வக்பு வாரிய திருத்த மசோதா சபாநாயகரிடம் சமர்ப்பிப்பு
1 min read
Joint Parliamentary Committee submits Waqf Board Amendment Bill to Speaker
30.1.2025
மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு பாராளுமன்ற கூட்டுக்குழு நேற்று ஒப்புதல் வழங்கியது.
நாடு முழுவதும் உள்ள ஏராளமான வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்துவது, வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத இரண்டு நபர்களை உறுப்பினர்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது உள்ளிட்ட திருத்தங்களுடன் கடந்த ஆண்டு மத்திய அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்தது.
இது முஸ்லிம்கள் நிலம், சொத்துக்கள், மத விவகாரத்தை நிர்வகிக்கும் சுதந்திரத்தைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து, இந்த மசோதா குறித்து ஆய்வுசெய்ய பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் இடம் பெற்றிருந்தனர். பலமுறை கூடிய கூட்டுக்குழு அமளியிலேயே கழிந்தது. மொத்தம் 44 திருத்தங்கள் முன்மொழியப்பட்டு அதில் 14 ஏற்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த அனைத்து திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன.
இதற்கிடையே, திருத்தி அமைக்கப்பட்ட வக்பு வாரிய வரைவு மசோதாவுக்கு பாராளுமன்ற கூட்டுக்குழு நேற்று ஒப்புதல் வழங்கியது. திருத்த மசோதாவுக்கு குழுவில் உள்ள 14 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் பேசுகையில், பெரும்பான்மையுடன் வரைவு மசோதா ஏற்கப்பட்டது. 656 பக்கங்கள் கொண்ட கூட்டுக்குழு அறிக்கையை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்தோம். இதை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்க உள்ளோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற கூட்டுக்குழுவினர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று சந்தித்தனர். அப்போது அவர்கள் வக்பு வாரிய திருத்த மசோதாவை சபாநாயகரிடம் வழங்கினர்.