May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை மிரட்டவந்த அருவாஅமாவாசை/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

The Arua Amavasai that threatened Kannayira/ comedy story/ Tabasukumarm

13/1/2024
கண்ணாயிரம் சுற்றுலா சென்றபோது பஸ் கவிழ்ந்ததால் பாளையங்கோட்டையில் சிகிச்சைப் பெற்றுவிட்டு புதுவை வந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் விபத்தில் இறந்துவிட்டதாக இதய அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டதால் கண்ணாயிரம் நண்பர்கள் கையில் மாலையுடன் தப்பட்டை முழங்க அஞ்சலி செலுத்த வந்த போது கண்ணாயிரம் மனைவி பூங்கொடி அவர்களை உள்ளேவிடாமல் தடுக்க.. அவர்கள் பாடி எங்கே என்று கேட்க டிரங்க் பெட்டியில் இருக்கு என்று சொல்ல இந்த நேரத்தில் கண்ணாயிரம் பாத்ரூமில் இருந்து பாட அவர்கள் என்ன சத்தம் என்று கேட்க கண்ணாயிரம் பாடி பாடுறார் என்று சொல்ல அவர்கள் தலை தெறிக்க ஓடி பூங்கொடியின் தந்தை அருவா அமாவாசைக்கு செல் போனில் சொன்னார்கள். கண்ணாயிரம் செத்துவிட்டதாக சொல்ல நினைத்தவர்கள் அதை இந்தியில் கண்ணாயிரம் மர்கயா என்று சொல்ல.. அதை அரைகுறையாகக் கேட்ட அருவா அமாவாசை கோபம் கொண்டு கண்ணாயிரம் மறுகல்யாணம் செய்யப் போவதாக தகவல் சொல்வதாக நினைத்து குழந்தை இல்லை என்று மறுகல்யாணமா பண்ணப் போறான் இதோ அரிவாளுடன் வருகிறேன் என்று எச்சரித்து போனை கட்பண்ணினார்.

அதைக் கேட்ட நண்பர்கள் தலையைய் பிய்த்துக்கொண்டு என்ன செய்வது என்று யோசித்தனர். அருவா அமாவாசை வந்தா ஏதாவது சொல்லி சமாளிப்போம் என்று மாலையுடன் காத்திருந்தனர். அப்போது அருவா அமாவாசை வாடகைக் காரில் வேகமாக அங்கு வந்தார்.
அவரைப் பார்த்த கண்ணாயிரம் நண்பர்கள் காரை மறிக்க அருவா அமாவாசை மீசையை முறுக்கியபடி.. காரை நிறுத்து என்று சொல்ல டிரைவர் காரை நிறுத்தினார்.
என்ன..என்று அருவா அமாவாசை கேட்க.. அவர்கள்..நாங்க கண்ணாயிரம் நண்பர்கள்.. செல்போனிலே நாங்கதான் பேசினோம்..என்றனர்.
அருவா அமாவாசை கோபத்தில்.. உங்களைப் பாத்தாலே தெரிகிறது. கையிலே மாலையோட நிக்கிறீங்களே.. கண்ணாயிரம் மறுகல்யாணத்துக்குப் போறதுக்குத்தானே ரெடியா இருக்கீங்க.. என்று அதட்டினார்.
அதற்கு அவர்கள்..அது வந்து. நாங்க மர்கயா என்று சொன்னது என்று இழுக்க.. அருவா அமாவாசையோ..ம்.. நீங்க மறுகல்யாணம் என்கிறதை சுருக்கி மர்கயான்னு மறைச்சி சொன்னீங்க..செல் போனில..அரை குறையா கேட்டிச்சி..ஆனா நான் விவரமானவன்.. நான் விவரமானவன்..என்னை யாரும் ஏமாற்றமுடியாது… ஆமா என்றார்.
அவர்கள் அழாத குறையாக..மர்கயா என்பது இந்தி வார்த்தை..அதுக்கு தமிழில் வேற அர்த்தம் என்று இழுக்க.. அருவா அமாவாசையோ.. ம்.. நீங்க..உங்க நண்பரை காப்பாற்ற..எதையோ சொல்லி சமாளிக்கிறீங்க.. நான் நம்பமாட்டேன்.. இது என்ன.. மோளம் செட்.. ஓ..கண்ணாயிரம்..மறு கல்யாணத்தை டிரம்ஸ் அடிச்சி தடபுடலா பண்ணுறானா..விடமாட்டேன் என்று கத்தினார்.
அவர்கள்..அருவா அமாவாசை சார் கோபப்படாதீங்க..நாங்க என்ன சொல்ல வர்ரோமுன்னா என்று இழுக்க அவரோ.. ஒண்ணும் சொல்ல வேண்டாம்.. முறைப்பையன் என்று கண்ணாயிரத்துக்கு என் மகளை கட்டிக் கொடுத்தேன்.. குழந்தை இல்லை.. கடவுள் கண்ணு திறக்கல.. அதுக்காக மறு கல்யாணம் பண்ணுவானா.. நானே.. காமா சோமான்னு இருந்த அவனுக்கு பொண்ணைக் குடுத்தேன்.. வீட்டு செலவெல்லாம் நான் பாத்துக்கிட்டேன்.. குற்றாலத்துக்குக் கூட நான்தான் பணம் கொடுத்து சுற்றுலா அனுப்பிவச்சேன்.. நன்றி மறந்துட்டு மறுகல்மாணம் பண்ணுவானா.. தொலைச்சிடுவேன் தொலைச்சி என்று பற்களைக் கடித்தார்.
அவர்கள்..உடனே..நீங்க.. ஆத்திரப்படாதீங்க..கண்ணாயிரம் நல்லவர்தான் ..அவரை தப்பா..சொல்லாதீங்க என்க.. அருவா அமாவாசை அருவாளை தூக்கிக்கொண்டு கார் கதவை வேகமாக திறந்துகொண்டு கீழே இறங்கினார்.. என்னய்யா நல்லவன்..முதல் பொண்டாட்டி இருக்கும்போது மறுகல்யாணம் செய்யப் போறவன் நல்லவனா.. அவன் நல்லவனா சொல்லு.. உடைஞ்ச புடலங்காய் மாதிரி இருக்கிற அவனுக்கு மறு கல்யாணத்துக்கு பொண்ணு கொடுக்கிற மடையன் யாரு..அவனை முதலில் வெட்டணும்..யார் அவன்.. அதைச் சொல்லுங்க என்று மிரட்டினார்.
அவர்கள் சற்றுப் பயத்துடன்.. அருவாளை உள்ளேவையுங்க.. நாங்க சொல்லுறதை நீங்க தப்பா புரிஞ்சிக்கிடுறீங்க.. கண்ணாயிரம் நல்லவர் என்க.
அருவா அமாவாசை ஆத்திரத்தில்..அவன் நல்லவனா.. குற்றாலத்துக்கு டூர் போயிட்டு வந்தவன்.. மாமா பத்திரமா வந்திட்டேன் அப்படின்னு ஒரு போன் போட்டு சொல்லலாமல்லா.. எவ்வளவு காசாகப் போகுது.. காசு கேட்டா கொடுக்கப் போறோன்.. அவன் ரகசிய கல்யாணம் பண்ணுறதுக்காகத்தான் எனக்கு தகவல் தெரிவிக்காம இருந்துட்டான்.. என்று சொல்ல.. அவர்கள்.. ரகசியம் எல்லாம் ஒண்ணுமில்ல என்க.. அருவா அமாவாசை.. ஆமா. ரகசியம் என்ன இருக்கு..ஊருக்கேத் தெரியுதே.. எனக்கே தெரிஞ்சிட்டே.. மறுபடி என்ன.. சோப்பளாங்கி மாதிரி இருந்தான்.. கண்ணாயிரம் அவனுக்கு மறுமணமா.. என் பொண்ணு அப்பாவி.. தாயில்லா பொண்ணு அவளை ஏமாத்தப் பாக்கிறானா.. அவனை விடமாட்டேன்.. எப்போ கல்யாணம்.. என்று பதட்டமாகக் கேட்டார்.
அதற்கு அவர்கள்..நாங்க சொல்லுறதை நீங்க புரிஞ்சிக்கிடமாட்டிங்கிறீய என்க.. அருவா அமாவாசை.. யோவ். எனக்கு நல்லா புரிஞ்சிப் போச்சி.. நீங்க கண்ணாயிரத்துக்கு நல்லா ஜால்ரா அடிக்கீங்க.. உங்களை நம்பி பிரோஜனம் இல்லை. நான் நேரடியாப் போய்ப்பாக்கிறேன் என்று கிழம்ப.. அவர்கள்.. நீங்க அவசரப்படாதீங்க.. அதை எப்படி சொல்லுறதுன்னு எங்களுக்கு தெரியல.. அதைச் சொன்னா நீங்க தாங்கமாட்டீங்க.. அதோ ஒட்டியிருக்கிற போஸ்டரைப்பாருங்க என்று சொன்னார்கள்.
அருவாஅமாவாசை கோபத்தில்.. ஆ.. மறுகல்யாணத்துக்கு போஸ்டர் வேற அடிச்சிருக்கானா.. எவன் அப்பன் வீட்டு காசு.. கலர் படம் எல்லாம் போட்டிருக்கான்.. என்க.. அதுக்கு கீழேவாசிங்க.. என்று அவர்கள் சொல்ல..அந்த கொடுமையை நான் வாசிக்கவிரும்பல.. கண்ணாயிரத்துக்கும் இன்னொரு பொண்ணுக்கும் கல்யாணமுன்னு போட்டிருக்கும். அதை நான் வாசிக்கணுமா.. என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் அது நடுத்தெரு நண்பர்கள் குழு..அடிச்ச போஸ்டர்.. அது நாங்க அடிச்சதுதான் என்று பெருமிதமாச் சொல்ல.. யோவ்.. என் மகளுக்கு எதிரா நடக்கிற திருமணம்..அதுக்கு போஸ்டர் அடிச்சிட்டு.. அதை என்னிடம் காட்டி.. என்னையே படிக்கச் சொல்லுரீங்களா.. எவ்வளவு.. திமிர் உங்களுக்கு என்று அரிவாளை ஓங்க.. அவர்கள்..அய்யய்யோ அவசர படாதீங்க.. உங்களுக்கு எதிராக நாங்க இல்லை.. போஸ்டரைப் படிச்சா உங்களுக்கு உண்மை புரியும் கொஞ்சம் படிங்க என்க.. அருவா அமாவாசை.. போஸ்டர் ஒட்டியச் சுவரை வெறித்துப்பார்த்தார்.
இ..த..ய..என்று எழுத்துக்கூட்டிப்படிக்க… இன்னும் படிங்க.. அப்படித்தான்.. என்று அவர்கள் அவசரப்படுத்த.. அருவா அமாவாசை ம்.. முடியலப்பா.. கண்ணாடியை வேற வீட்டிலே மறந்துவச்சிட்டுவந்துட்டேன்.. எழுத்து மங்கலா தெரியுதப்பா.. என்க அவர்கள்.. கிழிஞ்சதுபோ.. என்று தலையில் அடித்துக்கொண்டனர்.
கண்ணாயிரம் மறைந்துவிட்டார் என்பதை எப்படிதான் அருவாஅமாவாசைக்கு புரியவைப்பது என்று நினைத்தவர்கள். சங்கு ஊதுகிறவனைப்பார்த்து ஊதுடா என்றார்கள்.
அவன் ..சங்கை எடுத்து. துடைத்துவிட்டு.. ப்புஊஊஊ..ப்ஊஊஊ. என்று சத்தமாக ஊத….அருவாஅமாவாசை.. டென்சனாகி…யாருய்யா அவன் அபசகுணமா சங்கு ஊதுறது… அடிச்சி விரட்டுங்கய்யா.. என்க..அவர்கள் தலையைச் சொரிந்தார்கள்.
எப்படிதான் புரியவைப்பது என்று நினைத்தவர்கள்.. ஒரு மலர் வளையத்தை எடுத்து அருவா அமாவாசை முன் அப்படியும் இப்படியும் அசைக்க கண்..1000 அஞ்சலி.. என்று எழுதப்பட்ட எழுத்துக்கள்..அவருக்கு சரியாகத் தெரியவில்லை.
என்னதான் நீங்கள் கண்ணாயிரத்துக்கு நண்பராக இருந்தாலும்..கண்ணாயிரம் மறுமணத்துக்கு இப்படியெல்லாம் சங்கு ஊதி கலாய்க்கக்கூடாது என்று எச்சரித்தார்.
இதனால் எரிச்சலான நண்பர்கள் யோவ்..மறுமணத்தை தவிர வேறு ஒண்ணும் உமக்கு நினைவுக்கு வராதா..கண்ணாயிரம் செத்தான்ய்யா..என்று சொல்ல.. என்மகளை விட்டுட்டு அவன் எப்போ வேறு பொண்ணை கல்யாணம் பண்ண நினைச்சானோ.. அப்பவே அவன் என்னைப் பொறுத்தவரை செத்தவன்தான்.. அவனை நாக்கைப் புடுங்கிறமாதிரி நாலு வார்த்தை கேட்கணும் என்றவாறு அருவாளை வீசியபடி அருவா அமாவாசை வேகமாக..கண்ணாயிரம் வீட்டை நோக்கி வேகமாக நடந்தார்.
கண்ணாயிரம் நண்பர்கள் அதிர்ச்சியில் அப்படியே நின்றனர்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்,புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.