குற்றாலம் பகுதியில் கனரக வாகனங்களுக்கு தடை-பேரூராட்சி தலைவர் அதிரடி
1 min read
Ban on heavy vehicles in the Courtalam area – City Council President takes action
3.7.2024
குற்றாலம் பேரூராட்சி இராமாலயம் பகுதி வழியாக கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் செல்ல குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
தென்காசி மாவட்டத்திலிருந்து நாள்தோறும் கனிம வளங்கள் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் மூலம் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த கனரக வாகனங்களால் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளும் பெரும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் நாள்தோறும் பல்வேறு விபத்துக்கள் நடைபெற்று ஏராளமான உயிர்கள் பலியாகி வருகின்றது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளின் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் கூட கனரக வாகனங்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட இராமாலயம் பகுதியில் பேரூராட்சி தலைவர் எம்.கணேஷ் தாமோதரன் கனரக வாகனங்கள் நுழைய முடியாத வகையில் தடுப்பு வளைவு அமைத்தும் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்ற பதாகையையும் வைத்துள்ளார். இதனால் குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட இராமாலயம் பகுதியில் கனரக வாகனங்கள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி தகவலறிந்த குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேரூராட்சி நிர்வாகம் மூலம் வைக்கப்பட்டுள்ள தடுப்புவளைவு மற்றும் பதாகையினை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினார்கள் .
அதற்கு குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவர் எம்.கணேஷ் தாமோதரன் குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட இராமாலயம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இருப்பதால் மாணவர்களின் நடமாட்டமும் அதிக அளவில் உள்ளது.
இந்த கனரக வாகனங்களால குற்றாலம் பேரூராட்சிக்கு சொந்தமான இராமாலயம் பகுதியில் உள்ள 40 அடி சாலை பெரும் சேதம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது இதுபற்றி பொதுமக்கள் நாள்தோறும் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்து வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் சுற்றுலா பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நலன் கருதி கனரக வாகனங்களை இந்தப் பகுதியில் அனுமதிக்க முடியாது என்று கூறினார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவர் எம்.கணேஷ் தாமோதரனின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.