மதுரையில் 300 பேருக்கு கண் பார்வை பாதிப்பு- மருத்துவமனைகளில் அனுமதி
1 min readIn Madurai, 300 people have eye damage – admitted to hospitals
5.11.2024
நாடு முழுவதிலும் கடந்த 31 ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பட்டாசுகள் வெடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக கொண்டாடினர். பட்டாசுகள் வெடிக்கும் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தீபாவளி பண்டிகை தொடங்கும் முன்னரே தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதற்கான பல வழிகாட்டுதல்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனாலும் வழிகாட்டுதல்களை மீறி பட்டாசு வெடிக்கும் போது பல்வேறு விபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டு வந்தன.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி முதல் 3ம் தேதி வரை பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட காயம் காரணமாக மதுரையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தென் மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்டோருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் 10க்கும் மேற்பட்டோருக்கு கருவிழியில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உரிய சிகிச்சை பலனின்றி 4 குழந்தைகளுக்கு முற்றிலும் கண் பாதிப்பு ஏற்பட்டு கண்கள் அகற்றப்பட்டு உள்ளதாக பிரபல தனியார் மருத்துவமனை சார்பில் தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்து நான்கு குழந்தைகளுக்கு கண் பார்வை பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.