June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

அப்துல் கலாமின் ஆசிரியர் 101 வயது சின்னதுரை மரணம்-முதல்வர் இரங்கல்

1 min read

Abdul Kalam’s teacher passes away at the age of 101

11.4.2024
மறைந்த அப்துல் கலாமின் ஆசிரியர் சின்னதுரை 101 வயதில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி புனித வளனார் கல்லூரியில் அப்துல்கலாம் படித்தபோது, அங்கு இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றியவா் திருச்சியைச் சோ்ந்த அருள்தந்தை எல்.சின்னத்துரை.

சுமார் 20 ஆண்டுகள் பேராசிரியராக இவா் பணிபுரிந்தார். தனது 41-ஆவது வயதில் இறைப்பணியாற்ற இயேசு சபையில் இணைந்து, 1970 -இல் இயேசு சபை அருள்தந்தையாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

திருச்சி தூய பவுல் குருமடத்திலும், திண்டுக்கல் பெஸ்கி கல்லூரியிலும் குரு மாணவா்களுக்குப் பேராசிரியராகவும், ஆன்ம குருவாகவும் சுமார் 30 ஆண்டுகள் இறைப்பணியாற்றினார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஆக.14-ஆம் தேதி கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அப்துல்கலாம், மதுரை செல்லும் வழியில் பெஸ்கி கல்லூரிக்கு வந்து தனது இயற்பியல் போராசிரியரும், அருள்தந்தையுமான சின்னதுரையைச் சந்தித்தார்.
அப்போது, அப்துல்கலாம் தான் எழுதிய ரீஇக்னைட் என்ற ஆங்கிலப் புத்தகத்தை அருள்தந்தை சின்னதுரைக்கு பரிசாக வழங்கினார். தமிழகத்தில் அப்துல்கலாம் பங்கேற்ற கடைசி நிகழ்வாகவும் இது அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திண்டுக்கல் பெஸ்கி இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்த அருள்தந்தை சின்னதுரை வயது முதிர்வு காரணமாக புதன்கிழமை காலமானார். இவரது இறுதிச் சடங்குகள் திண்டுக்கல் பெஸ்கி இல்லத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

திருச்சி புனித வளனார் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் முதலிய பல சான்றோர்களை உருவாக்கிய அருட்தந்தை லடிஸ்லாஸ் சின்னதுரை சே.ச (101) வயது மூப்பின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன்.

ஆசிரியப் பணியிலும் இறைத்தொண்டிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்து உள்ளார் அருட்தந்தை சின்னத்துரை.

அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், மாணவர்களுக்கும், அவரால் பயிற்றுவிக்கப்பட்ட அருட்பணியாளர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *