மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சூரிய மின்வேலி – அகழிகள் அமைக்க திட்டம்
1 min read
Plan to construct solar electric fences and trenches at the foothills of the Western Ghats
27.9.2025
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார வனப்பகுதியிலிருந்து வெளியேறும் வனவிலங்குகள் குறிப்பாக காட்டுயானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாகவும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட வன அலுவலரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து அதனைத் தடுக்க தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்ட வன அலுவலரின் பிரேரணை மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரின் பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு இவ்வாண்டு தென்காசி மாவட்டத்தில் வன எல்லை பகுதியில் 20 கி.மீ சூரிய மின்வேலியும் 8 கி.மீ யானை புகா அகழிகள் அமைக்கவும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசாணை எண்.183 நாள்:26.072025-ன்படி நிதி ஒதுக்கீடு சிறப்பு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு டெண்டர் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணி மார்ச் 2026-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடையநல்லூரை ஒட்டியுள்ள பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டுயானைகளை உடனடியாக காட்டிற்குள் திரும்ப அனுப்ப சிறப்பு பயிற்சி பயிற்சி பெற்ற குழுவினர் மூலம் யானைகள் மற்றும் வன உயிரின் நடமாட்டப்பகுதிக்கு அனுப்பபட்டு தொடர் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
சிவகிரி. புளியங்குடி, கடையநல்லூர். செங்கோட்டை தென்காசி மற்றும் ஆலங்குளம் வனச்சரகங்களிலும் வன பணியாளர் குழுக்கள் அந்தந்த பகுதிகளில் வன விலங்குகள் வன எல்லையை விட்டு வெளியேறா வண்ணம் தடுப்பு பணியில் இரவு பகலாக சூழற்சி முறையில் நியமிக்கப்பட்டு யானைகள் நடமாட்டப்பகுதியில் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மேற்படி பணியை மாவட்ட வன அலுவலர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார் மேலும் வெவ்வேறு திட்டங்களில் சோலார் மின்வேலி அமைக்கவும், யானைகள் அகழிகளை பராமரிக்கவும், வன எல்லைப் பகுதியை கலச்சிக்காய் நடவு செய்து உயிர்வேலி அமைக்கவும். வன பணியாளர்களின் எண்ணிக்கையை பெருக்கவும், வனஉயிரினங்கள் மீட்பு பணிக்காக கூடுதல் முன்களப்பணியாளர்களை ஒதுக்கீடு செய்ய கேட்டும் வெவ்வேறு திட்டத்தில் ரூ.3 கோடி 39 இலட்சம் அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு எவ்வித இடையூறுமின்றி முழு அளவில் வனத்துறை சார்பில் அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்படும் இதற்கு விவசாயிகள் தங்களது குறைகளை நேரடியாகவும் மற்றும் எழுத்து மூலமாகவும் மாவட்ட வன அலுவலர், தென்காசி வனக்கோட்டம், காலாங்கரை செங்கோட்டைஎன்ற முகவரிக்கும் அல்லது தென்காசி மாவட்ட வன அலுவகை மின்னஞ்சல் முகவரி: tenkasidfo@gmailcom மூலமாக தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.