June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

மாநில சுயாட்சியை பெறுவோம்; கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம் – மு.க.ஸ்டாலின் பேச்சு

1 min read

We will get state autonomy; we will create a federal India – M.K. Stalin’s speech

27.4.2025
சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்று சுப்ரீம் கோர்ட்டு தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுத் தந்த சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர்கள் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் டாக்டர் அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி, நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.

இந்த விழாவை பாராட்டு விழா என்று சொல்வதைவிட, வெற்றி விழா என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்! இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் எந்த மாநிலமும் எப்போதும் பெற்றிடாத இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட வழக்கறிஞர்களைப் பாராட்டி எல்லையில்லாத மகிழ்ச்சியோடு நாமெல்லாம் கூடியிருக்கிறோம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை – கவர்னர் என்ற நியமனப் பதவி மூலம் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணம் கொண்டு, போட்டி அரசுகளை நடத்த தொல்லைகள் கொடுக்கின்ற காலத்தில், மிக முக்கியமான இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியிருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பர்த்திவாலா, மகாதேவன் அமர்வு வழங்கிய தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல; மக்களாட்சிக்கும் – மாநில சட்டமன்றங்களின் உரிமைகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் காலக்கெடு நிர்ணயித்தது மிகப்பெரிய வெற்றி.

அரசியல் சாசன பிரிவு 142-இன் கீழ் சுப்ரீம் கோர்ட்டிற்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்த மசோதாக்கள் அனைத்தும் உடனே சட்டமாகி நடைமுறைக்கு வருகிறது என்று நீதியரசர்கள் தீர்ப்பளித்தபோது, ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் தலைநிமிர்ந்து சுப்ரீம் கோர்ட்டிற்கு வணக்கம் செலுத்தியது.

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இருக்கக்கூடிய அதிகாரப் பகிர்வில் மாநில அரசுகளின் உரிமைகளை எக்காலத்திலும் பாதுகாத்திடும் வரலாற்று சாசனமாக இந்த தீர்ப்பு என்றென்றும் நிலைத்திருக்கும். இன்னும் பெருமையோடு சொல்கிறேன். இது இந்திய மாநிலங்களுக்கு தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டால் பெற்றுத்தந்திருக்கக்கூடிய மாபெரும் விடுதலை.

இந்த அரசியல் உரிமையை – சட்டபூர்வமான வாதங்களின் மூலமாக தமிழ்நாடு அரசு முன்வைத்து வாதாடியது. அந்த அறிவார்ந்த வாதங்களுக்குச் சொந்தக்காரர்களான வழக்கறிஞர்கள்தான் இன்றைக்கு நம்மோடு இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக, தமிழ்நாடு அரசின் சார்பில் பாராட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன். சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர் – முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி அவர்களால் இந்த விழாவிற்கு வர இயலவில்லை. அவர் இங்கு இல்லையென்றாலும் தமிழ்நாடு அரசின் சார்பில் என்னுடைய பாராட்டுகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர் – முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் – அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி, சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் ஆகியோரை தமிழ்நாடு அரசின் சார்பில் நான் பாராட்டுகிறேன். அறிவிற்சிறந்த வழக்கறிஞர் பெருமக்களே….. உங்களின் வாழ்க்கையில் எத்தனையோ பெரிய பெரிய வழக்குகளைப் பார்த்திருப்பீர்கள். வெற்றியும் பெற்றிருப்பீர்கள். தனிநபர்கள்-அமைப்புகள் ஏன், தனியொரு மாநிலம் கூட அந்த வழக்குகளில் வெற்றி பெற்றிருக்கும். ஆனால், இந்த வழக்கின் வெற்றி என்பது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து மாநில மக்களுக்கும், மக்களாட்சிக்கும் கிடைத்திருக்கும் வெற்றி.

இந்த மண்ணில் மக்களாட்சி இருக்கும் வரைக்கும், இந்த வழக்கும் வலுவான வாதங்களை வைத்த நீங்களும் பேசப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள். வழக்குத் தாக்கல் செய்த தமிழ்நாடும் – வாதிட்ட நீங்களும் – தீர்ப்பளித்த நீதியரசர்களும் வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருப்போம் என்பது உறுதி. இந்த தீர்ப்பு கொடுத்திருக்கும் புத்துணர்ச்சி மற்றும் நம்பிக்கையோடுதான் மாநில சுயாட்சிக் குழுவை நாம் உருவாக்கியிருக்கிறோம்.

இந்திய ஜனநாயகத்தில் மக்களாட்சிக்கு வலுசேர்க்க, பேரறிஞர் அண்ணா வலியுறுத்தி, தலைவர் கலைஞர் முழக்கமாக வடித்து கொடுத்ததுதான் “மாநிலத்தில் சுயாட்சி! மத்தியில் கூட்டாட்சி” என்ற இலக்கு. அந்த இலக்கை வென்றெடுக்க இந்தத் தீர்ப்பு வழிகாட்டி இருக்கிறது. மாநில சுயாட்சியைப் பெறுவோம். கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *