June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

வால்பாறை: சிறுமியை இழுத்துச் சென்ற சிறுத்தை – உடல் மீட்பு

1 min read

Coimbatore: Body of girl mauled by leopard in front of mother recovered

21.6.2025
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சைமலை எஸ்டேட் வடக்கு பிரிவில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில், ஜார்கண்டை சேர்ந்த மனோஜ் முந்தா-மோனிகா தேவி தம்பதியினர் தங்களுடைய 2 குழந்தைகளுடன் தங்கியிருந்து தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் மோனிகா தேவி வீட்டின் பின்புறம் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தபோது, அவருடன் மூத்த குழந்தையான 6 வயது சிறுமியான ரோஷினி குமாரியும் உடன் இருந்துள்ளார்.

அப்போது குடம் நிறைந்ததும் அதனை தூக்கி கொண்டு மோனிகா தேவி வீட்டிற்கு சென்றார். சிறுமி குடிநீர் குழாய் அருகே நின்றிருந்தது. சிறிது நேரத்தில் சிறுமியின் அலறல் சத்தமும், குடம் கீழே விழும் சத்தமும் கேட்டது. இதனைக்கேட்டு பதறியடித்து மோனிகாதேவி வெளியே ஓடிவந்தார்.

அப்போது தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று 6 வயது சிறுமியை கவ்வி இழுத்து சென்றது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கதறி அழுது துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். ஆனால் சிறுமியை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

சிறிது நேரத்திற்கு பின்னர் சிறுமி அணிந்திருந்த ஆடை மட்டும் ரத்த கறையுடன் தேயிலை தோட்ட பகுதியில் கிடந்தது. ஆனால் சிறுமியின் உடல் கிடைக்கவில்லை. இரவு சுமார் 9.30 மணி வரை தேடியும் சிறுமியின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. தாயின் கண் முன்னே இந்த கொடூரம் நடந்துள்ளது. இந்நிலையில், அந்த சிறுமியின் உடல் இன்று மீட்கப்பட்டு உள்ளது. சிறுமியை கவ்வி சென்ற சிறுத்தை மீண்டும் அந்த பகுதிக்கு வருவதற்கான சாத்தியம் அதிகரித்து உள்ளது. இதனால், அந்த பகுதியில் வசித்து வருபவர்கள் அச்சமடைந்து உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *