Tourists enjoy a blissful bath at the Courtallam Falls
13.7.2025 குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும். சீசன் காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பொழியும். இதமான தென்றல் காற்று தொடர்ந்து வீசும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் அவ்வப்போது பெய்யும் சாரல் காரணமாக மரங்களும், தாவரங்களும் பசுமையாக காணப்படும்.
குற்றாலம் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.இந்த அருவிகளில் குளிப்பதால் உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் இதனால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிந்து இரவும் பகலுமாக குளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று வார விடுமுறை என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவியத் தொடங்கினர். அவர்கள் மெயின் அருவி உட்பட அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து வருகின்றனர். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.