ஊழலுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- டாஸ்மாக் வழக்கில் நீதிபதிகள் கருத்து
1 min read
TASMAC case hearing postponed to the 8th
1.4.2025
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத்துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.
அமலாக்கத்துறையின் இந்த சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் ஆகியோர் விசாரித்து வந்தனர். கடந்த முறை இந்த வழக்கை விசாரித்தபோது, அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டனர்.
மேலும், எந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது என்பது குறித்த விவரங்களையும் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி டாஸ்மாக் வழக்கு எஸ்.எம் சுப்ரமணியன், ராஜசேகர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழக காவல்துறை இரவில் சோதனை நடத்தியதே இல்லையா? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு நள்ளிரவில் சோதனை நடத்தியதில்லை எனத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்தார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தமிழக அரசின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அமலாக்கத்துறை பதில் மனுவுக்கு பதில் அளிக்கத் தமிழக அரசுக்கு அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை வருகிற 8-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர். மேலும் மக்களுக்காக, ஊழலுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.