August 20, 2026

Seithi Saral

Tamil News Channel

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: திமுக, அதிமுக கவுன்சிலர்களிடம் விசாரிக்க போலீசார் முடிவு

1 min read

Madurai Corporation tax fraud: Police decide to question DMK, AIADMK councilors

10.8.2025
மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் மாநகராட்சி கமிஷனர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகராட்சி பில்கலெக்டர், வருவாய் உதவியாளர், முன்னாள் உதவி கமிஷனர் என 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

பணியாளர்கள் பலர் மற்றும் தொகுப்பூதிய பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த புகாரின் கீழ் 5 மண்டல தலைவர்கள் உள்பட 7 பேர் ராஜினாமா செய்தனர். அதிமுக சார்பில் ஐகோர்ட்டு வழக்கு போடப்பட்டது. கோர்ட்டு உத்தரவின்படி ஐ.பி.எஸ்.அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு இருந்தனர்.

வரிவிதிப்புகுழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த மாநகராட்சி 51-வது வார்டு திமுக கவுன்சிலர் விஜயலட்சுமி, அவரது கணவர் கண்ணன் மற்றும் 96-வது வார்டு (ஹார்விபட்டி) ஒப்பந்த ஊழியர் செந்தில்பாண்டி ஆகியோர் கடந்த வாரம் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

அவர்களிடம் போலீசார் முறைகேடு குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதன் முடிவில் கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் மற்றும் செந்தில்பாண்டியை போலீசார் கடந்த 1-ந் தேதி இரவு கைது செய்தனர். கைதான கண்ணனிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

அவற்றில் மேயரின் கணவர், 3-வது மண்டல தலைவரின் கணவர், திமுக கவுன்சிலர்கள் 3 பேர், அதிமுக கவுன்சிலர் ஒருவர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர்களிடமும் போலீசார் அடுத்த வாரம் விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *