June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

கலைஞர் பல்கலை மசோதா விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

1 min read

Kalaignar University Bill Issue: Tamil Nadu Government files case against Governor in Supreme Court

4.10.2024
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் நிறுவுவது என அரசால் முடிவு செய்யப்பட்டு, அதற்காக சட்டப் பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில், கலைஞர் பல்கலைக்கழக மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
சட்டப் பேரவை கூட்டத் தொடரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதனை திமுக கூட்டணி கட்சிகளும் வரவேற்றன. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 28 ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, ”கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.

மேலும் அவர், ”டெல்டா மாவட்ட இளைஞர்களின் உயர்க்கல்வி தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், பின்தங்கிய பகுதி மாணவர்கள் அதிக அளவில் உயர்க்கல்வி பயிலும் வாய்ப்பை உருவாக்கவும் கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டியது அவசியமாகிறது” என்று தெரிவித்தார்.

அதையடுத்து, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை பிரித்து கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் என்ற புதிய பல்கலைக்கழகம் உருவாக்க சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

கலைஞர் பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாநில முதலமைச்சர் இருப்பார். பல்கலைக்கழகத்தின் தலைவராகவும், பட்டமளிப்பு விழா உள்ளிட்டவற்றில் தலைமை வகிப்பவராகவும் இருப்பார். வேந்தரின் அனுமதியின்றி கௌரவ பட்டங்கள் வழங்க முடியாது. பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராக உயர்க்கல்வித்துறை அமைச்சர் செயல்படுவார்.
துணைவேந்தர் தேடல் குழுவில் வேந்தரின் பிரதிநிதியாக உச்ச நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, அரசு பிரதிநிதியாக ஒரு கல்வியாளர் அல்லது முதன்மைச் செயலாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி, சிண்டிகேட் பிரதிநிதியாக மாநில அல்லது மத்திய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட கல்வியாளர்கள் இடம்பெறுவர்.

இந்த குழுவால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படும் மூவர் பட்டியலில் இருந்து துணைவேந்தரை வேந்தர் நியமிப்பார். கலைஞர் பல்கலைக் கழகத்தின் கீழ் கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், அரியலூர், திருவாரூர் பகுதிகளை சேர்ந்த கல்லூரிகள் வரும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே வேந்தராக தமிழ்நாடு ஆளுநர் இருந்து வந்தார். அதற்கு பதிலாக மாநில முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என திருத்தம் செய்து அனுப்பிய பல்கலைக்கழக மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

மேலும் தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவிற்கும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். ஏற்கனவே மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் செய்வது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை குடியரசு தலைவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார். ஆனால் இதுவரை குடியரசு தலைவரும் ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்த நிலையில் கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த மனுவில் தமிழக அரசு, “கவர்னர் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டப்பேரவை முடிவுக்கு எதிரானது” என்று தெரிவித்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *