கண்ணாயிரத்தை குழப்பிய நல்லெண்ணை/நகைச்சுவை கதை/தபசுகுமார்
1 min readNallennai that confused Kannayira/Comedy story/Tapaskumar
26.10.2024
கண்ணாயிரம் பிடிக்காத செருப்பு கேட்டு கடைகடையாக அலைந்தார்.பிடிக்காத செருப்பு இல்லை என்று கடைக்காரர்கள் சொன்னதால் அவர் ஏமாற்றம் அடைந்தார்.
என்ன கடைவச்சிருக்காங்க ஒரு பிடிக்காத செருப்பு கூட இல்லையே என்று வருத்தப்பட்டார். காலைப் பிடித்த செருப்பை மாட்டிக்கொண்டு வீட்டுக்கு நடந்துவந்தார்.என்ன கண்ணாயிரம் ஒருமாதிரி நடக்கிற என்று ஒருவர் கேட்க, எல்லாம் இந்த செருப்புதான் காரணம்..என்று கண்ணாயிரம் சொல்ல,இது லேடீஸ் போடுற செருப்பு..இதைப் போட்டா எப்படி என்று கேட்க, கண்ணாயிரம்.. யோவ்.. லேடீஸ் செருப்பை ஆம்பிளை போடக்கூடாதுன்னு யார் சொன்னா.. குடிக்கிற தண்ணி இருக்கு.. இது லேடீஸ் குடிக்கிற தண்ணி, இது ஆம்பிளைங்க குடிக்கிற தண்ணின்னு இருக்கா.. இல்லையே எல்லாம் ஒரே தண்ணிதானே என்று வாதாடினார்.
அடபோப்பா..உன்னிடம் ஒண்ணும் பேசமுடியாது..போ..போ என்று அவர் வாயைப் பொத்திக்கொண்டு நடந்தார்.
கண்ணாயிரம்..அட நானே கால் வலிக்குதுன்னு துடிக்கிறேன்..இவங்க வேற எதாவது சொல்லுறாங்க இது லேடீசுக்கு பிடித்த செருப்பு.. அதனால போடுறேன்.. இவங்களுக்கு என்ன..பொறாமை.. என்று புலம்பியபடி நடந்தார்.
பிடிக்காத செருப்பு கேட்டாலும் தரமாட்டேங்கிறாங்க.. பிடித்த செருப்பை போட்டாலும் அது சரியில்லை.. இது சரியில்லைங்கிறாங்க என்று கண்ணாயிரம் மனம் கலங்கினார். உலகம் ஆயிரம் சொல்லும்..நீ என்ன நினைக்கிறாயோ அதை செய் என்று மனசாட்சி கண்ணாயிரத்திடம் கூறியது. அவர் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வீட்டுக்கு நடந்துவந்து சேர்ந்தார்.
செருப்பு கடித்து கால் புண்ணாகி இருந்தது. இதுக்கு என்ன எண்ணை போட என்று யோசித்தார். தேங்காய் எண்ணை போடவா.. விளக்கெண்ணை போடவா நல்லெண்ணை போடவா என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
எது நல்லெண்ணை ..புரியலையே என்று விழித்தார். இதுக்குப் போய் யாரிடம் கேட்பது என்று நினைத்தார். அந்தவழியாக வந்த ஒருவரிடம்..ஏங்க என்னிடம் மூன்று வகையான எண்ணை இருக்கு.. என் கால் புண்ணாயிருக்கு. எந்த எண்ணைபோடலாம்.
நல்ல எண்ணையா பார்த்து சொல்லுங்க என்றார்.
அவர் ஏம்பா.. நல்லெண்ணை போடு என்றார்.
அதற்கு கண்ணாயிரம்.. ஏங்க அந்த நல்லெண்ணை எதுன்னுதான் உங்களிடம் கேட்கிறேன்.. நீங்களும் நல்லெண்ணை போடுங்கன்னு சொன்னா எப்படி என்று கோபப்பட்டார்.
அதற்கு அவர் ஏம்பா எல்லா எண்ணையும் நல்ல எண்ணைதான் என்க கண்ணாயிரம் நல்லெண்ணை பாட்டிவை எடுத்து.. ஏங்க.. இங்கே பாருங்க.. இது நல்லெண்ணை பாட்டில்.. நான் உங்களிடம் கேட்பது காலுக்கு தடவ, எது நல்ல எண்ணை பாட்டில் என்று கேட்டார்.
உடனே அவர்.. எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு..போயிட்டு வந்து சொல்கிறேன் என்று ஓட்டம் பிடித்தார்.
கண்ணாயிரத்துக்கு ஒன்றுமே ஓடவில்லை. ஏம்பா ஒரு நல்ல எண்ணை எதுன்னு கேட்டாக்கூட சொல்லமாட்டேங்கிறாங்க…என்ன ஊருப்பா இது நாமளே ஒரு முடிவு எடுக்கவேண்டியதுதான் என்று நினைத்தார்.
அந்த நேரத்தில் ஒருவாலிபர் வந்தார். கண்ணாயிரம் எண்ணைப் பாட்டிலுடன் இருப்பதைப் பார்த்து என்ன.. எண்ணை வியாபாரத்தில் இறங்கிவிட்டிங்களா ..விலை எவ்வளவு என்க.. கண்ணாயிரம்..ஆ.. இவன் என்னை வியாபாரி ஆக்கிட்டானே.. அட அது இல்லைப்பா.. இதிலே நல்ல எண்ணை எது சொல்லு என்று கேட்டார்.
இளைஞரோ..பாட்டிலை திறந்து மணத்துப் பார்த்தா எது நல்லெண்ணைன்னு தெரியப் போகுது.. இதுக்குப் போயி அலட்டிக்கலாமா என்றார்.
ஏம்பா..நீயும் குழப்புறீய.. என் காலுக்குப் போட நல்ல எண்ணை எது.. அதைச் சொல்லு.. அதைவிட்டுட்டு முகர்ந்து பார்க்கச் சொன்னா எப்படி என்று கேட்டார்.
அதுவா.. நான் சரியா புரிஞ்சிக்கல.. உங்க காலுக்கு எண்ணை போடணும்.. அதுக்கு என்ன எண்ணை போடணுமுன்னு கேட்கிறீங்க.. அப்படித்தானே..இப்ப பாருங்க.. மூன்றுவகை எண்ணை வச்சிருக்கிறீங்க.. எந்த எண்ணையை எழுதுனா கால் வரும் அதாவது துணைக்கால் வரும்.. அந்த எண்ணையைப் போடுங்க என்றார்.
கண்ணாயிரம் உடனே துணைக்கால் வரும் எண்ணை பெயர் என்னப்பா.. நீயே சொல்லு என்க.. அந்த இளைஞர்.. ஓ..அப்படியா..இங்கே பாருங்க.. விளக்கெண்ணை அதில் துணைக்கால் எழுத்து வரல, நல்லெண்ணை இதிலும் துணைக்கால் எழுத்து வரல.. தேங்காய் எண்ணை.. இதில் காய் என்ற எழுத்தில் துணைக்கால் எழுத்துவருது அதனால,உங்க காலுக்கு தேங்காய் எண்ணையைத் தடவுங்க என்று தேங்காய் எண்ணை பாட்டிலை எடுத்துக் கொடுத்தார்.
கண்ணாயிரம் ரொம்ப நன்றிப்பா..இதுக்குத்தான் படிச்ச பையங்க வேணுமுன்னு சொல்லுறது..என்று புகழ்ந்தார்.
சரிப்பா..இந்த எண்ணையை குளிச்சிட்டு வந்து தடவுறதா இல்லை குளிக்கும் முன்னே தடவுறதா என்று கேட்க, அந்த இளைஞர் அங்கிருந்து நழுவி ஓடினார்.
என்னடா இது.. வைத்தியருட்ட போனா சில எண்ணைய தடவிட்டு அரை மணிநேரம் கழிச்சி கழுவுங்க என்பார்.. சில நேரம் காலை நல்லா கழுவிட்டு எண்ணய போடுங்கம்பார்.. அதத்தானே இவங்கிட்ட கேட்டேன்.. படிச்ச பையனே இப்படி ஓடுறானே.. (தொடரும்)
-வே.தபசுக்குமார்,புதுவை.