June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

துணை ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ.க. தலைவர்கள் நாளை முக்கிய முடிவு

1 min read

Vice Presidential Election: BJP leaders to make key decision tomorrow

16.8.2025
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல் நலனை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக கடந்த மாதம் 21-ந்தேதி அறிவித்தார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை தொடங்கியது. இதற்கான தேர்தல் அட்டவணை கடந்த 7-ந்தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய செப்டம்பர் 9-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. வருகிற 21-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

மனுதாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே அவகாசம் உள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரை எதிர்த்து போட்டியிடப் போவதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் அறிவித்துள்ளனர். எனவே துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே நேரடி போட்டி உருவாகி உள்ளது.

இந்த நிலையில் புதிய துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளர்களாக யார்-யார் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. பா.ஜ.க. தலை வர்கள் கடந்த 6-ந்தேதி இது தொடர்பாக கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது துணை ஜனாதிபதியை தேர்வு செய்து அறிவிக்கும் அதிகாரத்தை பிரதமர் மோடிக்கும், பா.ஜ.க. தலைவர் நட்டாவுக்கும் வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

இந்த நிலையில் இந்தியா கூட்டணி தலைவர்களும் டெல்லியில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். இந்தியா கூட்டணியில் உள்ள 12 கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். அப்போது பா.ஜ.க. வேட்பாளரை எதிர்த்து களம் இறங்க தீர்மானிக்கப்பட்டது.

இதனால் இந்தியா கூட்டணி வேட்பாளராக எதிர்க்கட்சி தலைவர்களில் யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே பா.ஜ.க.வின் பாராளுமன்ற குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு டெல்லியில் உள்ள பா.ஜ.க. கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் மற்றும் மூத்த தலைவர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். எனவே நாளை மாலை துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவு கள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

நாளை மாலை முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டாலும் பா.ஜ.க. வேட்பாளர் யார் என்பதை பிரதமர் மோடி எப்போது வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாளை மறுநாள் அல்லது அதற்கு அடுத்த நாள் அவர் வேட்பாளர் விவரத்தை அறிவிப்பார் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்படப் போவது யார் என்பதை பார்த்து விட்டு இந்தியா கூட்டணி வேட்பாளரை அறிவிக்கலாம் என்று ராகுல் தீர்மானித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் துணை ஜனாதிபதி தேர்தலில் விறுவிறுப்பு ஏற்பட தொடங்கி உள்ளது.

இரு கூட்டணி தலைவர்களும் துணை ஜனாதிபதி தேர்தலில் ரகசியத்தை கடைபிடிப்பதால் வருகிற செவ்வாய், புதன்கிழமைகளில் டெல்லியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்படக்கூடும். 21-ந்தேதி (வியாழக்கிழமை) துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டி இருக்குமா? இருக்காதா? என்பது உறுதியாகி விடும்.

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிருக்கும் பட்சத்தில் அடுத்த மாதம் 9-ந்தேதி பாராளுமன்ற அலுவலகத்தின் முதல் மாடியில் அமைக்கப்பட்டு இருக்கும் அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு நடைபெறும். அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் அனைவரும் துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய வாக்களிப்பார்கள். இரு அவைகளிலும் பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளை விட அதிக எம்.பி.க்கள் இருக்கிறார்கள்.

எனவே பா.ஜ.க. அறிவிக்கும் வேட்பாளர் துணை ஜனாதிபதியாக எளிதில் தேர்வு செய்யப்படுவார். செப்டம்பர் 9-ந்தேதி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *