போதும் கதவு திறக்கப்படவில்லை.

அருவா அமாவாசை கோபத்தில் அருவாளால் தரையில் வெட்டியபடி..ஏய்.. கண்ணாயிரம் வெளியே வா.. உன்னை ஒண்ணும் செய்யமாட்டேன் என்க.. அங்கே வந்த டிரம்ஸ் குழுவினர். .டொம்..டொம்..டொம்..டொம்..என்று இசைக்க..யாருடா.. அவங்க. எனக்கு. இடைஞ்சலா மேளம் தட்டுறது.. நிறுத்தூங்கடா என்று அதட்டினார்.

பின்னர் கண்ணாயிரம்.. கண்ணாயிரம்.. உன் மாமன் வந்திருக்கேன்.. உன் நண்பர்கள் வந்திருக்காங்க.. டிரம்ஸ் அடிக்கிறவங்க வந்திருக்காங்க.. மற்றும் உன் உறவுக்காரங்க எல்லாம் வந்திருக்காங்க.. வாய்யா.. கண்ணாயிரம்.. என்று செல்லமாக அழைத்தார்.

இந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று பூங்கொடி கதவின் அருகே வந்து காதை வைத்துக் கேட்டார்.

அப்போது அருவா அமாவாசை..ம்..கண்ணாயிரத்தைக் கூப்பிட்டு பிரயோசனம் இல்லை. மகளை கூப்பிடுவோம் என்று நினைத்தவர் பூங்கொடி.. மகளே பூங்கொடி என்று கூப்பிட்டார்.

அதைக் கேட்ட பூங்கொடி..ஆ..அப்பா குரல் போலத்தான் இருக்கு.. நாம குற்றாலத்திலிருந்து வந்தது தெரிந்து வேகமாக வந்துட்டாரா என்று நினைத்தவாறு கதவைத்திறந்தார்.

அங்கே அருவாளும் கையுமாக அருவா அமாவாசை நின்று கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்ததும் பூங்கொடி..அப்பா என்று அழுதபடி..வெளியே வர..அருவா அமாவாசை..மகளே..இப்படி ஆயிட்டேம்மா என்று அழுதார்.

சுற்றுலா பஸ் விபத்தில் கண்ணாயிரம் காயம் அடைந்து சிகிச்சை பெற்றதைத்தான் நினைத்து அருவா அமாவாசை அழுவதாக கருதிய பூங்கொடி..
அழாதீங்கப்பா.. நீங்க பயப்படுறமாதிரி ஒண்ணும் நடக்கலப்பா..என்று சொல்ல அருவா அமாவாசையோ.. நீ சின்னப் பொண்ணும்மா..உனக்கு விவரம் பத்தாது. அதான் அப்படி சொல்லுறா.. கண்ணாயிரம்.. ஏங்கிட்ட ஒரு வார்த்தை போன் பண்ணிக்கூடச் சொல்லலையே என்று சொல்ல..பூங்கொடியோ பஸ் விபத்தைத்தான் அருவாஅமாவாசை சொல்வதாக நினைத்து…அப்பா..அதைச் சொன்னா.. நீங்க தாங்கமாட்டீங்கன்னுதான் சொல்லலை..என்றார்.

அருவா அமாவாசை..கண்ணாயிரத்தின் இரண்டாம் திருமணத்தைச் சொல்வதாக எண்ணி..உன்னையே பேசவிடமா பண்ணிட்டானம்மா..தகவல் தெரிஞ்சி இப்போ வந்திருக்கேன்..என் நெஞ்சு தாங்கமாண்டேக்கம்மா..என்று அழுதார்.
பூங்கொடியும் கண்ணாயிரம் மேல் அருவா அமாவாசை அதிக பாசம் வைத்திருப்பதாக நினைத்து.. அழாதுங்க.. அவர் நல்லா ஜம்முன்னு புதுமாப்பிளை மாதிரி இருக்காருப்பா.. இப்பொ அவரைப் பாத்தாலும் அசந்து போவீங்க என்று சொன்னார்.

அதைக் கேட்ட அருவா அமாவாசை..ஏம்மா.. நீயும்சின்னப் பொண்ணுமாதிரிதான் இருக்க.. உனக்கு என்ன குறைம்மா.. குழந்தை இல்லாதது ஒரு குறையாம்மா..என்று கேட்டார்.

அதை ஏம்பா..இப்போ கேட்கிறீங்க..உங்க மாப்பிளைக்கு என்ன வயசாயிட்டா..இப்பக் கூட அவருக்கு இரண்டாம் கல்யாணம் பண்ணலாம். அப்படி..இளமையா இருக்காரு.. என்று சொல்ல..அருவா அமாஅமாவாசை..அய்யய்யோ..என் பிள்ளை இப்படி ஏமாத்திவச்சிருக்கானே.. ஏய் கண்ணாயிரம்..நீ எங்கேடா.. இருக்க.. என்று கத்த அவர் ..குளிச்சிக்கிட்டு இருக்காருப்பா.. என்று பூங்கொடி சொன்னார். அப்படியா.. இரண்டு நாளைக்கு ஒருமுறைதானே குளிப்பான்..இன்னைக்கு காலையிலே குளிக்கிறானா..என்று அருவா அமாவாசை சொல்ல.. பூங்கொடியோ..நான்தாப்பா..அவரை குளிக்கச் சொன்னேன் என்க..அய்யய்யோ.. நீயே குளிக்கச் சொன்னீயா என்க.. பூங்கொடி ஆமாப்பா..என்றார்.

அருவா அமாவாசை..ம்.. அவனா குளிக்கமாட்டான்.. ஆனா..அதிலே விவரமா இருக்கானே..என்று சொல்ல..பூங்கொடியோ.. ஆமாப்பா.. அவர் ரொம்ப விவரம் ஆனவர்.. போலீஸ்காரங்களே அவரைப் பாராட்டினாங்க.. என்று சொன்னார்.. அதுக்காக..பொண்டாட்டி இருக்கும்போதே..இப்படியா..என்று அருவா அமாவாசை இழுக்க.. அவர் நல்லவர்.. எந்த தப்பும் பண்ணமாட்டார் . ஏதாவது உங்களிடம் தவறா சொன்னாங்களா என்று கேட்டார்.

அருவா அமாவாசை..ம்..பிறகு சொல்லுறன்..கண்ணாயிரம் இன்னுமா குளிக்கிறான் என்க..அப்போது கண்ணாயிரம் குரல் கேட்டது. பூங்கொடி..நான் குளிச்சிட்டேன்..எந்த வேட்டியை உடுக்கிறது.. கல்யாண பட்டு வேட்டி சட்டைதான் புதுசா இருக்கு என்று சொல்ல.. பூங்கொடியோ..அப்படியா.. கல்யாண பட்டு வேட்டி ,சட்டையையே போட்டுட்டு நெற்றியில் சந்தன பொட்டுவச்சி மாப்பிளையா வாங்க..என்றார்.

அதைக்கேட்ட அருவா அமாவாசை.. என்ன மாப்பிளையாகவா என்க.. பூங்கொடியோ..கல்யாண பட்டு வேட்டி சட்டை போட்டு வந்தா மாப்பிளைதானே என்றார்.

அருவா அமாவாசை..ம்..என் புள்ளையை ஏமாத்திவச்சிருக்கான்..எத்துவாளிப்பய..வரட்டும் என்றுமனதில் நினைத்துக்கொண்டார். அருவாளை எடுத்து மேஜையில் வைத்தார். இதை ஏம்பா..கொண்டாந்தீங்க..என்று பூங்கொடி கேட்க..அவரோ கண்ணாயிரத்துக்காகத்தான் என்றார்.

பூங்கொடியோ உண்மை அறியாமல்..இங்கேதான் இரண்டு அருவா இருக்கேப்பா..பிறகு எதுக்கு அவருக்கு புது அருவா..நீங்களே வச்சிக்கிடுங்க என்றார்.

இது கண்ணாயிரத்துக்கு ஸ்பெஷல் அருவா ..என்றார். அருவா அமாவாசை.

பூங்கொடியோ.. நீங்களாச்சு..உங்க மருமகனாச்சு.. இதில நான் தலையிடல என்க..அருவா அமாவாசை.. அப்படி சொல்லும்மா..நான் பாத்துக்கிறேன்..என்றார்.

இந்த நேரத்தில் கண்ணாயிரம்.. கல்யாண பட்டு வேட்டி சட்டை பளபளக்க சந்னப் பொட்டுடன்.. வாயெல்லாம் பல்லாக சிரித்தபடி முன் அறைக்கு வந்தார்.அருவா அமாவாசையைப் பார்த்து மாமா.. வணக்கம் என்று கைகுவிக்க.. அருவா அமாவாசை.ஆத்திரத்தில் டேய்..உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா இரண்டாம் கலியாணத்துக்கு ரெடியாவ.. உன்னை கொல்லாம விடமாட்டேன் அருவாளுடன் பாய கண்ணாயிரம் பயந்து போய் தலை தெறிக்க உள் அறைக்குள் ஓடி கதவை சாத்திக்கொண்டார்.
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.