August 21, 2026

Seithi Saral

Tamil News Channel

ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் பணி

1 min read

Retired railway employees to be re-employed

23..6.2025
இந்தியன் ரெயில்வே துறைகளில் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு ஊழியர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பயணிகளின் பாதுகாப்பு, ரெயில் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை கவனிக்கும் முக்கிய துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை ஓய்வுபெற்ற ரெயில்வே பணியாளர்கள் மூலம் நிரப்புவதற்கு ரெயில்வே வாரியம் முடிவு எடுத்துள்ளது. எனவே 1 முதல் 9 வரையிலான ஊதிய பட்டைக்குள் வரும் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய ரெயில்வே அமைச்சகம் சார்பில் கடந்த 20-ந் தேதி மண்டல ரெயில்வே பொது மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அதில், ‘தங்கள் மண்டலத்தில் ஓய்வுபெற்ற பணியாளர்கள் அவர்கள் வகித்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்தால், அனுபவத்தின் அடிப்படையில் அவர்கள் முன்பு வகித்த பணி இடங்களுக்கோ அல்லது அதற்கு கீழ் உள்ள பணி இடங்களுக்கோ ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியமர்த்தலாம்’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சுற்றறிக்கையை தொடர்ந்து, ரெயில்வே தண்டவாள பராமரிப்பு, மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட ஊதிய பட்டை 1 முதல் 9 வரை உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கான அதிகாரம் ரெயில்வே கோட்ட மேலாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. ரெயில்வே தலைமை அலுவலகங்களில் உள்ள காலிப்பணி இடங்களில் ஓய்வுபெற்ற ஊழியர்களை நியமிக்கும் அதிகாரம் பொதுமேலாளர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

ரெயில்வேயில் நிலவும் பணியாளர்கள் தேவையை பூர்த்தி செய்து, ரெயில் சேவைகளின் தரத்தை உயர்த்த ஓய்வுபெற்ற பணியாளர்கள் மீண்டும் அதே பணியில் தற்காலிகமாக நியமிக்கப்படுவது உதவும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல, ரெயில்வேயில் உள்ள காலி பணியிடங்களுக்கு புதிய ஆட்கள் தேர்வு செய்யும் பணியும் தொடர்ந்து நடைபெறும் என்றும் ரெயில்வே தேர்வு வாரியம் சார்பில் தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது.

சமீபத்தில் தொடர் ரெயில் விபத்துகள் நடந்த நிலையில், அனுபவமிக்க ஓய்வுபெற்ற ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் திட்டத்தை ரெயில்வே வாரியம் கையில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த உத்தரவு ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ‘ஜாக்பாட்’ போன்று அமைந்துள்ளது. ஆனால் அவர்களுக்கு முன்பு வழங்கிய சம்பளம் வழங்கப்படுமா? அல்லது புதிய சம்பளம் வழங்கப்படுமா?, சலுகைகள் மீண்டும் கிடைக்குமா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *