ஆட்டோவில் கண்ணாயிரம் கலாட்டா/ நகைச்சுவை கதை / தபசுகுமார்
1 min read
Kannayiram Kalatta in Auto/ Comedy Story/ Tapasukumar
22.11.2024
கண்ணாயிரம் பிடிக்காத செருப்பு கேட்டார். எந்த கடையிலும் கிடைக்கவில்லை. காலில் பிடித்த செருப்போடு வீட்டுக்கு வந்த அவருக்கு இரண்டு காலிலும் செருப்பு கடித்து புண்ணாகியது.
அந்த புண் குணமாக எந்த எண்ணை போடலாம் என்று குழம்பிய நிலையில் துணைக்கால் எழுத்துவரும் தேங்காய் எண்ணை தடவலாம் என்ற முடிவுக்கு வந்தார். அந்த எண்ணை குளித்தபின் போடுவதா குளிக்கும் முன் போடுவதா என்று அவருக்கு மீண்டும் குழப்பம் வந்தது. பின்னர் குளிக்கும் முன் தேங்காய் எண்ணை போட்டால் குளிக்கும்போது அது போய்விடும். எனவே குளித்தபின் போடுவோம் என்று முடிவு செய்தார்.
பாத் ரூம் சென்று குளித்தார். என் பொன்னான கால்கள் புண்ணாகலாமா..கொஞ்சம் தேங்காய் எண்ணை தடவலாமா.. வலி குறையுமா.. சந்தேகந்தானா என்று சினிமா பாட்டை மாற்றிப்பாடினார்.
குளித்துவிட்டு வெளியே வந்து காலண்டரைப் பார்த்தார். ஏழரை மணி முதல் ஒன்பது மணிவரை நல்ல நேரம் என்று போட்டிருந்தது. சரி அந்த நேரத்திலே காலுக்கு எண்ணை தடவலாம்..சரி இன்னைக்கு ராசிபலன் என்ன போட்டிருக்கு..வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.. அடடா.. என்ன திருப்பம்..நான் கடைக்குப் போகும்போது ஏகப்பட்ட திருப்பங்களைத் தாண்டித்தானேப் போகிறேன்.. காலண்டர் எந்த திருப்பத்தைச் சொல்கிறதோ தெரியவில்லை என்றவாறு புண்ணான காலுக்கு தேங்காய் எண்ணை தடவினார்.. அப்போது வாசலில் ஒரு ஆட்டோவந்து நின்றது.
யாரது என்று கண்ணாயிரம் எட்டிப்பார்த்தார்.பாவாடை தாவணியில் பூங்கொடி சூட்கேசுடன் வந்து இறங்கினார். எங்கேயோப் பார்த்த மாதிரியும் இருக்கு.. பார்க்காத மாதிரியும் இருக்கு..யாரது என்றார்.
பூங்கொடி..நான் யாரு என்று தெரியவில்லையா..நான்தான் உங்கள் மாமன் மகள் பூங்கொடி என்க.. கண்ணாயிரம்.. ஆமா..பூங்கொடி மாதிரி தெரியுது. மெல்லிய பூங்கொடி போன்ற உடல்.. கருகரு கார் கூந்தல்..அதே..பாவாடை தாவணி.. ஆமா பூங்கொடி மாதிரியேத்தான் இருக்கு.. எங்கே இங்கே வந்த என்றார்.
உடனே பூங்கொடி.. காதல் வந்திருச்சு.. ஆசையில் ஓடிவந்தேன். என்று பாடி ஆடினாள். கண்ணாயிரம் ஆட்டத்தை ரசித்தார். ம்..நல்லாத்தான் இருக்கு என்றபோது பூங்கொடி..ஏங்க இப்போதாவது நீங்க..நான் பூங்கொடி என்று நம்புறீங்களா என்று கேட்க, கண்ணாயிரம் அவளை சுற்றி சுற்றிப் பார்த்தார். எல்லாம் சரியாக இருக்கு..ஆனா.. என் பூங்கொடி இரட்டை சடை போட்டிருப்பா.. நீ ஒத்தை சடை போட்டிருக்கே.. பூங்கொடி மாதிரி நடிக்கியா என்று கேடார்.
பூங்கொடிக்கு கோபம் வந்தது. என்னய்யா.. நீ பழைய பூங்கொடியா வரணுமுன்னு என்னவெல்லாம் பண்ணினேன். தினம் ஒரு வேளை சாப்பிட்டு உடம்பை குறைச்சேன். பியூட்டி பார்லருக்கு தினமும் போய் அழகுபடுத்திக்கிட்டேன். தலைக்கு டையும் அடிச்சிக்கிட்டேன். இவ்வளவு பண்ணுன நான் இந்த இரட்டை ஜடையை மட்டும் மறந்திட்டேன். ஒற்றை ஜடை போட்டதினால நான் பூங்கொடி இல்லையா..என்று ஆவேசமாகக் கத்தினாள்.
உடனே கண்ணாயிரம்..எங்க அம்மா வந்து நீதான் உண்மையான பூங்கொடின்னு சொல்லட்டும்..நான் உன்னை நம்புறேன் என்றவுடன் பூங்கொடிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
கண்ணாயிரத்துக்கு அதிர்ச்சிவரக்கூடாது என்பதற்காக, அவரது அம்மா வெளியூருக்கு போயிருக்காங்கன்னு சொல்லிவச்சோம்.. ஆனா அவங்க உயிரோடு இல்லை. அதை அவரிடம் எப்படி சொல்லுறது என்று யோசித்தாள். நேரே வீட்டுக்குள் சென்றாள். சுவரில் மாட்டியிருந்த கண்ணாயிரம் அம்மாவின் படத்துக்கு தலையில் வைத்திருந்த மல்லிகை பூவை எடுத்து மாலையாகப் போட்டாள்.
இதைப் பார்த்த கண்ணாயிரம் கோபம் அடைந்தார்.என்ன நீ உயிரோடு இருக்கிற எங்க அம்மா படத்துக்கு ஏன் மாலை போட்டே..நீ ஒரு கபடதாரி.. போ என்று ஏசினார்.
பூங்கொடியோ..உங்க அம்மா உயிரோடு இல்லை என்க, கண்ணாயிரம் நீ பொய் சொல்கிறாய்.. எங்க அம்மா கோவிலுக்குப் போயிருக்காங்க அப்படின்னுதானச் சொன்னாங்க.. நீ மாற்றிச் சொல்லுற.. நீ ஏதோ ஏமாத்தப் பாக்கிற..போ.. நான் எங்க அம்மாவைத் தேடி கண்டுபிடிப்பேன்.. கால்வலிச்சாலும் பரவாயில்லை.. நான் ஆட்டோவில் போய் எங்கம்மாவைத் தேடப் போகிறேன்.. நீ யாரு..போ..போ..என்று விரட்டினார்.
பூங்கொடியோ..நான் போகமாட்டேன். உங்க அம்மாவை கூட்டிக்கிட்டுவாங்க.. அவங்க சொல்லட்டும்.. நான் போறேன் என்றாள்.
கண்ணாயிரம்..அதுவும் சரிதான்.. நான் ஆட்டோவில் கோவில் கோவிலாக தேடப் போகிறேன் என்று புறப்பட்டார்.
அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி கோவிலுக்குப் போகணூம் என்றார். ஆட்டோவில் ஏறினார். ஆட்டோ புறப்பட்டது. தன்தாய் வழக்கமாகச் செல்லும் முருகன் கோவிலுக்கு ஆட்டோ போகட்டும் என்றார்.
ஆட்டோ வேகமாகச் சென்றது. ஆட்டோவில்..தாய் இல்லாமல் நானில்லை. தானே எவரும் பிறந்ததில்லை. எனக்கொரு தாய் இருக்கின்றாள். என்றும் என்னைக் காக்கின்றாள் என்ற பாடல் ஒலித்தது.
கண்ணாயிரம்..ஆமா..தாயில்லாமல் யாரும் இல்லை..நானும் தாயைத் தேடித்தான் போறேன் என்றபடி பாட்டுக்கேத்தப்படி கைகளை அசைத்தார்.
முருகன் கோவில் வந்தது. கோவிலில் சுற்றி சுற்றி வந்தார். வணங்கினார். தேடினார். அவரது தாயைக் காணவில்லை.
சரி நாளைக்கு வேறு கோவிலில் தேடுவோம் என்று ஆட்டோவில் வீட்டுக்குப் புறப்பட்டார்.
தார் ரோட்டில் ஆட்டோ வேகமாகச் சென்றது. கண்ணாயிரம் வீட்டை நெருங்கியதும்.. கண்ணாயிரம்..ம்..வீட்டுக்குப் போகவேண்டாம்..இங்கே நிப்பாட்டு என்றார்.
ஆட்டோக்காரர் ஆட்டோவை நிறுத்திவிட்டு..நூறு ரூபாய் கொடுங்க என்றார்.
கண்ணாயிரம் அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு இருபது வயதிலிருந்து இருபத்து ஒன்பது வயது வரைதானே நினைவு இருக்கும். அந்த கால ஆட்டோ கட்டணத்தை நினைத்துக்கொண்டு.. என்னப்பா..முருகன் கோவிலுக்கு போயிட்டுவர பத்து ரூபாதான.. நூறு ரூபான்னு ஏமாத்திரியா என்க..ஆட்டோக்காரர் கோபம் அடைந்தார்.
என்னய்யா ஜெயிலுக்குள்ளே இருந்து வந்தியா என்று கேட்க.. கண்ணாயிரம்..நான் வீட்டிலிருந்துதான் வருகிறேன்.. என்ன நீ தப்பா பேசுற..தார் ரோடு வழியா சீக்கிரம் வந்துட்டு நூறு ரூபா கேட்கிற.. பள்ளம் மேடான ரோட்டில் வந்து பத்து ரூபாதான் கொடுப்போம்.. அதனால ரோட்டுப் பாதையிலே நீ வந்ததால ஐந்து ரூபாய்தான் தருவேன் என்று ஆட்டோக்காரனிடம் தகராறு செய்தார்.
அவர்..யோவ் குண்டும் குழியுமான ரோட்டில் போகணுமா வாரும் என்று ஆட்டோவில் ஏற்றினார். ஆட்டோ வேகமாகச் சென்றது. கண்ணாயிரம்..ம்.சத்தம் போட்டு பேசினால்தான் கதை நடக்குது என்றபடி தாயில்லாமல் நானில்லை என்று பாடியவாறு இருந்தார்.ஆட்டோ குண்டும் குழியுமான ரோட்டில் குலுங்கி குலுங்கி சென்றது..இதுதான் அந்த ரோடு.. இந்த வழியாக வராம..ஏமாத்தப்பாக்கிறீயா என்க..ஆட்டோக்காரர் ஆத்திரத்தில் ஆட்டோ வேகத்தை அதிகப்படுத்த..அது டொம்மு டொம்முன்னு குதித்து ஓட. கண்ணாயிரம் மெதுவா..மெதுவா என்க..ஆட்டோ குலுங்கி..குலுங்கி ஓடி கவிழ்ந்தது.
கண்ணாயிரம் ஆட்டோவுக்குள் சிக்கி அலறினார்.
-வே.தபசுக்குமார்.புதுவை.