June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜனாதிபதியிடம் ராஜினாமா கடிதத்தை மோடி வழங்கினார்

1 min read

Modi submitted his resignation letter to the President

5.5.2024
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின. இதனால் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 3-வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது. மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா வருகிற 8-ம் தேதி மாலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் கூடியது. இதில் 17-வது மக்களவையை கலைக்க அமைச்சரவை பரிந்துரைத்தது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவரது இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்தார். மக்களவையை கலைக்க அமைச்சரவை பரிந்துரைத்த தீர்மானத்தை அளித்தார். மேலும் தனது பதவி மற்றும் அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் மோடி வழங்கினார். மோடியுடன் அமித்ஷா ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் ஜனாதிபதியை சந்தித்தனர். மோடி மற்றும் அமைச்சரவையின் ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்கள் கூட்டம் வருகிற 7-ம் தேதி நடைபெற உள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், மக்களவை குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்படுவார். மக்களவை குழு தலைவராக தேர்வான பிறகு ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க மோடி உரிமை கோருவார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *