திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதி- முதலமைச்சர் திறந்து வைத்தார்
1 min read
The Chief Minister inaugurated a hostel for pilgrims at Tiruchendur
14.10.2024
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபக்கோவிலான கிருஷ்ணா புரம், வெங்கடாஜலபதி கோவிலில் 2.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தாக அன்னதானக் கூடம் கட்டும் பணி, திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேத பாடசாலை மற்றும் கருணை இல்லம் கட்டும் பணி மற்றும் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சரவணப் பொய்கையில் செயற்கை நீருற்றுகள், வண்ண விளக்குகள், நடை பாதையுடன் கூடிய அழகிய பூங்காவாக புதுப்பொலிவுடன் புனரமைக்கும் பணி, என மொத்தம் 5.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 29.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பக்தர்கள் தங்கும் விடுதி கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு முழுமை பெறாத நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின்பு, பக்தர்களின் நலன் கருதி கூடுதல் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள 19.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 48.36 கோடி ரூபாய் செல வில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பக்தர்கள் தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்தர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்த புதிய பக்தர்கள் தங்கும் விடுதியானது, இரண்டு தளங்களுடன் 99,925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் குளிர்சாதன வசதிகளுடன் 100 இருவர் தங்கும் அறைகள், 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள், ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள், சமையல் அறையுடன் கூடிய உணவகம், ஓட்டுநர்கள் ஓய்வு அறை, வாகனங்கள் நிறுத்துமிடம், மின்தூக்கி என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பெருந்திட்ட வரைவின் கீழ் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முடி காணிக்கை மண்டபம், 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள சுகாதார வளாகங்கள், 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 7.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் என மொத்தம் 68.36 கோடி ரூபாய் செலவில் 4 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கனிமொழி எம்.பி., தலை மைச்செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் சுகுமார், தலைமைப் பொறியாளர் பெரியசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூரில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஆர்.அருள்முருகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்