தென்காசி மாவட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு
1 min read
Minister Anbil Mahesh Poiyamozhi surprise inspection in Tenkasi district
7.8.2024
தென்காசி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னறிவிப்பின்றி ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டத்தில் கல்வித்துறை சார்பில் பல்வேறு புதிய கட்டிட பணிகள் தமிழக அரசின் மூலம் நடந்து வருகின்றன அந்த வகையில் தென்காசி நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஐ சி ஐ அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் சுமார் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் மாவட்ட நூலக மையக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு கட்டப்பட்டு வரும் கட்டிடங்களையும் வகுப்பறைகளையும் பார்வையிட்டார். மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள கோப்புகளையும் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார். ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை ஆய்வு செய்த அமைச்சர் அவர்களுக்கு முக்கிய அறிவுரைகளையும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களோடு மாணவராக அமர்ந்து ஆசிரியர் நடத்திய பாடங்களையும் உன்னிப்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கவனித்தார் மேலும் தென்காசி மாவட்டத்தில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அரசு பள்ளிகளில் ஆய்வு பணி மேற்கொண்டது கட்சி நிர்வாகிகள் கல்விதாதுறை அதிகாரிகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கடையநல்லூர் சென்ற அமைச்சர் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு வகுப்பறைக்குள் சென்று மாணவர்களுடன் பெஞ்சில் அமர்ந்து கொண்டார் .அப்போது வகுப்பறையில் இருந்த ஆசிரியரை பாடம் நடத்தக் கூறி அதனைக் கூர்ந்து கவனித்தார். தொடர்ந்து பதினோராம் வகுப்புக்கு சென்ற அவர் மாணவர்களை எழுப்பி புத்தகத்தில் குறிப்பிட்ட பகுதியை வாசிக்க கூறினார். பின்னர் மாணவர்களின் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்தார் பள்ளிக்கு வராத மாணவர்களின் விவரங்களை கேட்டறிந்தார்.
அதன் பிறகு மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது,:-
11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இது முக்கியமான காலம் ஆகும் விளையாட்டு முக்கியம் தான் ஆனாலும் இந்த காலகட்டத்தில் நீங்கள் விளையாட்டுகளை தவிர்த்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இந்த இரண்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு படித்தால் தான் மேற்படிப்புக்கு நல்ல கல்லூரிகளில் சேர்ந்து பயில முடியும். தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் உள்ளது. அவற்றை பார்த்து தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு மதிப்பெண்களை எடுப்பதற்கு தயாராக வேண்டும்.
ஒவ்வொரு பாட வேளையிலும் பாடம் முடிந்த பின்பு மாணவர்களை வாசித்து காட்ட ஆசிரியர்கள் கூற வேண்டும் அவர்கள் வார்த்தைகளை எப்படி உச்சரிக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். சரியாக உச்சரிக்கவில்லை என்றால் அதனை சரி செய்ய ஆசிரியர்கள் முயற்ச்சிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
தென்காசி கடையநல்லூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அங்கிருந்து சங்கரன்கோவில் பகுதிக்கு சென்று அங்கும் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு ளளார்
.
முன்னதாக தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே. ஜெயபாலன், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் ஈ.ராஜா எம்எல்ஏ, முன்னாள் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மா.செல்லத்துரை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இலத்தூர் பூ.ஆறுமுகச்சாமி மற்றும் திமுக நிர்வாகிகள் கைத்தறி ஆடைகள் அணிவித்து வரவேற்றனர்.