May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

அருவா அமாவாசை பிடியில் கண்ணாயிரம்/ நகைச்சுவைக் கதை / தபசுகுமார்

1 min read

Kannayiram under the control of Arua Amavasi / comedy story / Tabasukumar

20.1.2024
கண்ணாயிரம் பாளையங்கோட்டையிலிருந்து புதுவை வந்து வீட்டில் ஜாலியாகக் குளித்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில் கண்ணாயிரம் விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் பரவ கண்ணாயிரத்தின் மாமனார் அருவா அமாவாசைக்கு மர்கயா என்று இந்தியில் போனில் சொல்ல அதை கண்ணாயிரத்துக்கு மறுகல்யாணம் என்று நினைத்த அருவா அமாவாசை அருவாளுடன் வந்து கதவைத் தட்டினார்.
பட்டு வேட்டி சட்டையுடன் மாப்பிளை கோலத்தில் வந்த அவரை அருவா அமாவாசை மிரட்ட கண்ணாயிரம் உள் அறைக்குச் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார். வடக்கு தெரு ராமசாமி அறுபது வயதில் இரண்டாம் திருமணம் செய்யும்போது நான் இரண்டாம் திருமணம்செய்யக் கூடாதா என்று கண்ணாயிரம் எகிற அது அறுபதாம் கல்யாணம் என்று அருவா அமாவாசை சொல்ல இல்லை அது இரண்டாம் திருமணம்தான் கண்ணாயிரம் சொல்ல படபடப்பில் அருவாஅமாவாசை மயங்கி விழுந்தார்.
உடனே பூங்கொடி செம்பில் தண்ணீர் கொண்டுவந்தார். அருவாஅமாவாசை வைத்திருந்த அருவாளை எடுத்து வீட்டின் ஒருபக்கத்தில் ஒளித்து வைத்துவிட்டு மீண்டும் அருவாஅமாவாசையை நோக்கி ஓடிவந்தார்.
அப்பா..இப்படி மயங்கி விழுந்திட்டியளே.. என்று சொல்லியவாறு அருவாஅமாவாசை முகத்தில் தண்ணீரை ஓங்கி அடித்தார். அதில் அவர் மயக்கம் தெளிந்து.. நான் இப்போ எங்கே இருகுகேன் என்று கேட்க. பூங்கொடியோ..
அப்பா.. நீங்க.. மகா வீட்டிலே இருக்கீங்க என்க.. நீங்க யாரு என்று அருவாஅமாவாசை கேட்க.. பூங்கொடியோ
.அய்யோ.. நான் உங்க மகா பூங்கொடி.. நல்லா என்னை உற்றுப்பாருங்க.. என்று சொன்னார்.
அருவா அமாவாசை தலையை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு.. ஆமா
.நீ என் மகா இல்ல நீ முழுகாம இருக்கால்ல.. ஆமா..நியாபகம் வந்துட்டு.. ஞாபகம் வந்துட்டு.. இந்த இரண்டாம் கல்யாணம் பண்ணப் போகிறேன் என்று சொன்ன கண்ணாயிரத்தை எங்கே.. என்னையே மயங்கி விழவச்சிட்டானே.. அவனை விடமாட்டேன்.. என்று கத்தியவர்.. ஆமா. அருவா வச்சிருந்தேனே. .எங்கே.. இந்த கண்ணாயிரம் எடுத்து ஒளிச்சி வச்சிட்டானா.. டேய். .உன்னை என்ன செய்யுறேன் பாரு.. என்று தள்ளாடியபடி எழுந்தார்.
ஏய் வடக்குத் தெரு ராமசாமி செய்தது அறுபதாம் கல்யாணம் என்று ஒத்துக்கொள்ளுடா.. என்று கெஞ்சினார். கண்ணாயிரம்..ம் அது முடியாது..உங்களுக்கு கணக்கு சரியாத் தெரியல.. உங்களுக்கு நான் அறுபது ரூபாய் தரணுமுன்னு வச்சிக்கிங்க.. இரண்டு ஒரு ரூபாயை தருகிறேன் என்று வச்சிக்கிங்க.. நீங்க நான் இரண்டு ரூபாய் தந்ததாகச் சொல்வீங்களா.. அறுபது ரூபாய் தந்ததாகச் சொல்வீங்களா என்க. .அருவா அமாவாசையோ..அதுவா இரண்டு ரூபாய்தான் தந்ததாகச் சொல்வேன் என்றார்.
அப்படியென்றால் வடக்குத் தெரு ராமசாமி முதலில் ஏற்கனவே திருமணம் செஞ்சிட்டாரு.. ரொம்ப நாள் கழிச்சி இப்போ இரண்டாவது முறையாக திருமணம் பண்ணியிருக்காரு.. இது இரண்டாம் திருமணம்தானே என்றார்
உடனே அருவா அமாவாசை.. டேய்..அறுபது வயசில் இரண்டாவதாக திருமணம் செய்தாலும் அதை இரண்டாம் திருமணம் என்று சொல்லக்கூடாது
.அறுபதாம் கல்யாணம் என்றுதான் சொல்லவேண்டும்
.புரியுதா என்றார்.
கண்ணாயிரம்.. அப்படின்னா அறுபது வயசு கல்யாணம் என்று சொல்லலாமல்லா.. ஏன் அறுபதாம் கல்யாணமுன்னு சொல்லணும் என்று கேட்டார்.
அதற்கு அருவா அமாவாசை..தலையில் கைவைத்தவாறு..மாப்பிளை..உன் அறிவு யாருக்கும் இல்லைடா. இனி எல்லோரும் அறுபது வயது கல்யாணமுன்னே சொல்லணுமுன்னு அறிவிப்பு வெளியிடுவோம் டா..ஆளைவிடு..என்றார்.
இப்போ அருவாளை எங்கேடா ஒளிச்சி வச்சே.. கொடுடா..அதை கையிலே வச்சி பேசினால்தான் எனக்கு வீரம் வரும்..அதை கொடுடா என்றார்.
கண்ணாயிரம்.. அருவாளா. அதை நான் பார்க்கவில்லை.. என்க அருவா அமாவாசை மீண்டும் உஷ்ணமானார்… டேய் என் கோபத்தை கிழப்பாதேடா.. அருவாவைக் கொடு என்று கெஞ்ச.. பூங்கொடியோ..அப்பா..நீங்க ஏன் அவரிடம் கெஞ்சிறீங்க.. நான் வாங்கித் தர்ரேன்..வாங்க குளிச்சிட்டு சாப்பிடுங்க.. என்க.. ஏய் என்னை திசை திருப்பாத..கண்ணாயிரம் இரண்டாம் கல்யாணம் பண்ணப் போறேன்னு சொல்லுறான்.. நீ அவனுக்கு சப்போட் பண்ணுற.. நீ முழுகாம இருக்க..அப்புறம் ஏன் இரண்டாம் கல்யாணம் பண்ணப் போறேன்னு சொல்லுறான் என்று கத்தினார்.
அப்பா..அறுபதாம் கல்யாணத்தைத்தான் அவர் இரண்டாம் கல்யாணமுன்னு சொல்லுறாரு.. நீங்க பயந்திட்டிங்களா.. என்னைத்தவிர வேறு ஒரு பொண்ணை அவர் நிமிர்ந்து பாத்திடுவாரா?
தோலை உரிச்சிடமாட்டேனா..என்று சொன்னார்.
அருவா அமாவாசை.. அப்படியாம்மா..என்க உங்களுக்கு சந்தேகமுன்னா.. இரண்டாம் கல்யாணத்துக்கு பொண்ணு யாரு என்று அவரிடம் கேளுங்க என்று பூங்கொடி சொன்னார்.
உடனே.. ஏய் உன் இரண்டாம் திருமணத்துக்கு பொண்ணு யாருடா என்று கேட்க.. அருவா அமாவாசை கேட்க..கண்ணாயிரம் வேகமாக.. பூங்கொடி என்று கத்தினார்.
அதைக் கேட்ட.. அருவா அமாவாசை..அட..படுக்காளிப்பயல.. இதை முதலில விவரமா சொல்லியிருக்கலாமுல்லா.. என்று சிரித்தவர்.. ஏய் என்னை ஏமாத்தப் பாக்கிறீயா.. உனக்கு மறுகல்யாணமுன்னு உன் நண்பர்கள் போனில் சொன்னாங்களே அது பொய்யா என்று அருவா அமாவாசை கேட்டார்.
உடனே பூங்கொடி..அவங்க எப்படிப்பா சொன்னாங்க..என்று கேட்க.. ஏதோ மர்கயா..மர்கயா என்று இந்தியிலே சொன்னாங்க என்றார்.
என்ன மர்கயாவா..இந்தியிலே சொன்னாங்களா
மர்கயான்னா என்ன..இந்தி தெரிஞ்சிக்கிறதுக்காக.. உங்க மாப்பிளை ஒரு இந்தி புக் வாங்கி வச்சிருக்கார்.. அதில பார்ப்போம் என்ற பூங்கொடி இந்தி புக்கை புரட்டி ..அதில் மர்கயாவுக்கு என்ன பொருள் என்று தேடினார்..மர்கயா..மர்கயா..ஆ.மர்கயா..இருக்கு..மர்கயா என்றால் இறந்துவிட்டார் என்று பொருள்.. ஆ.. தயோளிப்பயல்வ..கண்ணாயிரத்தை கலாய்க்கிறதுக்கா அப்படி சொல்லியிருக்காங்க..போஸ்டர் வேற ஒட்டி அஞ்சலி செலுத்த மாலையோடு வந்திட்டானுவ..அவங்கள என்ன செய்யுறன் பாருங்க என்று கத்தினார்.
அருவாஅமாவாசையும்..என்ன கொடுமை கண்ணாயிரம் சார்..இப்படி உயிரோடு இருக்கிறவரை செத்துப்போயிட்டார் என்று சொல்லுறதா..-? என் அருவாளை எங்கே ..நான் அவங்களை ஒருவழிப் பாக்கமாக விடமாட்டேன் என்றார்.
பின்னர் ஏதோ நினைவு வந்து..ஆமா..கண்ணாயிரம் ஏன் இன்னைக்கு கல்யாண வேட்டி சட்டை போட்டிருக்கான்.. என்ன விஷேசம் என்று அருவா அமாவாசை கேட்க..பூங்கொடி சிரித்தவாறு அவருக்கு இன்னைக்கு ஐம்பது வயசுப்பா.. அதான் குளிச்சிட்டு பட்டு வேட்டி சட்டை போட்டிருக்கார் என்று சொன்னார்.
அதைக் கேட்ட அருவா அமாவாசை.. அது எப்படி.. ஆடி மாசம் பிறந்தாத்தானே.. கண்ணாயிரத்துக்கு ஐம்பது வயசுபிறக்கும் ..இன்னும் ஆடிமாசம் பிறக்கலையே என்றார்.
உடனே பூங்கொடி..அப்பா.. ஆதார்படி அவருக்கு இன்னைக்கு பிறந்தநாள்.. ஜாதகப்படி அவருக்கு ஆடிமாதம் பிறந்ததும் பிறந்தநாள் என்றார்.
அதைக்கேட்ட அருவா அமாவாசை.. ஓ..அப்படியா.. மாப்பிளைக்கு பிறந்தநாளா என்று வாயெல்லாம் பல்லாக சிரித்தார்.
கதவை பூட்டிக்கொண்டு ஜன்னல்வழியாக எட்டிப்பார்த்த கண்ணாயிரத்தைப் பார்த்து.. மாப்பிள்ளே..என்றார்.
கண்ணாயிரமும் மாமா என்று ஜன்னல் கம்பி வழியாக கைநீட்ட.. அருவா அமாவாசையும்.. கண்ணாயிரம் கையைப் பிடித்துக்கொண்டு மாப்பிளை என்க.. இருவரும் கண்ணீர் விட்டார்கள்..
கதவை திறந்து வாடா என்று அருவா அமாவாசை சொல்ல..கண்ணாயிரமோ..நான் வரமாட்டேன்..நான் வந்தா நீங்க அடிப்பீங்க என்க..அட அடிக்கமாட்டேன் என்று அருவாஅமாவாசை சொல்ல.. நான் நம்பலாமா என்று கண்ணாயிரம் கேட்டார்.
உன் மேல் சத்தியமா..நான் அடிக்கமாட்டேன் என்று அருவா அமாவாசை சொல்ல..உங்க மேல சத்தியமா சொல்லுங்க..அப்பதான் நம்புவேன் என்று கண்ணாயிரம் சொன்னார். அடே…அடடே..என் மேலே சத்தியமா அடிக்கமாட்டேன்.. வாய்யா கண்ணாயிரம் என்க..கண்ணாயிரம் கதவை திறந்துகொண்டு வெளியேவந்தார்.
அருவா அமாவாசை..வா மாப்பிளே..என்க..கண்ணாயிரம் வாங்க மாமா..என்க..மாப்பிளே..மாமா..மாமா மாப்பிளே என்று இருவரும் மாறி மாறி சொல்ல..அருவா அமாவாசை இறுக்கமாக கண்ணாயிரத்தை மடக்கிப்பிடித்தார்.அவர் பிடியில் கண்ணாயிரம் திணறியபோது..சொல்லு அருவாளை எங்கே மறைச்சி வச்சே..என்று அருவா அமாவாசை கேட்க..கண்ணாயிரம்..ஓ..என்று அழுதார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.