துப்பாக்கியைப் பிடித்த கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min read
Kannayairam who caught the gun/ Comedy story/ Tapasukumar
28.8.2025
கண்ணாயிரம் தனது வீட்டில் மனைவி பூங்கொடியுடன் அமர்ந்திருந்தார். அப்போது பூங்கொடிக்கு அவரது தந்தை அருவாஅமாவாசை செல்போனில் பேசினார். அவர், ஏம்மா பூங்கொடி..நான் உன் வீட்டுக்கு உன்னைப் பாக்கவந்தேன்.அவன் முட்டாப்பய கண்ணாயிரம் நான் வீட்டுக்குள்ளே வரக்கூடாதுன்னு துப்பாக்கி ஏந்திய போலீசை நிறுத்தியிருக்கான். அந்த போலீஸ் நான் வந்ததும் துப்பாக்கியை வச்சு சுடவாராரு.. நான் ஓடிவந்துட்டேன். கொஞ்சம் தூர தள்ளிநின்னு பேசுறன்.. என்னம்மா.. இது அநியாயம்..? என்று கரகரத்த குரலில் பேசினார்.
அதைக் கேட்ட பூங்கொடி, அப்பா அழாதீங்கப்பா.. ஏன் அந்த போலீஸ்காரரு உங்களை விரட்டுறாரு.. அரிவாளோட யாரும் வந்தா விரட்டுங்கன்னுதான போலீஸ்காரங்க கிட்ட உங்க மாப்பிள்ளை கண்ணாயிரம் சொல்லிட்டு வந்தாரு.. சும்மா வந்த உங்களை ஏன் போலீஸ்காரரு விரட்டுறாரு..நீங்க என்ன பண்ணுனீங்க, என்று கேட்டார்.
அதற்கு அவர்,அம்மா பூங்கொடி அந்த போலீஸ்காரரிடம் நான் கண்ணாயிரம் மாமனார் அருவாஅமாவாசை அப்படின்னு சொன்னேன். அதற்கு அவர், எப்படி நம்புறதுன்னு கேட்டாரு.. நான் உடனே மறைச்சி வச்சிருந்த அரிவாளை எடுத்து காட்டி, நான்தான் அருவாஅமாவாசை என்றேன். ஆனால் போலீஸ்காரர் என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு துப்பாக்கியை எடுத்து சுடவந்துட்டாரு.. என்று ஏங்கிஏங்கிச் சொன்னார்.
அதற்கு பூங்கொடி,அப்பா நாங்க வாசலைத்திறந்து வெளியே நிக்கிறோம். நீங்க வாங்க..போலீஸ்காரர் உங்களை ஒண்ணும் செய்யமாட்டாரு என்று சொல்ல, அவரோ, ம்..அம்மா பூங்கொடி ..இப்படித்தான் ஒரு வீட்டுக்குப் போனேன். வீட்டுமுன் நாய் கிடந்துச்சு.. அதனால நான் வீட்டுக்குள் போகப்பயப்பட்டு நின்றேன். அப்போ அந்த வீட்டுக்கார அம்மா.. பயப்படாதீங்க.. சும்மா வாங்க. .நாய் ஒண்ணும் செய்யாது அப்படின்னு சொன்னாங்க.. அதை நம்பி நான் நான் உள்ளே போனேன். நாய் ஓடிவந்து கடிச்சிட்டு. நான் அய்யோ அம்மான்னு கத்தினேன். அப்போதும் அந்த அம்மா ஒண்ணும் செய்யாது என்றார். நான் கோபத்தில், என்ன ஒண்ணும் செய்யாதீங்கன்னு சொல்லுறீங்க என்று கேட்க, ஊசி போட்டா ஒண்ணும் செய்யாது அப்படின்னு அந்த அம்மா சொல்லி சிரிச்சிது.
நானும் ஒரு ஊசி போட்டா சரியாகிடுமுன்னு டாக்கருக்கிட்ட போனேன். அவரும், ஒண்ணும் செய்யாது பதினாறு ஊசி போட்டுக்குங்க என்று சொல்லிட்டாரு. நானும் ஊசிப் போட்டுக்கிட்டேன்.. அதனால, போலீஸ்காரர் ஒண்ணும் செய்யமாட்டாருன்னு நீ சொல்லுவ.. அவர் கோபத்திலே பின்னால சுட்டுப்புட்டாருன்னா நான் என்ன செய்யுறது.. என்று கத்தினார்.
அதைக்கேட்ட பூங்கொடி, ஏம்பா நாய் மாதிரி கத்துறீங்க. உங்களை கடிச்ச நாயை அந்த வீட்டுக்காரம்மா சரியா பிடிச்சிருந்தா நாய் கடிச்சிருக்காது. அதனால நீங்க வாங்க, உங்க மருமகன் கண்ணாயிரம் இருக்காரு. அவர் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுடாமல் இருக்க, துப்பாக்கியை பிடிச்சிக்கிடுவாரு. நீங்க நேரா வீட்டுக்குள் ஓடி வந்திருங்க என்று சொன்னார்.
அவரும்,அம்மா பூங்கொடி உன்னை நம்பலாமல்ல.. கண்ணாயிரம் துப்பாக்கியை கெட்டியா பிடிச்சிக்கிடுவான்ல்ல.. அப்படின்னா நான் வர்ரேன்.. நீ வெளியே நில்லு என்று சொன்னார்.
பூங்கொடியும் சீக்கிரம் வாங்கப்பா என்றரார். கண்ணாயிரத்திடம் பூங்கொடி நடந்த சம்பத்தைக் கூறினார். ஏங்க எங்க அப்பா
.அருவாஅமாவாசை வாராரு. அவரை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுடாமல் இருக்க அந்த துப்பாக்கியை நீங்க கெட்டியா புடுச்சிக்கிடணும் சரியா என்று கேட்டார்.
கண்ணாயிரம், சரி என்றார். பின்னர் இருவரும் வாசலை திறந்து கொண்டு வெளியே வந்து நின்றனர்.
கண்ணாயிரம் வீட்டுக்கு வரும்பாதையில் போலீஸ்காரர் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அருவாஅமாவாசை அங்கே வந்தார். அவரைப் பார்த்ததும் போலீஸ்காரர் ஆத்திரம் அடைந்து, ஏய் உன்னை இங்கேவரக்கூடாதுன்னு விரட்டிவிட்டேனே மறுபடியும் வந்துட்டியா என்று துப்பாக்கியைத் தூக்கி மிரட்ட, அருவாஅமாவாசை அதை தள்ளிவிட்டுவிட்டு ஒடிவந்தார். உடனே போலீஸ்காரர், ஓடாதே நில்லு என்று அவரை துப்பாக்கியுடன் விரட்டிவர, அதைப் பார்த்த பூங்கொடி, கண்ணாயிரத்திடம், ஏங்க ஓடிப்போயி துப்பாக்கியைப் பிடிங்க என்று கத்த, கண்ணாயிரம் வேகமாக போலீஸ்காரரை நோக்கி ஓடினார். அவர் கையிலிருந்த துப்பாக்கியை மடக்கிப்பிடித்தார்.
போலீஸ்காரர் புரியாமல் தவித்தார். கண்ணாயிரம் துப்பாக்கியை விடவில்லை. அருவாஅமாவாசை வேகமாக ஓடிவந்தார்.
போலீஸ்காரர் வேகமாக கண்ணாயிரம் பிடியிலிருந்து துப்பாக்கியைப் பறித்து சுட முயல, கண்ணாயிரம் பாய்ந்து தடுக்க, டூமில் என்று ஒரு சத்தம் கேட்டது. கண்ணாயிரம் தூக்கிவீசப்பட்டு கீழே கிடந்தார்.
துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் தென்னை மரத்திலிருந்து ஒரு இளநீர் அறுந்து கண்ணாயிரம் தலையிலே விழுந்தது. அவர் அம்மா என்று கத்தினார்.
வே.தபசுக்குமார்.புதுவை.