Police file case against actor Vijay for damaging public property during protest 15.7.2025 சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஏற்று அந்த கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் பேசினார். போராட்டத்தையொட்டி, அந்த கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்தனர். கூட்ட நெரிசலின் காரணமாக அந்த சாலையில் இருந்த தடுப்புகள் பெருமளவில் சேதமடைந்தன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திக், தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார், அரசின் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட போராட்டத்தில் பங்கேற்ற அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். வழக்கு தொடர்பாக போலீசார், இன்று முதல் தீவிர விசாரணையில் ஈடுபட உள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, சாலைக்கு நடுவே இருந்த இரும்பு தடுப்புகள் சேதமடைந்தது தொடர்பான புகாரையடுத்து சேதங்களை சீர் செய்து தருவதாக த.வெ.க. சார்பில் சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் கடிதம் தரப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி சார்பில் சிவானந்தா சாலையில் ஏற்பட்டிருக்கக் கூடிய சேதங்களை ஆய்வு மேற்கொண்ட பின்னர் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.