ஜம்மு காஷ்மீரில் 26 பேர் பலி- சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
1 min read
26 killed in Jammu and Kashmir – Terrorists attack tourists
22.4.2025
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். ராணுவ வீரர்கள் போல சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை சுற்றி வளைத்துள்ள பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்பட 26 பேர் பலியானதாக ஆங்கில தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கவிப்படவில்லை. ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, ஜம்முகாஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்பொறுப்பேற்றுள்ளது. பிரபலமான ரிசார்ட் பகுதிக்கு அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
நாட்டையே உலுக்கியுள்ள ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அவசர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீநகர்: 0194-2457543, 0194-2483651 அடில் ஃபரீத், ஏடிசி ஸ்ரீநகர்: 7006058623,
இந்த நிலையில், சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் தப்பவிடப்பட மாட்டார்கள். அவர்களின் தீய திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் உறுதியை அசைக்க முடியாது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உமர் அப்துல்லா இது தொடர்பாக கூறியிருப்பதாவது: ” இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் அதிர்ச்சியடைந்தேன். தாக்குதல் நடத்தியவர்கள் விலங்குகள், மனிதாபிமானமற்றவர்கள் மற்றும் அவமதிப்புக்கு தகுதியானவர்கள். கண்டன வார்த்தைகள் போதாது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள், நடத்திய தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜம்மு- காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலால் நான் மிகவும் வேதனையடைந்தேன். இறந்தவரின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க முடியாது, குற்றவாளிகளுக்கு பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.
சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கமளித்தேன், மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினேன். அவசர பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துவதற்காக விரைவில் ஸ்ரீநகருக்குச் செல்வேன்” என்று அதில் கூறியுள்ளார்.