June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: தனியார் நிறுவனத்தில் ரூ.30 லட்சம் மோசடி-2 பேர் கைது

1 min read

Tenkasi: Rs 30 lakh fraud at private firm – 2 arrested

11/6/2026
தென்காசி மாவட்டத்தில் லாரி போக்குவரத்து தொழில் செய்து வரும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மோசஸ் அளித்த புகாரின் பேரில், ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான மோசடி தொடர்பாக புளியரை போலீசார் 2 நபர்களை கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மோசஸ் அளித்த புகாரின் படி, கடந்த 2024 டிசம்பர் மாதம் ரிலையன்ஸ் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனத்தின் டிரான்ஸ் கனெக்ட் திட்டத்தில் இணைந்தார். தனது நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றும் குத்தகை அடிப்படையில் இயக்கப்படும் சுமார் 40 லாரிகளுக்கான டீசல் செலவுகளை இந்த தளத்தின் மூலம் மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், தொழிலில் ஏற்பட்ட எதிர்பாராத நஷ்டத்தைத் தொடர்ந்து கணக்குகளை ஆய்வு செய்தபோது, தனது நிறுவனத்திற்குச் சொந்தமில்லாத வாகன எண்கள் மற்றும் போலியான பரிவர்த்தனைகள் மூலம் டிரான்ஸ் கனெக்ட் வாலெட்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது பெயரில் வழங்கப்பட்ட டீசல் கார்டு தொடர்பான எந்த தகவலும் தனக்கு வழங்கப்படவில்லை என்றும், அந்த கார்டு சம்பந்தப்பட்ட ஊழியர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததாகவும் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஜனவரி முதல் 2026 மே மாதம் வரை பல்வேறு முறைகேடுகள் மூலம் மொத்தம் ரூ.30 லட்சத்து 67 ஆயிரத்து 684 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடந்த மே 27-ஆம் தேதி சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கிற்கு நேரில் சென்று விளக்கம் கேட்டபோது, அங்கிருந்த ஊழியர்கள் முறையான பதில் அளிக்காமல் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் மோசஸ் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடியால் கடுமையான நிதி நெருக்கடியும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு புளியரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய புளியரை போலீசார், பல்க் மேனேஜர் மற்றும் சூப்பர்வைசர் செங்கோட்டை சேர்ந்த அசோக் குமார் மற்றும் பண்பொழியை சேர்ந்த நாகராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து இரண்டு வாகனங்கள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய வினோத்குமார் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தென்காசி மாவட்ட லாரி போக்குவரத்து துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *