புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
1 min read
Sabarimala Ayyappa Temple opens for Purattasi month puja
17.9.2025
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை மாலை 5 மணிக்கு திறந்து வைத்தார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி முதல் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், நெய்யபிஷேகம், படி பூஜை உள்பட அனைத்து பூஜைகள் நடைபெற்றது. 5 நாள் நடைபெறும் சிறப்பு பூஜை, வழிபாடுகளுக்கு பிறகு 21-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
முன்னதாக 20-ந் தேதி திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் பம்பையில் சர்வதேச அய்யப்ப பக்தர்கள் சங்கமம் நடைபெற உள்ளது. அதனை அன்று காலை 10.30 மணிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்.
அய்யப்ப பக்தர்கள் சங்கமம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் கூறியதாவது:-
அய்யப்ப பக்தர்கள் சங்கமத்திற்கான முன்பதிவு 15-ந் தேதியுடன் முடிவடைந்தது. மொத்தம் விண்ணப்பித்த 4,865 பேரில் முதலில் விண்ணப்பித்த 3 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் தவிர தென்மாநில மந்திரிகள், முக்கிய பிரமுகர்கள் இந்த சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.