17.7.2025 திரைப்படத்தில் எத்தனையோ பேர் புதுமையை புகுத்தியுள்ளனர். இதில் பல ஏதார்த்தத்தை மீறியதாக இருக்கும். ஆனால் வாழ்வியலோடு கூடிய புதிய மாற்றம் என்றுமே அழியாத இலக்கியமாகும். அந்த வகையில் தற்போது புதுமையான படைப்பாக வந்திருக்கும் திரைப்படம்தான் மாயக்கூத்து. இதுவரை யாரும் கையாளாத கதை. மேலோட்டமாக பார்த்தால் இது நடைமுறைக்கு எட்டாத கற்பனை என்று தோறும். ஆனால் இது ஒருவித நோயை அடிப்படையாக கொண்டு உருவான கதை. சமூகத்தில் சிலர் வெளியே தான் யாருக்கும் எதற்கும் அஞ்சாதவன் என்று பேசுவர். ஆனால் அவர்களது உள்மனது பயந்து சாகும். இதுவே மனநோயாக மாறும். இதுபோன்ற பாதிக்கப்பட்ட இருவரை நான் கண்டிருக்கிறேன். இங்கே படத்தில் எழுத்தாளரும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்தான். கண்ணதான் "படைப்பதால் நான் இறைவன்" என்று தன் கவிதையில் சொன்றார். அதை உள்வாங்கிய நமது கதாநாயகன் எழுத்தாளர் வாசன் தான் ஓர் இறைவன் என்றே சொல்லுவார். தான் எழுதிய தொடர் கதைக்கு போக்கை மாற்றச் சொல்லும் வாசகர்களை திட்டிதீர்த்துவிடுவார். ஆனால் அவர்கள் சொன்னதன் உள்அர்த்தன் எழுத்தாளரின் மனதுக்குள் ஒருவித கலகத்தை ஏற்படுத்துகிறது. அதேநேரம் தனது "கெத்"தை விட்டுக்கொடுக்கவும் மாட்டார். ஆனால் ஒருக்கட்டத்தில் மனக்குழப்பம் மனநோயாளியாக மாற்றுகிறது. தான் எழுதிய கதையில் பரிதாபத்துக்குரிய கதாபாத்திரங்கள் நேரே வந்து நியாயம் கேட்கின்றன. மிரட்டவும் செய்கிறது. அதைக்கண்டு அஞ்சி ஓடுகிறார். அவரது ஓட்டம் அவருடை மனைவிக்கு ஒருவித அச்சத்தை கொடுக்கிறது. பிரச்சினைகளுக்கு மத்தியில் எழுத்தாளர் எப்படி மாறுகிறார்... அதாவது குணம் அடைகிறார் என்பதே கதையின் முடிவு. எழுத்தாளர்கள் பரபரப்புக்காக கதை எழுதுவதை கைவிட வேண்டும் என்பதுதான் படத்தின் மையக்கரு. பொதுவாக பிரச்சினை மையமாக கொண்டு கதை எழுதுகிறார்கள்-படம் எடுக்கிறார்கள். ஆனால் பிரச்சினைக்கான தீர்வை சொல்வது இல்லை. இதைத்தான் இந்தப்படம் கண்டிக்கிறது. குறைகளை சொல்லி கைதட்டு வாங்குவதை விட குறைகளை தீர்க்க வழி சொல்ல வேண்டும். இதை இப்படத்தின் இயக்குனர் திறமையாக கையாண்டுள்ளார். காதல் இல்லை. ஆபாசம் இல்லை. தான் எடுத்துக்கொண்ட கருவுக்கு பங்கமும் இல்லை. நீட் தேர்வை கண்டு மிரளாமல் மீண்டும் மோதி வெற்றி காண வைப்பது தன்னம்பிக்கையை காட்டுகிறது. அவசர முடிவால் ஏற்படும் விபரீதத்தை உருக்கமாக காட்டியுள்ளார். பொதுவாக சினிமாவில் வரும் சோகம் நெஞ்சை அடைக்கும். ஆனால் சினிமாவுக்குள் வரும் செல்வி கதாப்பாத்திரம்கூட கண்கலங்க வைக்கிறது. வித்தியாசமான இந்தப்படத்துக்கு அரசு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். கடைசி காட்சியில் அறிவுரை சிறப்பாக இருந்தாலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது இருக்கிறது. எழுத்தாளர் வாசனாக வரும் நாகராஜன் கண்ணன் சிறப்பாக நடித்து இருக்கிறார். பத்திரிகை ஆசிரியராக வரும் டெல்லி கணேஷ் தெரிந்த முகமாக பளிச்சிடுகிறார். ரேகா குமனன், காயத்ரி, பேராசிரியர் மு.ராமசாமி, தீனா, முருகன் கோவிந்தசாமி, பிரகதீஸ்வரன், ஐஸ்வர்யா ரகுபதி என எல்லோரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். இசை- அஞ்சனா ராஜகோபாலன்(அறிமுகம்) குறையில்லை. கதை - ஏ.ஆர்.ராகவேந்திரா மற்றும் எம்.ஸ்ரீனிவாசன் இயக்கம்-ஏ.ஆர்.ராகவேந்திரா.