June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் மாமனாரை மிரட்டிய துப்பாக்கி/நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

The gun that threatened Kannayiram’s father-in-law/comedy story/Tapasukumar

21.8.2025
கண்ணாயிரத்துக்கு தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதால் அவர் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒரு போலீஸ்காரர் அவரது வீட்டு முன் துப்பாக்கி ஏந்தியபடி நின்றார்.
கண்ணாயிரம் கதவைத் திறந்து மெல்ல எட்டிப்பார்த்தார். அவருக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. பூங்கொடியிடம் அவர், ஏய் பூங்கொடி நம் வீட்டுமுன் போலீஸ்பாதுகாப்பு போட்டிருக்கு பாத்தியா.. இந்த கண்ணாயிரத்தை எவனும் இனி அசைக்கமுடியாது என்று பெருமையாகச் சொன்னார்.
அப்போது ” ஏங்க..அந்த போலீஸ்காரர் தூங்கமாட்டாரா..” என்று கேட்க, அவர் தூங்கமாட்டார். விழித்தே இருப்பார்..நீ ஏன் கேட்ட..” என்று கேட்க, பூங்கொடி அதுவா போலீஸ்காரர் தூங்கின நேரத்திலே தீவிரவாதி வந்தா என்ன செய்யுறது என்று நினைத்தேன் ” என்றார்.
உடனே கண்ணாயிரம், ஏய் எனக்கு சமாளிக்கத் தெரியாதா.. போலீஸ்காரர் விழித்திருக்கும்போது வா என்று தீவிரவாதியை அனுப்பிவிடுவேன் என்றார்.
அதைக் கேட்ட பூங்கொடி ஏங்க உங்களுக்கு அறிவு இருக்கா.. போலீஸ்காரர் தூங்கிறதைப் பாத்துதான தீவிரவாதியே வருவான். அவன்கிட்ட போயி நாளைக்குவா என்று சொன்னால் உங்களை அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிடுவான். அதனால போலீஸ்காரிடம் போங்க, சார் தூங்கிறாதீங்க. அரிவாளோடு யார் வந்தாலும் விடாதீங்க. துப்பாக்கியால சுடுங்க என்று சொல்லிவிட்டு வாங்க என்று சொல்ல, கண்ணாயிரம் வீட்டுமுன் நின்ற போலீஸ்காரரை நோக்கி விரைந்தார்.

இந்தா பாருங்க சார். தூக்கம் வந்தா தூங்கிடாதீங்க..அரிவாளோடு யார் வந்தாலும் விடாதீங்க. துப்பாக்கியால சுட்டுருங்க என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் வந்தார்.
பூங்கொடியிடம் அவர், ஏய் போலீஸ்காரரிடம் விளக்கமாகச் சொல்லிட்டேன். இனி பயம் இல்லை என்றார்.
அவரிடம் பூங்கொடி, ஏங்க எனக்கு வயிறு பசிக்குது. தோசை சுடப்போறேன். அரிசி மாவும் இருக்கு.. கோதுமை மாவும் இருக்கு. உங்களுக்கு எந்த மாவு தோசை வேணும் என்று கேட்க, கண்ணாயிரம் உடனே, எனக்கு அரிசி மாவு தோசை வேணும் என்றார்.
பூங்கொடியும் சரி,சரி என்றபடி சமையல் அறைக்குள் போனார். தோசை சட்டியை சூடுபடுத்தினார்.
தோசை சட்டியில் கோதுமை மாவை ஊற்றினார். அதைப்பார்த்த கண்ணாயிரம், அது என்ன மாவு என்று கேட்க, பூங்கொடியோ, கோதுமை மாவு என்றார்.
கோதுமை தோசை கண்ணாயிரத்துக்குப் பிடிக்காது. எனவே அது வேண்டாம் என்று நினைத்தார். பூங்கொடிக்கோ கோதுமை தோசைதான் பிடிக்கும். எனவே அவர் தனக்குப் பிடித்த கோதுமை மாவை சட்டியில் ஊற்றி தோசை சுட முயன்றார்.

இந்த நேரத்தில் கண்ணாயிரத்தின் மாமனார் அருவா அமாவாசை கண்ணாயிரம் வீட்டுக்கு ஆட்டோவில் வந்து இறங்கினார். கண்ணாயிரம் வீட்டுமுன் துப்பாக்கி போலீஸ் நிற்பதைப் பார்த்து திடுக்கிட்டார்.
நம்ம மருமகன் வீட்டுக்கு நாமப் போறோம்.. யாருக்கிட்ட அனுமதி கேட்கணும் என்றபடி கண்ணாயிரம் வீட்டு வாசலை நெருங்கினார். அங்கே பாதுகாப்புக்கு நின்ற போலீஸ்காரர் அவரிடம், யோவ் யார்யா நீ என்று கேட்டார். அதற்கு அவர் நான் அருவா அமாவாசை. கண்ணாயிரம் மாமனார் என்றார்.
அதைக் கேட்ட போலீஸ்காரர், உம்ம எப்படி நம்புறது என்று கேட்டார்.
உடனே அருவாஅமாவாசை கோபம் அடைந்தார்.நான்தான் அருவாஅமாவாசை..சந்தேகமாக இருக்கா. இன்னாபாரும் அருவா என்று தான் மறைத்துவைத்திருந்த அருவாளை எடுத்து போலீஸ்காரரிடம் காட்டினார்.
அதைப்பார்த்த போலீஸ்காரர் திடுக்கிட்டார். அருவாளோடு யார்வந்தாலும் சுடு என்று கண்ணாயிரம் சொல்லியிருக்கார். முட்டுக்கு கீழே சுட்டுற வேண்டியதுதான் என்று துப்பாக்கியைத் தூக்கினார்.
அருவாளோடு நின்ற அருவாஅமாவாசையை சுட குறிபார்த்தபோது அவர் அய்யோ அம்மா என்று அலறினார்.
வீட்டுக்குள்ளே பூங்கொடி கோதுமை தோசை சுடுவதைப்பார்த்த, கண்ணாயிரம் கோபத்தில் சுடாதே..சுடாதே என்று கத்த, பூங்கொடியோ சுடுவேன்..சுடுவேன் என்று கத்தினார்.
கண்ணாயிரம் ஆத்திரத்தில்,சுடாதே என்று வேகமாக கத்த, வெளியே அருவாஅமாவையைச் சுட குறிபார்த்த போலீஸ்காரருக்கு இந்த சத்தம் கேட்டது. என்ன அருவாளோடு யாரும் வந்தா சுடச் சொன்ன கண்ணாயிரம் இப்போ சுடாதே,சுடாதே என்று கத்துகிறார். ஒண்ணுமே புரியலையே என்று விழித்தார். எதுக்கும் அவரிடமே கேட்போம் என்று போலீஸ்காரர் கதவைத் தட்டினார்.
கண்ணாயிரம் கதவைத்திறந்து, என்ன என்று கேட்க, போலீஸ்காரர் அவரிடம், அருவாவுடன் யார்வந்தாலும் துப்பாக்கியால சுடும்படி சொன்னீங்க. இப்போ அருவாளோடு வந்த ஒருவரை துப்பாக்கியால் சுடப்போனேன். சுடாதே , சுடாதேன்னு சொல்லுறீய.. என்று கூற, கண்ணாயிரமோ, ஏங்க..கோதுமை தோசையை என்மனைவி சுடப்போனா..அந்த தோசை எனக்குப் பிடிக்காது. அதான் சுடாத..சுடாதன்னு சொன்னேன். நீங்க அருவாளோடு யார் வந்தாலும் சுடுங்க என்று சொல்ல, அருவாஅமாவாசையை போலீஸ்காரர் சுட முயல, அருவாஅமாவாசை பயந்து போய், மாப்பிள்ளை காப்பாத்துங்க..காப்பாத்துங்க என்றபடி ஓட, போலீஸ்காரர் துரத்திக்கொண்டு ஓடினார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *