குற்றாலம் அருகே போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை- உறவினர்கள் போராட்டம்
1 min read
Policeman hangs himself near Tenkasi – Relatives protest
20.2.2024
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள ஆயிரப்பேரியில் போலீஸ்காரர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள ஆயிரப்பேரி புதூர் காலணி பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி என்பவரது மகன் மூர்த்தி (வயது 30) இவர் செங்கோட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மூர்த்தி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆயிரப்பேரி புதூர் பகுதியில் மூர்த்தியின் உறவினர்கள்
அந்தப் பகுதியில் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மூர்த்தியுடன் பணி புரிந்த மூன்று போலீசார் தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் மன அழுத்தம் ஏற்பட்டு மூர்த்தி விடுப்பில் இருந்ததாகவும் இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அந்த மன அழுத்தத்தில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவே இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரையில் உடலை வாங்க மாட்டோம் என்று கூறினார்கள்.
தகவல் அறிந்த தென்காசி காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையில் போலீசார் ஆயிரப்பேரி புதூர் காலணி பகுதிக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட மூர்த்தியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது மூர்த்தியின் மரணத்திற்கு ரூபாய் ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.காவலர் மூர்த்தியின் தற்கொலைக்கு காரணமான மூன்று போலீசார் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.
இது பற்றி காவல்துறை சார்பில் கூறியதாவது செங்கோட்டை காவல் நிலையத்தில் மூர்த்தி காவலராக பணிபுரிந்து வந்தார்.சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக விடுப்பு எடுத்து இருந்தார். விடுப்பு முடிவடைந்த பிறகும் பணியில் சேரவில்லை.இந்நிலையில் அவரது பெற்றோர் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்திருந்தனர்.அதன்படி பெண் பார்த்து பேசி முடித்து ள்ளனர்.ஆனால் அந்த திருமணத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்து உள்ளார். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பும் ஒருமுறை மூர்த்தி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்து உள்ளார்.
காவலர் மூர்த்தி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் விசாரணை முடிந்த பிறகு சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும். என்று காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமாதானம் அடையவில்லை. எனவே இன்றும் காவல்துறை சார்பில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதன்பின் மூர்த்தியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.