June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது

1 min read

Voting in Vikravandi by-election was peaceful

10.7.2024
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மரணம் அடைந்தார். இதனையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஆளும் கட்சியான தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. போட்டியில் இருந்து விலகி கொண்டதால், தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் நிற்கிறார்கள். இவர்களுடன் சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தமாக 29 பேர் களத்தில் இருக்கிறார்கள்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையில் இருந்தே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து சென்றனர். மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சக்கர நாற்காலி, மூத்த குடிமக்களின் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. அவர்கள் சிரமமின்றி வாக்களிக்க தேவையான அனைத்து வசதிகளும் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டன.
இந்த நிலையில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது 6 மணியளவில் நிறைவடைந்துள்ளது. 278 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் 1.84 லட்சம் பேர் இதுவரை வாக்களித்துள்ளனர். வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பதிவான வாக்குகள் 13-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *