June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

காத்திருப்போர் பட்டியல் அதிகரிப்பதால் முக்கிய ரெயில்களில் கூடுதல் பெட்டிகள்

1 min read


Waiting list increase echoes: Additional coaches added to major trains

28.8.2025
தமிழகம் மற்றும் கேரள ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பதிவு பெட்டிகளில் இடம் கிடைக்காமல், காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதனால், முக்கிய ரெயில்களில் குறிப்பிட்ட நாட்களுக்கு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதனால், காத்திருப்போர் பட்டியலில் இடம்பிடித்தவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட படுக்கைகள் கிடைக்கும். இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தாம்பரம் – செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட இருக்கிறது. அந்த வகையில், தாம்பரத்தில் இருந்து வரும் 29 (நாளை), 30, 31 ஆகிய தேதிகளில் புறப்படும் ரெயிலில் 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்று, 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி 2, தூங்கும் வசதி பெட்டி 3 ஆகியவை கூடுதலாக இணைக்கப்படுகின்றன. இதேபோல், செங்கோட்டையில் இருந்து சென்னை வரும் ரெயிலில் 30, 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இதேபோல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

மேலும், தாம்பரம் – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரெயிலில் (வண்டி எண் 22657/22658), தாம்பரத்தில் இருந்து 29, 30, 31 ஆகிய தேதிகளில் ஒரு 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி, 2 மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டி, 3 தூங்கும் வசதி பெட்டி, ஒரு பொதுப் பெட்டி ஆகியவை இணைக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து இயக்கப்படும் ரெயிலில் 30, 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இதேபோல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

இதேபோல், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் – திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரெயிலில் (12695/12696), சென்னை சென்டிரலில் இருந்து 31, செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் கூடுதலாக 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து செப்டம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது. இதேபோல், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் – ஆழப்புலா அதிவிரைவு ரெயிலிலும் (22639/22640) இன்று முதல் 3 நாட்கள் கூடுதலாக ஒரு 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி இணைக்கப்படுகிறது.

அதேபோல், கோவை – ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16618/16617) செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 29 வரை கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *