தமிழகத்திற்கு மேலும் 2 வந்தே பாரத் ரெயில்கள் சேவை- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
1 min read2 more Vande Bharat Rail services to Tamil Nadu – PM Modi inaugurated
31.8.2024
தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், சென்னை எழும்பூர் – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிதாக வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில் சேவை புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் மற்றும் பெங்களூரு – மதுரை வந்தே பாரத் ரெயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகின்றன.
வந்தே பாரத் ரெயில்கள் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது;
“வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை எட்ட வந்தே பாரத் ரெயில்களின் சேவை உதவும். வந்தே பாரத் ரெயில் சேவையால் தொழில்கள் வளரும். வேலைவாய்ப்புகள் பெருகும். தமிழகத்தின் கோவில் நகரையும், கர்நாடகாவில் ஐ.டி.நகரையும் வந்தே பாரத் ரெயில் இணைக்கும். வந்தே பாரத் ரெயில்கள் மூலம் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் கிடைக்கும். வந்தே பாரத் ரெயில்கள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.” என்றார்.
புதிய வந்தே பாரத் ரெயிலானது சென்னை எழும்பூரில் காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணியளவில் நாகர்கோவில் சென்றடைய உள்ளது. மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். ஆக ஒரேநாளில் சென்று திரும்பும் வகையில் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.
இதேபோல, மதுரையில் இருந்து பெங்களூரு (20671 – 20672) வரையில் இயக்கப்பட உள்ள புதிய வந்தே பாரத் ரெயிலானது மதுரையில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு சென்றடையும். திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய 6 நிலையங்களில் இந்த ரெயில் நின்று செல்லும். மறுமார்க்கமாக மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.54 மணிக்கு மதுரை வந்தடையும். 8 பெட்டிகள் கொண்டதாக இந்த ரெயில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.