தென்காசியில் ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை
1 min read
Elderly man commits suicide by jumping in front of train in Tenkasi
3.3.2025
தென்காசியில் ரெயில் முன் பாய்ந்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தென்காசியில் இருந்து – செங்கோட்டை செல்லும் ரயில் பாதையில் நேற்று காலையில் ஆண் ஒருவர், ரயில் மோதி உடல் துண்டான நிலையில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனைப்பார்த்து தென்காசி ரயில்வே போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த தென்காசி ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக பாளையங்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக் கோட்டை ரோடு, பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த ஜான் பீட்டர் (வயது 63) என்பது தெரிய வந்தது. இவருடைய மனைவி பவுலின் சகாய மேரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜான் பீட்டருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு
ஏற்பட்டது. எனவே ஜான் பீட்டர் மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
அவர் நேற்று முன்தினம் தஞ்சாவூரில் இருந்து மயிலாடுதுறை – செங்கோட்டை ரயிலில் ஏறி தென்காசிக்கு வந்துள்ளார். நேற்று அதிகாலை 5.15 மணியளவில் செங்கோட்டையில் இருந்து ஈரோடு சென்ற ரயில் முன்பாக ஜான் பீட்டர் பாய்ந்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்