June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

அவசர அவசரமாக மோடி பிரதமராக பதவி ஏற்கப்போவது ஏன்?- பரபரப்பு தகவல்கள்

1 min read

Why is Modi going to take office as Prime Minister in a hurry?- sensational news

7/5/2024
2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கட்சி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளிலும் பா.ஜ.க. மட்டுமே 300-க்கும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், கருத்துக்கணிப்பு முடிவுகளை முற்றிலும் பொய்யாக்கும் வகையில், பா.ஜ.க. கட்சி 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 2014, 2019 பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும் போது, தற்போதைய தேர்தலில் பா.ஜ.க. குறைந்த இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது.
இந்த நிலையில், நடைபெற்று முடிந்த தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெறாததால் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவதை ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை என்று சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மேலும், மோடிக்கு மாற்றாக வேறொரு நபரை பிரதமர் பதவியில் அமர வைப்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவின் அடுத்த பிரதமராக மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி ஆகியோரது பெயர்கள் அடிப்பட்டன. எனினும், இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடிக்கு எதிராகவே அமைந்துள்ளன. இதையடுத்து நரேந்திர மோடி தானாக முன்வந்து பிரதமர் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும். இதற்கு முற்றிலும் மாறாக அவர் மீண்டும் அரசமைக்க முயற்சித்து வருகிறார். இவ்வாறு செய்வது நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்று சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவதை ஆர்.எஸ்.எஸ். விரும்பாமல், வேறொரு நபரை பிரதமர் பதவியில் அமர வைக்கும் முயற்சிகளில் இறங்கியது. இருந்த போதிலும், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவதில் கவனம் செலுத்தி வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு கடந்த காலங்களில், மோடி-அமித் ஷா ஆகியோரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எந்த நேரமும், எதுவும் நடக்கலாம்,” என்று தெரிவித்தார்.
தேர்தல் வெற்றிக்கு பிறகு ஒவ்வொரு கட்சியும் முதற்கட்டமாக தனது எம்.பி.க்களை அழைத்து ஆலோசனை நடத்துவதே வழக்கம். இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்த கட்சியின் பாராளுமன்ற தலைவர் யார் என்பதும் தேர்வு செய்யப்படும். இதையடுத்து, மற்ற விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும்.

ஆனால், நரேந்திர மோடி தேர்தல் முடிவுகள் வெளியானதும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி தன்னை வெளிப்படுத்தி வந்தார்.

இதன் தொடர்ச்சியாக தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைய சந்திர பாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் ஆதரவு தெரிவித்து, நரேந்திர மோடியை பாராட்டி பேசினர்.
இதைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டார். மேலும், நாட்டின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடியை முன்மொழிவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இதையடுத்து அமித்ஷா, நிதின்கட்கரி இருவரும் மோடியை தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக தேர்வு செய்யும் தீர்மானத்தை வழிமொழிந்தனர். இதையடுத்து மோடி பிரதமராக தேர்வானது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான மூன்று நாட்களில் மீண்டும் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி தேர்வாகி இருக்கிறார். இந்த முறை கூட்டணி ஆட்சி அமைய இருப்பதை அடுத்து, புதிய ஆட்சி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *