டெல்லியில் பேரணி சென்ற ராகுல் உள்பட எம்.பி.கள் கைது
1 min read
MPs including Rahul arrested for rally in Delhi
11.8.2025
மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற மோசடிகள் குறித்து கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரிய ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார்.
பாஜக அரசுடன் சேர்ந்துகொண்டு தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டியில் ஈடுபடுவதாகவும் கடும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன. ராகுல் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை ஆதாரங்களோடு முன்வைத்திருந்த நிலையில், அதனை தங்களிடம் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியிருந்தது.
இந்த விவகாரத்தில் ராகுலுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகளும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததைக் கண்டித்து தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி நடத்த இண்டி கூட்டணி கட்சியினர் போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால், சட்டம் ஒழுங்கு காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது.
போலீசாரின் தடையை மீறி பாராளுமன்ற வளாகத்தில் இருந்து நிர்வாச்சன் சதானில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியை தொடங்கினர். திமுக உள்பட சுமார் 25 கட்சிகளைச் சேர்ந்த 300 எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆவேசமடைந்த பிரியங்கா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எம்பிக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், தடுப்புகள் மீது ஏறிச் செல்ல அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தமிழக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர். பாலு, துரை வைகோ, சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும், பீஹார் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் செய்வதற்கு எதிராக கோஷங்களை எழுப்பனர். சமாஜ்வாதி கட்சி எம்பி அகிலேஷ் யாதவ், தடுப்புகளை எகிறி குதித்து சென்றார். தமிழக எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் தடுப்புகள் மீது ஏறி அமர்ந்து முழக்கமிட்டனர். இதனால் தலைநகர் டில்லியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
==
துணை ஜனாதிபதி தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு
புதுடெல்லி,ஆக.12-
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், கடந்த மாதம் 21-ந்தேதி, மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அவர் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.
புதிய துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9-ந்தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பாணை கடந்த 7-ந் தேதி வெளியிடப்பட்டது.
இதற்கிடையே, துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுகிறார்.
இதுகுறித்து அக்கூட்டணி வட்டாரங்கள் கூறியதாவது:-
துணை ஜனாதிபதி தேர்தல் முடிவு எப்படி வரும் என்றாலும், அந்த தேர்தலை கண்டு பயந்து ஓடாமல் போட்டியிட வேண்டும் என்று ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளிடையே பலமான கருத்து நிலவுகிறது. வலிமையான அரசியல் செய்தியை அளிக்க போட்டியிடுவது அவசியம் என்று கருதப்படுகிறது.
இதுதொடர்பாக முறையான விவாதம் நடக்கவில்லை. இருப்பினும், திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஒரு தரப்பினர், பா.ஜ.க. தனது வேட்பாளரை அறிவித்த பிறகு, நாம் வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்த பலரும் ஆர்வம் தெரிவித்துள்ளனர். ஒரு சில பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
கருத்தொற்றுமையுடன் வேட்பாளரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எதிர்க்கட்சிகளை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களில், பாராளுமன்றத்தில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக போராடி வருகின்றன. இந்த பின்னணியில், பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சி நடந்து வருகிறது.
கடந்த 7-ந் தேதி, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இல்லத்தில் ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. அதுபோல், மல்லிகார்ஜூன கார்கே இன்று ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்களுக்கு விருந்து அளிக்கிறார்.
துணை ஜனாதிபதி தேர்தலில், மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள். தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை 3 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை முறையாக இல்லாததால் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனு தாக்கலுக்கு 21-ந் தேதி கடைசிநாள். 22-ந்தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படும். மனுக்களை வாபஸ் பெற 25-ந் தேதி கடைசிநாள்.
மக்களவை, மாநிலங்களவையின் மொத்த பலம் 781. அவற்றில், துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற குறைந்தபட்சம் 391 எம்.பி.க்களின் வாக்குகளை பெற வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 எம்.பி.க்கள் உள்ளனர்.
இது இடைத்தேர்தலாக இருந்தபோதிலும், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர் முழு பதவிக்காலமான 5 ஆண்டுகளும் பதவி வகிக்கலாம்.
துணை ஜனாதிபதிக்கு போட்டியிடுபவர் இந்திய குடிமகனாகவும், 35 வயது நிரம்பியவராகவும், மாநிலங்களவை எம்.பி. ஆக தகுதி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளின் ஆதாயம் தரும் பதவி எதையும் வகிக்கக்கூடாது.
==
ஆந்திராவில் மது போதையில் அரசு பஸ்சை கடத்திய முதியவர்
திருப்பதி,ஆக.12-
ஆந்திர மாநிலம், ஒங்கோல் பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை நிறுத்தி வைத்திருந்தனர். கண்டக்டர், டிரைவர் இருவரும் சாவியை பஸ்சிலேயே விட்டு விட்டு ஓய்வு அறைக்கு சென்றனர்.
அப்போது பஸ் நிலையத்தில் மது போதையில் இருந்த முதியவர் பஸ்சில் ஏறி டிரைவர் சீட்டில் உட்கார்ந்தார்.
பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ்சை வேகமாக ஓட்டி சென்றார்.
முதியவர் பஸ்சை கடத்திச் செல்வது குறித்து பஸ் நிலையத்தில் உள்ள புறக் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் உடனடியாக வேனில் பஸ்சை விரட்டி சென்றனர்.
முதியவர் பஸ்சை தாறுமாறாக வேகமாக ஓட்டி சென்றார். பின்னர் ஒரு வழியாக ஒங்கோல்-கர்னூல் இடையே உள்ள மேம்பாலத்தில் பஸ்சை மடக்கி பிடித்தனர்.
பஸ்சில் இருந்த நபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பஸ்சை விபத்தில் சிக்காமல் ஓட்டி சென்றதால் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.
டிரைவரின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பஸ்சை மீட்ட அதிகாரிகள் அதை போக்குவரத்து பணிமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
==
மங்களூருவில்
ஓய்வு பெற்ற பெண் ஊழியரிடம் டிஜிட்டல் கைது என மிரட்டி ரூ.3 கோடி பறிப்பு
பெங்களூரு,ஆக.12-
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் ஊழியர் லெனி பிரபு. இவருடைய செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் வந்தது.
இதையடுத்து லெனி பிரபு அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அதில் பேசிய நபர், தான் சட்ட அமலாக்க அதிகாரி. உங்களது பெயரில் சீனாவிற்கு அனுப்பப்பட்ட ஒரு பார்சலில் 150 கிராம் எம்.டி.எம்.ஏ. போதை பொருள் இருப்பதாக கூறினார்.
அந்த பார்சலை கோர்ட்டில் ஒப்படைத்தால் 75 ஆண்டுகளுக்கு மேலான சிறைத்தண்டனை விதிக்கப்படும். தண்டனையில் இருந்து தப்பிக்க உங்களுக்கு தடையில்லா சான்றிதழை பெற என்னால் உதவ முடியும். அதுவரை உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளதாகவும், உங்களை விடுவிக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்குமாறு மிரட்டினார்.
இதனால் பயந்த லெனி பிரபு முதலில் ரூ.55 லட்சத்தை அந்த நபரின் கணக்கிற்கு அனுப்பினார். மொத்தம் ரூ.3.09 கோடி பல பரிவர்த்தனைகள் மூலம் அனுப்பினார்.
இதை அறிந்த அக்கம், பக்கத்தினர் டிஜிட்டல் கைது என்பது மோசடி. உங்களை ஏமாற்றி சைபர் கிரைம் மோசடி கும்பல் பணத்தை பறித்துள்ளனர் என தெரிவிக்கவே அதிர்ச்சி அடைந்த லெனி பிரபு மங்களூரு சைபர் எக்னாமிக் அண்ட் நார்கோடிக்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து திருடப்பட்ட பணத்தை மர்ம நபரின் கணக்கில் இருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சைபர் மோசடி குற்றவாளிகள் பெரும்பாலும் சி.பி.ஐ. அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் அல்லது சுங்க அதிகாரிகள் என்று காட்டிக் கொண்டு செல்போன் அழைப்புகள் மூலம் தொடர்பு கொள்வார்கள். டிஜிட்டல் கைது என கூறும் அவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
==
சலுகை விலையில் விமான டிக்கெட்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விற்பனையை தொடங்கியது
புதுடெல்லி,ஆக.12-
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ‘ஃப்ரீடம் சேல்’ டிக்கெட் விற்பனையை அறிவித்துள்ளது. அதன் உள்நாட்டு மற்றும் சர்வதேச நெட்வொர்க்கில் ரூ.1,279 முதல் சுமார் 50 லட்சம் டிக்கெட்டுகளை சலுகையில் வழங்குகிறது.
ஆகஸ்ட் 19, 2024 முதல் மார்ச் 31, 2026 வரையிலான பயணங்களுக்கு ஆகஸ்ட் 15 வரை முன்பதிவுகள் திறந்திருக்கும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விமானங்களுக்கான டிக்கெட் ரூ.1,279 முதல் தொடங்கி சர்வதேச விமானங்களுக்கான டிக்கெட் ரூ.4,279 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விற்பனை ஆகஸ்ட் 10 முதல் www.airindiaexpress.com மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மொபைல் செயலியில் தொடங்கியது. மேலும் ஆகஸ்ட் 11 முதல் 15 வரை மற்ற அனைத்து முக்கிய முன்பதிவு ஆப்களில் டிக்கெட் கிடைக்கும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் 38 உள்நாட்டு மற்றும் 17 சர்வதேச இடங்களை இணைக்கும் 500க்கும் மேற்பட்ட தினசரி விமானங்களை இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
==
தேர்தல் ஆணையம் ஒன்றும் கோர்ட் அல்ல
ப.சிதம்பரம் கடுமையான விமர்சனம்
புதுடெல்லி,ஆக.12-
தேர்தல் ஆணையம் நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான சுதந்திரமான அமைப்பு மட்டும்தான். அது கோர்ட்டு அல்ல என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது எக்ஸ் வலைதளத்தில் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கடந்த வாரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது கடந்த காலங்களில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கட்சி வாக்குகளை திருடித்தான் ஆட்சியைப் பிடித்தது.
குறிப்பாக கர்நாடகாவின் மத்திய தொகுதியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் ஓட்டுப்போட்டதாகவும், ஒருவரே 2 முறை வாக்களித்ததாகவும் ஆதாரங்களுடன் விளக்கினார்.
இந்த வாக்கு திருட்டில் பா.ஜ.க.விற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக செயல்பட்டதாகவும் தேர்தல் ஆணையத்தை கடுமையாக குற்றம் சுமத்தி பேசியிருந்தார்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க. கட்சியினரிடம் இருந்தும், தேர்தல் ஆணையத்திடம் இருந்தும் எதிர்ப்பு குரல் வந்தன. பெங்களூருவில் ராகுல் காந்தி சமீபத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையத்தின் தரவுகள் என சில ஆவணங்களை காட்டினார். அதில் ஒரு வாக்காளர் 2 முறை வாக்களித்ததாக அந்த தரவில் கூறப்பட்டுள்ளது.
தேர்தலில் போலி வாக்குப் பதிவு நடந்திருப்பது உண்மையென்றால், வாக்கு திருட்டு நடந்திருப்பது உண்மை என்றால் ராகுல் காந்தி அவரது குற்றச்சாட்டுகளுடன் உறுதிமொழி பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தேர்தல் ஆணையம் நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான ஒரு சுதந்திரமான அமைப்பு மட்டும் தான். அதற்கு நியாமான முறையில் தேர்தல் நடத்துவதற்கான பொறுப்பு உள்ளது. மாறாக கேள்வி கேட்பதற்கு அது கோர்ட்டு அல்ல.
1960-ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகள் 20(3)(பி) கீழ் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான உரிமைக் கோரலை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது குறித்த வழக்குக்கு மட்டுமே இது பொருந்தும்.
ஒரு முழு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் பட்சத்தில் இது பொருந்தாது.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் கருத்துக்கு ராகுல் காந்தியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு சரியான வாக்காளர் பட்டியல் அவசியம். தேர்தல் ஆணையத்திடம் எங்கள் கோரிக்கை தெளிவாக உள்ளது. வெளிப்படையாக இருங்கள், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிடுங்கள், இதனால் மக்களும் கட்சிகளும் அவற்றைத் தணிக்கை செய்ய முடியும்” என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.