கயத்தாறில் கார் விபத்து: வள்ளியூர் டாக்டர் தம்பதி உள்பட 3 பேர் பலி
1 min read
Car accident in Kayathar: 3 people including Valliyur doctor couple killed
9/4/2024
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே கார் கவிழ்ந்த விபத்தில் வள்ளியூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் டாக்டர் ரவீந்திரன், டாக்டர் ரமணி ரவீந்திரன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் சுகம் மருத்துவமனை உள்ளது. இங்கு மருத்துவர்களாக டாக்டர் ரவீந்திரனும் இவரது மனைவி ரமணியும் இருந்தனர். இவர்களில் ரவீந்திரன் மயக்க மருந்தியல் துறை நிபுணர், குழந்தை மருத்துவமும் பயின்றுள்ளார்.
அது போல் ரமணி மகப்பேறு மருத்துவர் ஆவார். இருவருமே கைராசியான டாக்டர்களாக நெல்லை வள்ளியூரில் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை ரவீந்திரன், அவரது மனைவி ரமணி, தாய் சேர்மதாய் ஆகியோருடன் காரில் சிவகாசி சென்றனர்.
அங்கு இவர்கள் அலுவல்களை முடித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊரான வள்ளியூருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
காரை டாக்டர் ரவீந்திரன் ஓட்டினார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கார் வந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ரவிந்திரன், ரமணி, சேர்மதாய் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுடைய இறப்பு சுகம் மருத்துவமனையை மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.