காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு- இலங்கைக்கு இந்தியா கண்டனம்
1 min read
Firing on Karaikal fishermen – India condemns Sri Lanka
28.1.2025
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று அதிகாலை காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு. இவருக்கு சொந்தமான படகில் 13 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி காரைக்கால் மீனவர்கள் 13 பேரையும் சிறை பிடித்தனர். அவர்களின் படகு, வலைகளையும் பறிமுதல் செய்தனர்.
மீனவர்களை சிறைப்பிடித்த போது 2 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடுநடத்தினர். இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் யாழ்பாணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள இலங்கை தூதரக தூதரை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், மீனவர்கள் மீது துப்பாக்கிக்சூடு நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலமாகவும் இலங்கை அரசிடம் கண்டனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை ராணுவம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை அடிக்கடி கைது செய்து வருகிறது. ஆனால் நீண்ட காலத்திற்குப் பிறகு தற்போது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. அதுவும் இலங்கை அதிபராக அனுர குமார திஷநாயகே பதிவு ஏற்ற பிறகு நடைபெறம் முதல் துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும்.