குற்றாலம் அருவிகளில் வெள்ளம்-குளிக்க தடை
1 min read
Flooding at Courtallam Falls-Public bathing prohibited
19.11.2024
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலமாக கருதப்படும் இந்த காலங்களில் குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்யும், மேலும் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் இந்த அருவிகளில் குளிப்பதற்கும் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மலையில் நனைவதற்கும் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருகை தருவார்கள்.
இந்நிலையில் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கூட்டம் குற்றாலத்தில் அதிகமாக உள்ளது .கடந்த சில நாட்களாக தென்காசி ,குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையினால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் நலன் கருதி குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க கடந்த மூன்று நாட்களாக தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று பகலில்
குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழையின் வேகம் சற்று குறைந்து கருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழையினால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.