August 28, 2026

Seithi Saral

Tamil News Channel

நரசிம்மராவால் அரசியலுக்கு வந்தவர் மன்மோகன்சிங்

1 min read

Manmohan Singh entered politics because of Narasimha.

27.12.2024
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், 92, உடல்நலக் குறைவால், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம், சக்வால் மாவட்டத்தில் பிறந்த மன்மோகன் சிங், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு பின், பஞ்சாபின் அமிர்தசரசுக்கு குடிபெயர்ந்தார். பஞ்சாப் பல்கலையிலும், பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலையிலும் பொருளாதார படிப்பை முடித்தார். அதன் பின், பொருளாதார பேராசிரியராக பணியை துவங்கினார்.

மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர், நிதிச் செயலர், ரிசர்வ் வங்கி கவர்னர், திட்டக் குழு துணைத் தலைவர் போன்ற முக்கிய பதவிகளை பல்வேறு காலக்கட்டங்களில் வகித்துள்ளார். 1990ல் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின், பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 1991ல் பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசில், நிதி அமைச்சராக பதவி வகித்தார். அப்போது இவர் கொண்டு வந்த தாராளமயமாக்கல் கொள்கை, நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், 2004 முதல் 2014 வரை மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தார். அதன் பின் இந்தாண்டு ஏப்ரல் வரை, ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தார். வயது மூப்பு காரணமாக, தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார்.

நேற்றிரவு, டில்லியில் உள்ள தன் வீட்டில் மன்மோகன் சிங் மயக்கமடைந்தார். அவரை உறவினர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில், 8:06 மணிக்கு அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இரவு 9:51 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக, எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மன்மோகன் சிங்கிற்கு குருஷரண் கவுர் என்ற மனைவியும், உபிந்தர் சிங், தாமன் சிங், அம்ரித் சிங் என்ற மூன்று மகள்களும் உள்ளனர்.

நாட்டின் பிரதமராக இரண்டு முறை இருந்தவர் மன்மோகன் சிங். ஜவஹர்லால் நேருவுக்கு பின், முழு ஆட்சி காலத்தை நிறைவு செய்த பின், மீண்டும் பிரதமரானவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். நேரு, இந்திரா, நரேந்திரமோடிக்குப் பின், நீண்ட கால பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. பொருளாதார நிபுணராக இருந்து, அரசியலுக்கு வந்த அவர், ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த, 1991 – 2019 வரை அசாமில் இருந்தும், 2019 – 2024 வரை ராஜஸ்தானில் இருந்தும் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் லோக்சபா தேர்தலில், ஒருமுறை கூட போட்டியிட்டதில்லை.

தான் அரசியலுக்கு வந்தது தொடர்பாக, 2005ல் பிரிட்டன் பத்திரிகையாளர் மார்க் டுல்லிக்கு அளித்த பேட்டியில், மன்மோகன் சிங் கூறியதாவது:-
கடந்த, 1991 ஜூன் மாதம், காங்கிரசின் நரசிம்ம ராவ் பிரதமராக பதவியேற்றபோது, என்னை நிதி அமைச்சராக தேர்வு செய்தார். இந்தத் தகவலை எனக்கு தெரிவிக்க, முதன்மை செயலரை அனுப்பியிருந்தார். ஆனால், அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கடுத்த நாள் காலையில், நரசிம்ம ராவே என்னை அழைத்தார். நல்ல உடை அணிந்து, உடனே ஜனாதிபதி மாளிகைக்கு வரும்படி கூறினார். இப்படித்தான் நான் அரசியலுக்கு வந்தேன்.
இவ்வாறு மன்மோகன் சிங் கூறியிருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *