June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையநல்லூர் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்

1 min read

Wild elephants rampage in Kadayanallur area

29.4.2025
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய விளைநிலங்களிலும், பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளிலும் அத்துமீறி நுழையும் காட்டுயானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக வனத்துறை முதன்மை செயலாளரிடம் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ. கிருஷ்ணமுரளி கோரிக்கை மற்றும் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ. கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளரிடம் அளித்துள்ள புகார் மற்றும் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :-

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சொக்கம்பட்டி, வடகரை, பண்பொழி, கரிசல்குடியிருப்பு, கற்குடி, புதூர் பேரூராட்சி, கண்ணுப்புளிமெட்டு, மோட்டை மற்றும் மலையடிவாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விவசாய விளைநிலங்களில் காட்டு யானைகள் அத்துமீறி நுழைந்து பொதுமக்களின் உயிருக்கும் வாழை, தென்னை, நெல், உள்ளிட்ட பயிர்களுக்கும் மிகுந்த சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. காட்டு யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு சார்பில் தற்போது மேற்கொள்ளப்படும் பணிகள் உரிய பலனை ஏற்படுத்தாததால் தினந்தோறும் யானைகள் படையெடுப்பு தொடர்ந்து நடைபெற்று சேதம் அதிகமாகி வருகிறது.

விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதி மக்கள் ஏற்கனவே காட்டுப்பன்றி தாக்குதலில் பெருமளவு பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இப்போது காட்டுயானைகள் நடமாட்டம் அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் இருக்கிறது.

காட்டுயானை தாக்குதலில் சில மாதங்களுக்கு முன்பு சொக்கம்பட்டியை சேர்ந்த மூக்கையா என்பவர் உயிரிழந்தார். கரிசல்குடியிருப்பைச் சேர்ந்த ஆறுமுகச்சாமி என்பவர் படுகாயம் அடைந்தார். இந்த துயர செய்தியால் ஏற்பட்ட பீதி அடங்கும்முன், தற்போது தொடர்ச்சியாக தினந்தோறும் நடைபெறும் இந்த காட்டுயானைகளின் அத்துமீறிய நடமாட்டம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் ஒருவிதப் பதட்டத்தை ஏற்படுத்தி இருப்பதை தொடர்ச்சியாக பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் எடுத்துரைக்கின்றன.

மேலும் உயிர்ச்சேதம் ஏற்படும்முன், காட்டு யானைகள் காட்டினைவிட்டு குடியிருப்பு பகுதிக்குள் வரும் காரணங்களை உடனடியாக கண்டறிந்து நிவர்த்தி செய்வதுடன், காட்டில் இருந்து இறங்கி வரும் வழியிலேயே அவற்றை தடுத்து நிறுத்தி காட்டிற்குள் திருப்பி அனுப்ப தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *